
“ உன்னைப் பெண் பார்க்க, இன்னிக்கு அவன் வர்றான்”.
அப்பாவின் முடிவு, அந்தத் தொனியில் தெரிந்தது.
“பரிச்சயமான குடும்பம். நல்ல படிப்பு. புத்திசாலி. பெரிய சயின்டிஸ்டா வருவான்”.
அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.
உயரம்,ஒல்லி. தொள,தொளன்னு ஒரு பேண்ட்.
அப்பா,அம்மாவுடன் அவனும் வந்தான்.
என் குள்ளத்திற்கு அவன் மேட்சாவானா? எனக்குள் ஒரு உறுத்தல் .
அப்பாவின் செலக்க்ஷன்.,.தலையை ஆட்டி, சம்மதம் சொன்னேன்.
என் குள்ளத்தைப் பற்றி அவனுக்கு உறுத்தல் இல்ல. அப்படித்தான் நினைத்தேன்…..கைத்தலம் பற்றினான்,.
பல நகரங்களுக்கு வாழ்க்கைத் தன் ரக்கையை விரித்தது.
மாலையில் வீடு வந்ததும், ஒரு கையில் காஃபி. மறு கையில் பேனா. விடிய,விடிய எழுதிகிட்டிருப்பான்.
கிழிச்சு போட்ட பேப்பர்,குப்பைத் தொட்டியை ரொப்பியது,
“ஏண்ணா. ராத்திரி, பகலா, அப்படி என்னதான் எழுதறேள்.கிழிச்ச பேப்பரை, எடுத்துப் போடவே நேக்கு நேரம் போதல. உங்க ரிசர்ச் தியரி, சரியா வரலையா”.
அவன் மெளனமாய் இருந்தான்.
நான் மேலும் தொடர்ந்தேன்.
“ எடிசன் கூட, முட்டி மோதி தான், இந்த பல்பை எறிய விட்டானாம். நீங்க பெரிய சயின்டிஸ்டா வருவீங்கன்னு, என் அப்பா அடிக்கடிச் சொல்லுவார் ”.
என் கனவுகள் விரியத் தொடங்கின.
மெளனமாகி மெல்லச் சிரித்தான் .
ஒரு விஞ்ஞானியாக வேண்டிய வாய்ப்புகள் வாசலில் நின்றன. ஆனால் விதி வேறு திசைக்கு மாற்றிவிட்டது.
இந்த சங்கடத்தைச் சரி செய்ய வழி தேடினான் .
அன்று வந்த வார பத்திரிக்கையை கையில் ஏந்தியபடி,
“ கண்ணம்மா என் ரிசர்ச்சுக்கு ரிசல்ட் வந்துடுச்சு”. என்னை அழைத்தான்.
“என்ன ரிசல்ட்டு…” கேட்டுண்டே ஓடிவந்தேன்.
அந்தப் பக்கத்தைப் பிரித்துக் காட்டினான்.
“ யாரோ எழுதின கதையைக் காட்டி,...இதுவா உங்கள் ரிசர்ச் ரிசல்ட்". என் முகம் சுருங்கியது.
அவனோ ஒரு புன்னகையுடன்,
“யாரோ எழுதினது இல்ல . என்னுடையது”
“கண்ணம்மானு போட்டிருக்கே”
“என் கண்ணம்மா தான்”என்னை இழுத்து அணைத்துக் கொண்டான்.
என் மனசில் இருந்த அந்த பிம்பம் நொறுங்குவதை உணர்ந்தாலும், நிதானித்துக் கொண்டேன்.
வார இதழ்,மாத இதழ் என அனைத்தும் அவனை துரத்தின.சிறு கதை,நாவல் என இமயத்தைத் தொட்டான்,
பேட்டியும் ,பேச்சும் அவனை பிரபலமாக்கின. எழுத்தில் தனக்கென ஒரு பாணி. ஈர்க்கப்பட்டவர்கள் இவனைத் தெய்வமாய் துதித்தனர்.
பாராட்டில் அவன் தோள்கள் சுமக்கும் மாலைகள் எனக்கு ஆனந்தம் தந்தன,
என் அடி மனதை ஆட்கொண்ட அந்த ஆசை மட்டும், ஏக்கமாய் ஒரு ஓரத்தில் இருந்தது.
திரை உலகம் இன்று இவனைத் தேடத் தொடங்கியது.
கதை, வசனம்,டிஸ்கஷன் என பன்முகம் காட்டினான்..
திரை உலக ஆதிக்கம், என்னவன் என்பதை
அபகரித்து விடுமோ என்ற பயம், என்னைக் கவ்விக் கொண்டது.
திரைக்கதை ஆய்வு கூட்டங்களில், அவனோடு கலந்து கொண்டேன். அந்த பொசஸிவ்னஸ் என்னை இன்னும் இறுக்கியது.
அவன் புகழ் உச்சியைத் தொட்டது . அதில் எனக்கு ஆத்ம திருப்தி இல்லை.
திடீரென வந்த ஹார்ட் அட்டாக்,இலக்கியம்,கலை என இயங்கிய உலகில், இவன் வேகத்தைப் புரட்டி போட்டது..
சோர்ந்து போன நான், அவன் அருகில் அமர்ந்து கொண்டு “நல்ல சயின்டிஸ்டாக வளர்ந்து, இந்த சமுதாயத்துக்கு, ஏதாவது ஒன்னை உருப்படியா செஞ்சிருக்கலாம்.எல்லா நேரமும் கதை எழுதறேன்னு சொல்லிண்டு, யாருக்கு என்ன பயன் .உங்கள் உடம்பையும் அது பாதிச்சிடுத்து பாருங்கோ”.
தேக்கி வைத்த என் ஆதங்கத்தை, திறந்த மனதோடு, கொட்டினேன்.
அருகில் இருக்கும் அலமாரியைைக் காட்டினான்,அதில் அடுக்கி வைத்திருந்த வாசகர் கடிதங்களை எடுத்துப்
படிக்கச் சொன்னான்.
"உங்களின் “மனமிருந்தால்”. கதையைப் படித்தேன்.
மரண விளிம்புக்கு போன என்னைத் தடுத்து , புது வாழ்வுக்கு புத்துயிர் தந்தது”.
அவன் கண்கள் நெகிழ்ந்தன.
ஆயிரமாயிரம் வாசகர் கடிதங்கள், அந்த அலமாரியை அலங்கரிக்க .
“உங்கள் கண்டு பிடிப்பால், ஓராயிரம் உயிர்கள் சந்தோஷப் படலாம்,
ஆனால் உங்கள் எழுத்து ஒர் உயிரையே
மீட்டெடுக்கும் என்றால்”….
நான் அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன். என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே, என் நெஞ்சில் இருந்த அந்த ஆசை, மெல்ல, மெல்ல கரைவதை உணர்ந்தேன்.
.
எழுத்து அவனுக்கு ஒரு தொழில் அல்ல—
உயிர்களைத் தொடும்…விட முடியாத ஒரு இனிய போதை.

Leave a comment
Upload