தொடர்கள்
பொது
செந்துகிலும், வெண்துகிலும் - மரியா சிவானந்தம்

20260301174854590.jpg

பிறப்பு முதல் இறப்பு வரை ஆடைகள் இன்றி மனித வாழ்வு இல்லை. நாம் அணியும் உடையே நாம் யார் என்பதை உலகுக்கு அடையாளம் காட்டுகிறது .

இயேசுவின் சிலுவைப்பயணத்தில் துணிகள் அல்லது துகில்கள் முக்கிய பங்கு பெறுகின்றன. அவர் உடுத்திய உடைகள் மற்றும் அச்சிலுவைப் பயணத்தில் விரிக்கப்பட்ட , போர்த்தப்பட்ட, களையப்பட்ட, சுருட்டப்பட்ட, கிழிக்கப்பட்ட ஆடைகள், துணிகள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

உயிர்ப்புத் திருநாளுக்கு முன் வரும் புனித வாரத்தின் முதல் நாள் குருத்து ஞாயிறு அன்று இயேசு கழுதையின் மேல் ஏறி ,எருசலேம் நகருக்குள் பிரவேசிக்கிறார். அவரைச் சுற்றி ஏராளமான மக்கள் கையில் குருத்தோலைகளையும், மரக்கிளைகளையும் ஏந்தி 'ஓசன்னா 'என்று முழக்கமிட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் .அப்போது கழுதையின் மேல் விலை உயர்ந்த ஆடைகளை விரிக்கின்றார்கள். அவர் செல்லும் வீதிகளில் தங்கள் மேலாடைகளைத் தரையில் பரப்பி அழைத்துச் செல்கிறார்கள். அன்பின் மிகுதியால் அந்த ஆடைகள் அழகு பெறுகின்றன .

20260301174441255.jpg

நான்கு நாட்களுக்குப் பின் காட்சி மாறுகிறது .

இயேசுவை வரவேற்ற யூதர்கள் அவரைக் கைதியாக பிடித்து பிலாத்துவின் அரண்மனைக்கு அழைத்து வருகின்றனர் . அங்கு அவருக்கு செந்நிற ஆடையைப் போர்த்தி தலையில் முள்ளால் ஆன கிரீடத்தை அவருக்குச் சூட்டி "யூதர்களின் அரசே வாழி" என்று ஏளனம் செய்து அடித்தனர். செந்நிறம் அரசருக்கான நிறம். பகடி செய்ய உடுத்தினாலும் அந்த செந்துகில் இயேசுவை அரசரென காட்டும் அடையாளம்.

2026030117435695.jpg

கல்வாரி மலையின் பாதையில் இயேசு சிலுவை சுமந்துப் போகிறார். வீரர்கள் சாட்டை கொண்டு அவரைக் கொடுமையாக தாக்க , அவரது தலையில் வைத்த முள்முடி அழுத்த முகமெல்லாம் ரத்தம், உடல் எல்லாம் காயம். அவரது கோலம் யாரையும் மனம் இரங்க செய்கிறது. அவரைப் பின் தொடர்ந்து அழுதுக் கொண்டு வந்த பெண்கள் கூட்டத்தில் இருந்து வெரோனிகா என்னும் பெண் அவர் முன் வந்து அவர் முகத்தை ஒரு வெண்துகிலால் துடைக்கிறாள். அத்துணியில் இயேசுவின் முகம் புகைப்படம் போல படிகிறது. அந்தத் துணி இன்றும் ரோமில் செயின்ட் பீட்டர் ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. கருணை மிக்க தாய்மை உணர்வுக்கு கைமேல் பரிசு, காலம் அழிக்காத, கைகளால் தீட்டப்படாத துகில் ஓவியம் .

