
ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை கையில் அள்ளிக்கொண்டு ஆட்டோவில் இருந்து இறங்கி எந்தப்பக்கம் போவது என்று வழியை தேடிக் கொண்டிருந்தோம். மூன்று மாதங்களாக அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனை மருத்துவமனையாக ஏறிஇறங்கிக் கொண்டிருக்கின்றோம். மெதுவாய் கீழே இறங்கிய அம்மா கண்களை மூடி குலசாமி காத்தாயி அம்மனையும் வீச்சரிவாள் முனீஸ்வரனையும் மனசுக்குள் நிறுத்தி வணங்கி, நல்ல நேரத்தைப் பார்த்து விட்டு உள்ளே அடியெடுத்து வைத்தது.
“எங்கே போகணும் அய்யா?“ - முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஜீன்ஸ் பேண்டும் ப்ராண்டட் டி-சர்ட்டும் குறுந்தாடியும் அகன்ற கண்ணாடியுமாய் எதிரே வந்து கேட்டார்.
“ரேடியேஷன் ஆ.ன்.கா.ல.ஜி…” என்று இழுத்தேன் சந்தேகப் பார்வையோடு.
“வாருங்கள் நான் அழைத்துச் செல்கிறேன்” என்றபடி எங்களுக்கு முன்னால் நடந்தார் அந்த தம்பி.
மருத்துவமனையின் பிரதானக் கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்தது கதிரியக்க சிகிச்சை மையம். லிப்டை நிறுத்தி, திறந்து மூடி பொறுமையாய் எங்களை அழைத்துச் கொண்டு ரிசப்ஷன் டெஸ்க் வரை கூடவே வந்தார்.
“நீங்கள் …?” என்றேன் புருவத்தை உயர்த்தி.
“என் பெயர் பாலன்.. ஏதாவது உதவி தேவையென்றால் என்னைக் கூப்பிடுங்கள்” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
புகழ் பெற்ற அந்த மருத்துவமனையின் பிரபலமான கதிரியக்க சிகிச்சை மையம், தரைதளத்திற்கு கீழே அதிநவீன கருவிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் உள்ளறைக் கண்ணாடிக் கதவுகள் முழுவதும் கதிரியக்க எச்சரிக்கை வாசகங்கள்.
ரிசப்ஷனில் எங்கள் பைலை வாங்கி, முன்பதிவு இருக்கிறதா என்பதை சரி பார்த்த பெண்மணி, “வெயிட் பண்ணுங்க… டாக்டர் வந்ததும் கூப்பிடுகிறோம்” என்றார் கனிவான குரலில்.
விசாலமான காத்திருப்புக் கூடத்தில் ஏற்கனவே சுமார் இருபது பேர் அமர்ந்திருந்தனர். அதில் நான்கைந்து ஹிந்திக்காரர்களும் சில வெளிநாட்டவரும் தென்பட்டனர். இடதுபுற பின் வரிசையில் உட்கார இடமிருந்தது. நானும் அம்மாவும் சென்று அமர்ந்தோம். முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை. அறை முழுவதும் வருத்தம் தோய்ந்த நிசப்தம். காத்திருப்பவர்கள் முகங்களில் டன் கணக்கில் இறுக்கம். “மரணத்தின் வாயில்” என்பதை நோயுற்றவர்களின் முகங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ரேடியோதெரபி என்பது புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை. புற்றுநோய் நவீன மருத்துவ விஞ்ஞானத்திற்கு இன்னும் பிடிபடாத விஷயம். உடலில் சில இடங்களில் சமர்த்தாக இருந்த செல்கள் திடீரென அசுர வேகத்தில் வளர்ந்து பெருகி பேயாட்டம் ஆடும் சங்கதி. மெதுவாய் அந்த செல்களை மந்திரித்து கட்டுக்குள் அடக்கி வைக்கும் மாயாஜால மருத்துவம். அடங்க மறுக்கும் செல்களுக்கு சம பேத தான தண்ட வரிசையில் நான்காம் நிலைதான் ரேடியேஷன்தெரப்பி சிகிச்சை முறை.
