தொடர்கள்
விளையாட்டு
ஐ பி எல் நல்லதா கெட்டதா ?? லண்டனிலிருந்து கோமதி

20260304053004427.jpeg

மூன்று மணி நேர சினிமா எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி இன்று இரண்டு நிமிட ரீல்ஸாக உருமாறி உள்ளதோ அதைப் போன்றே இந்த விளையாட்டும் மாறி உள்ளது. இன்றைய தலைமுறையின் ஓட்டத்திற்கேற்ப இந்த விளையாட்டும் மாறி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப் பட்ட இந்த டி20 கிரிக்கெட் இந்த அளவு வெற்றி பெறும் என்பதை நிச்சயம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்தப் போட்டியை சுற்றி உருவாகி இருக்கும் வியாபாரமும், அதன் மூலம் உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகளும் பதினைந்து முதல் இருபது மைதானங்கள் இந்தியாவில் மட்டும் புதிதாக கட்டப்பட்டதற்கு காரணம்.

இங்கு நடக்கும் கிரிக்கெட் விளையாட்டுகள் நமது உள்நாட்டு வருமானம் உயர்வதற்கு உறுதுணை செய்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. இந்த விளையாட்டு நடைபெறும் இரண்டு மாதமும், சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு விளையாட்டையும் விமர்சிக்கும் சேனல்களும் பெருகியுள்ளன. இவை அனைத்தையும் தாண்டி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய மக்களின் மிக முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறியுள்ளது. பல மாநிலங்களில் இருந்து திறமையாக விளையாடும் பல வீரர்களுக்கு வாய்ப்பையும் பெருகியுள்ளது .

இவ்வளவு நன்மைகள் இருந்தும், கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர்கள் இந்த வகை விளையாட்டை வரவேற்கிறார்களா என்பது கேள்விக்குறியே. ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் திறமையை மட்டும் சோதிக்காமல், அவர்களது மன உறுதியையும் சோதிக்கும் வகையில் அமைந்திருந்தது. இன்று இந்த ஐபிஎல் விளையாட்டில் வீரர்கள் அதிக ரன்கள் எடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு விளையாடி வருகின்றனர். இது பந்து வீச்சாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதோடு, அதிக ரன்கள் எடுப்பதற்கு ஏதுவாகவே மைதானங்களும் அமைக்கப்படுகின்றன.

இந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. இன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் வீர்கள் சர்வதேச அரங்கில் தங்களது திறமையை வெளிக்காட்டிய பின்பே ஐபிஎல் விளையாட அராம்பித்துள்ளனர். விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா இல்லாத இந்திய அணி எவ்வளவு தூரம் சர்வதேச அரங்கில் சாதிக்க உள்ளனர் என்பதை நாம் பொருத்திருந்து தான் காண வேண்டும்.

சிஎஸ்கே அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லுவார்களா என்று பார்ப்போம் என நீங்கள் கேட்பது புரிகிறது.?? இன்னும் நிறைய தூரம் இருக்கிறது. பொறுங்கள் !!