20260301173232547.jpg

மூன்று மணி அளவில் மலை உச்சிக்கு வந்த இந்த இயேசுவை ஆணி கொண்டு சிலுவையில் அறைகிறார்கள் யூத வீரர்கள். அவர் உடலில் உடுத்தி இருந்த ஆடைகளை, காயங்களில் இருந்து உரித்து எடுக்கிறார்கள். அவரது ஆடை சிறப்பு வாய்ந்தது . அது அவர் சிறுவனாக இருந்த போது அன்னை மரியாள் கையால் நெய்து அணிவித்த ஆடை . தையல் இல்லாமல் நெய்யப்பட்ட அந்த உடை அவர் வளர, வளர அந்த உடையும் வளர்ந்ததாக சொல்லப் படுகிறது அவரது ஆடையைத் தொட்டவர்களும் நோய் நீங்கி குணம் பெற்றனர்.

அத்தகைய அற்புதமான ஆடைகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள வீரர்கள் முடிவெடுத்து, அதைக் கிழிக்காமல் சீட்டு போட்டு குலுக்கி நால்வரும் எடுத்துக் கொண்டனர். இறைவனின் வல்லமையைக் காட்டும் துணியாக பல அற்புதங்களை அது நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது.

20260301173322475.jpg

இயேசு சிலுவையில் உயிர் விட்டதும், மண்ணும் விண்ணும் அதிர்ந்தது. பாறைகள் பிளந்தன. பூமி எங்கும் இருள் சூழ்ந்தது. அப்போது ஜெருசலேம் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரை கிழிந்து தொங்கியது .இயேசு ஒரு தேவகுமாரன் என்பதற்கு சாட்சியாக இயற்கை அதிர்ந்திட திரைசசீலை கிழிந்ததும் நடந்தது .

20260301173416887.jpg

அன்று மாலையில், இயேசுவைச் சிலுவையில் இருந்து இறக்கி கல்லறையில் அடக்கம் செய்ய அரிமத்தேயு ஊரைச் சேர்ந்த சூசை என்பவர் அனுமதி பெற்று தனக்கென வைத்திருந்த புதிய கல்லறையில் அடக்கம் செய்தார் . அப்போது யூத முறைப்படி நீண்ட வெண்ணிற கோடித்துணியால் அவர் உடலைச் சுற்றி வாசனை திரவியங்களைப் பூசி கல்லறையில் வைத்தார்.

மரித்த இயேசு உயிர்த்தார்

மூன்றாம் நாள் இயேசு உயிர்த்த பின்னர் அவர் உடலைச் சுற்றி வைத்த துணி கல்லறையில் ஒருபுறம் மடித்து வைக்கப்பட்டிருந்ததை அவரது சீடர்கள் கண்டனர்.

20260301173505275.jpg

கோடித்துணி (The Shroud) எனப்படும் இத்துணி இன்னும் ரோமில் தூரின் நகரில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது .4.4 மீட்டர் அளவுள்ள இந்த லினன் துணியில் இயேசுவின் பிம்பம் இருக்கிறது. இப்புனித துணிக்கு கிறிஸ்துவர்கள் மிகுந்த மரியாதையுடன் வணக்கம் செலுத்துகிறார்கள்.

கிறிஸ்துமஸ் விழாவைப் போலவே உயிர்ப்புத் திருவிழா என்னும் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகையாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . விபூதி புதன் அன்று தொடங்கும் தவக்காலம் ஈஸ்டர் அன்று நிறைவு பெறுகிறது . இந்த தவக்காலம் முழுவதும் இயேசு மனுகுலத்துக்காக சிலுவையில் அறையப்பட்டு , மரித்து அடக்கம் செய்யப்பட்டதையும், பின் உயிர்த்தெழுந்ததையும் நினைவு கூறுகிறோம்.

அறக்கடல் நீயே! அருட்கடல் நீயே! அருங்கரு ணாகரன் நீயே!

திறக்கடல் நீயே! திருக்கடல் நீயே! திருந்துளம் ஒளிபட ஞான

நிறக்கடல் நீயே! நிகர்கடந் துலகின் நிலையுநீ! உயிருநீ! நிலைநான்

பெறக்கடல் நீயே! தாயுநீ! எனக்குப் பிதாவுநீ! அனைத்து நீயேயன்றோ?”

(தேம்பாவணி )

அனைவருக்கும் உயிர்ப்புத் திருநாள் வாழ்த்துக்கள் !