நோயாளிகள் ஒவ்வொருவராய் வரிசைப்படி செவிலியர்கள் கதிரியக்க உள்ளறைக்குள் அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு நாளும் அரை மணி நேர சிகிச்சைதான். ஆனாலும் சிகிச்சை முடிந்து துவண்டு போன கீரையாய் அவர்கள் வெளியே வருவதைப் பார்க்கவே சகிக்கவில்லை.
ஜீன்ஸ் பாலன் கைத்தாங்கலாய் முதியவர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து இருக்கை தேடி அமர வைத்தார். பெரியவர் தண்ணீர் வேண்டுமென சைகை செய்ய, பாலன் விரைந்து போய் அருகில் இருந்த டிஸ்பென்சரில் வெது வெதுப்பான வெந்நீர் பிடித்து வந்து பெரியவரின் கைகளில் கொடுத்தார். பெரியவருக்கு துணையாக வந்திருந்த அவரது மனைவிக்கு வயது எழுபதை நெருங்கலாம். தள்ளாடியபடியே ரிஷப்சனிஸ்ட்டிடம் பைலை கொடுக்க சென்றது.
பெரியவருக்கு வலதுபுற தாடைக்கும் கழுத்திற்கும் இடையே ஆப்பிள் சைசில் கட்டி இருந்தது. தள்ளாத முதுமையில் இப்படிப்பட்ட வியாதி யாருக்கும் வரக்கூடாது. நோயை விட நோய்க்கான சிகிச்சை கொடூரமானது. பெரியவரின் மொபைலில் மணியடித்தது. வீடியோ காலில் அமரிக்காவிலிருந்து அவரது மகன் அரைகால் ட்ரௌசரில் தோன்றினார். சலிப்பாய் போனை பாலனிடம் நீட்டினார் பெரியவர்.
“ஆஸ்பிட்டலுக்கு வந்துட்டாங்க சார்… ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் டாக்சி பிடிச்சு பத்திரமா வீட்டுக்கு அனுப்பிச்சுடுறேன் .. கவலைப்படாதீங்க…” பாலனின் ஆதரவுக்குரலை காத்திருக்கும் எல்லோரும் கேட்க முடிந்தது.
லன்ச் பையை ஒரு கையிலும், தண்ணீர் பாட்டிலை இன்னொரு கையிலும் எடுத்துக் கொண்டு சீஃப் ரேடியாலஜிஸ்ட் உள்ளே வந்து கொண்டிருந்தார். ஐந்தடி உயரமும் பருமனான உடல்வாகும் தலையை வலது பக்கம் சாய்த்து பார்க்கும் பார்வையும் கொண்ட அவரைக் கண்டதும் மொத்த கூடமும் சுறுசுறுப்பானது. ரிஷப்ஷனிஸ்ட்டிடம் நின்று விசாரித்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டார்.
பொதுவாக இங்கு பணிபுரியும் செவிலியர் முதல் அட்டெண்டர் வரை அனைவரிடமும் வழக்கத்திற்கு மாறான கனிவும் பரிவும் காண முடிந்தது. “இன்றிருப்பார் நாளையில்லை” என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை அனுபவப்பூர்வமாய் அநுதினமும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா இவர்கள்.
வாசற்பக்கம் மீண்டும் பாலன். இப்போது நடக்க முடியாத நடுத்தர வயது பெண்மணியை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வந்தார். “உங்கள் டர்ன் வர நேரமாகும். பசித்தால் சொல்லுங்கள். சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்” என்று பாலன் குனிந்து அந்த அம்மணியின் காதருகில் சொன்னார்.
சற்று நேரத்தில் டாக்டர் எங்களை அழைக்க அறைக்குள் சென்றோம். பைலைப் படித்துவிட்டு பிறகு எங்களைப் பார்த்தார். “ பதினைந்து அமர்வு கதிரியக்க சிகிச்சை கொடுக்க வேண்டும்“ என்றார்.
“வாரத்தில் ஐந்து நாட்கள் தொடர்ந்து ரேடியேஷன் தரப்படும், அடுத்து இரண்டு நாட்கள் ஓய்வு. அதைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் சிகிச்சை, இப்படியாய் பதினைந்து அமர்வுகள் வர வேண்டும்” என்று விளக்கினார்.அம்மாவுக்கு பயத்தில் கைகள் நடுங்கின. இன்னும் எத்தனை கொடுமைகள் பாக்கி இருகிறது என்று என்னைப் பார்த்துக் கேட்பதாய் தோன்றியது.
“ஒன்றும் பயப்படாதீங்க.. நல்லா ஆகிடுவீங்க..” என்றார் டாக்டர் அம்மாவின் பயத்தைப் போக்க. செவிலியர்களிடம் சொல்லி அம்மாவை மோல்டு எடுக்கும் அறைக்கு அழைத்து செல்ல சொன்னார். என்னைப் பார்த்து “நீங்கள் வெளியே வெயிட் பண்ணுங்க.. அரை மணி நேரமாகும்” என்றார்.
நான் படிக்கட்டு வழியே கட்டிடத்திற்கு வெளியே வந்தேன். பாலன் தம்பி யாருக்கோ ஓலா டாக்சியை உள்ளே அழைத்து வர ஓடிக்கொண்டிருந்தார். “யாரிந்த பாலன்?” என்கிற கேள்வி மனதுக்குள் துளித்து எழுந்தது.
அருகில் நின்ற செக்யூரிடியிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்.
“அதுவா சார்.. அந்த தம்பி வருசா வருசம் இங்கே வந்து வயசான கேன்சர் நோயாளிகளுக்கு வாலண்டியரா உதவி செய்யும்.. ஆஸ்திரேலியா நாட்டில பெரிய இன்ஜீனியர் உத்யோகம். அஞ்சு வருஷமா தவறாம வந்து இறங்கிடுது.. தங்கமான மனசு சார்..”
பேசிக்கொண்டிருக்கும் போதே வேகமாய் சைரன் ஒலித்துக் கொண்டு வந்து நின்ற ஆம்புலன்சைக் கவனிக்க செக்யூரிடி ஓடிச் சென்றார். பாலனை நினைக்கப் பெருமையாக இருந்தது. இருந்தாலும் ஏன் இப்படி என்று யோசித்துக்கொண்டே அடித்தளத்திற்குத் திரும்பினேன்.
டாக்டர் அழைப்பதாக செவிலியர் கூற மீண்டும் டாக்டர் அறைக்குள் நுழைந்தேன். அம்மா மௌனமாய் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
“திங்கட்கிழமையில் இருந்து ரேடியேஷன் ஆரம்பிச்சுடலாம்.. பிரிஸ்கிருப்ஷன் தரேன்.. இந்த மாத்திரை, சிரப் ரெண்டையும் இன்னிலேர்ந்து ஆரம்பிச்சுடுங்க”
“ஓ கே டாக்டர்”
“முக்கியமா இந்த கழுத்து செயினெல்லாம் ரெண்டு மூனு மாசத்துக்கு கழட்டி வைச்சுடணும்.. சரியா?”
சரி சொல்லிவிட்டு மெல்ல வெளியே வந்தோம். செக்யூரிட்டி என்னைப் பார்த்து பாலனின் பாக்கி கதையைச் சுருக்கமாய் சொன்னார்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவங்க அப்பா இங்கதான் கேன்சர்னு வந்தார். அப்போ இந்த தம்பி அப்பாவைக் கவனிச்சுக்க முடியல.. பாவம் இறந்து போயிட்டார். கோடி கணக்கில் காசு இருந்தும் அப்பாவின் கடைசி காலத்தில கூட இருந்து கவனிக்க முடியலையேங்கிற குற்ற உணர்ச்சி. அதற்கு பரிகாரமாகத்தான் அவர் அப்பா இறந்த மாதத்தில் இங்கே வந்து வயதானவர்களுக்கு உதவி செஞ்சுகிட்டு இருக்கார்..”.
கைத்தாங்கலாய் பெரியவரை டாக்சியில் ஏற்றி 'மெதுவாக ஓட்டுங்கள்' என்று டிரைவரிடம் சொல்லிக் கொண்டிருந்த பாலன் என் கண்களுக்கு இன்னும் இரண்டடி உயரமாய் தெரிந்தார்.

Leave a comment
Upload