
இந்து சமயத்தில் கோயில், அம்பலம் என்றால் அது சிதம்பர நடராஜர் கோயிலை மட்டுமே குறிக்கும். பல்வேறு சிறப்புக்களுடன் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் கொண்ட திருத்தலம் சிதம்பரம். இக்கோயில் சிதம்பரம் தில்லை நடராஜர், சிதம்பரம் தில்லை கூத்தன், சிதம்பரம் நடராஜர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் ‘கோயில்’ என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பூலோக கைலாயம் என்றாலும் சிதம்பரம் நடராஜர் கோயில் என்றே அறியப்படுகிறது. சிவனுக்குரிய பஞ்சபூத ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலம். இந்தக்கோவில் சிவன் நடனமாடும் சபையாகவும், 'சிதம்பர ரகசியம்' கொண்ட ஸ்தலமாகவும் விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்தத் திருத்தலத்தின் கட்டிடக் கலை, தத்துவ அமைப்பு, அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்கும் இடையிலான நுண்ணிய சங்கமம்.
சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ள இடம் உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று பல சர்வதேச ஆன்மீக ஆராய்ச்சியாளர்களும் மற்றும் அறிவியல் ஆர்வலர்களும் கூறுகின்றனர். இந்த அதிசயங்களின் உச்சமே " சிதம்பர ரகசியம்”
சிதம்பர ரகசியம்:

சிதம்பர ரகசியம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியத்திலும் காணப்படுகின்றன. நடராஜர் சந்நிதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் ஒரு சிறிய வாயிலின் உள்ளே திருவுருவம் ஏதும் இல்லாமல் பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்களின் பார்வைக்குக் காண்பிக்கப்படுகிறது. பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். சிதம்பர ரகசிய பீடத்தின் வாயிலில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்குச் சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளமாலை ஒன்று தொங்கும் காட்சி மட்டுமே தெரியும். ஆகாய உருவத்தில் இறைவன் மூர்த்தி இல்லாமலேயே வில்வ தளம் மட்டும் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முதலும், முடிவும் இல்லாது இருக்கின்றார். ஆகாயத்துக்கு ஆரம்பம், முடிவு கிடையாது. வெட்ட வெளியில் இறைவனை நாம் உணரத்தான் முடியும் என்பது இதன் பொருள். இந்த சிதம்பர ரகசியத்தை வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் நாம் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன் நமக்குக் கிடைக்கும். ஆனால் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் பார்த்தாலே முக்தி தரும் தில்லை என்று சொல்கின்றனர். இங்கு மனக்கண்ணால் மட்டுமே இறைவனைத் தரிசிக்கலாம். அதாவது, திரை என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல் நம் மனதில் உள்ள மாயை விலகினால் தெளிவு பிறக்கும் என்பதாகும்.
சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் =சிதம்பரம்.
சித்-அறிவு, அம்பரம்-வெட்டவெளி.
அகன்ற பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை உருவில் வழிபடுவதைவிட வெட்ட வெளியை (அருவத்தையே) இறைவனாக வழிபடுவதே சிதம்பர ரகசியமாகும்.
சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் ஸ்ரீசக்கரத்தையும் சிவசக்கரத்தையும் இணைத்து ஒன்றாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சக்கரத்தில் நடராஜப்பெருமான் தன் ஆனந்த நடனத்தினால் உலகைப் படைத்து, காத்து, அழித்து அருளிக்கொண்டிருக்கிறார்.

சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதைச் சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. இத்தலத்துப் பெருமானுக்குச் சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம் என்றெல்லாம் பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் இந்த ஆனந்த தாண்டவம், “காஸ்மிக் நடனம்” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
நடராஜப்பெருமானின் ஆனந்த தாண்டவம் அவரின் ஐந்து முக்கியத் தொழில்களை (பஞ்சகிருத்தியங்கள்) ஒரே நடனத்தில் வெளிப்படுத்தும் அதிசய வடிவம்.
படைத்தல் : (வலது மேல்கையில் உள்ள உடுக்கை)
காத்தல் : (வலது கீழ்கையில் உள்ள அபய ஹஸ்தம்)
அழித்தல் : (இடது மேல்கையில் உள்ள அக்னி)
மறைத்தல் : (தூக்கிய இடது கால்)
அருளல் : (பாதம் ஊன்றிய நிலை)
நடராஜரின் தத்துவம் என்பது வெறும் நடனம் மட்டுமல்ல, அது பிரபஞ்ச இயக்கம் மற்றும் மனித உடலுக்குள் இருக்கும் ஆன்மீக ஆற்றலை விளக்கும் ஒரு குறியீடாகும்.
மனித உடலைப் பிரதிபலிக்கும் கோயில் அமைப்பு:

சிதம்பரம் கோயில் அமைப்பு மனித உடலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாகச் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
ஒன்பது நுழைவாயில்கள் மனித உடலில் உள்ள ஒன்பது துவாரங்களை (2 கண்கள், 2 காதுகள், 2 மூக்கு துவாரம், வாய், மலம், சிறுநீர் துவாரங்கள்) குறிக்கின்றன.
மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாகச் சிதம்பரம் கோயில் உள்ளது. பொன்னம்பலம் (கருவறை) சற்று இடதுபுறமாக அமைந்துள்ளது, இது மனிதனின் இதயத்தைக் குறிக்கிறது.
நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது.
பொற்கூரை விமானம் - 21,600 தங்கத் தகடுகள் மனிதன் ஒரு நாளில் சராசரியாக எடுக்கும் 21,600 சுவாசங்களைக் குறிக்கும் (15×60 ×24 = 21,600).
72,000 தங்க ஆணிகள்: கூரையை இணைக்கும் 72,000 ஆணிகள், உடலில் உள்ள நாடிகளின் (நரம்புகள்) எண்ணிக்கையைக் குறிக்கின்றன.
இது ஒரு கோயில் மட்டுமல்ல. ஒரு மனித உடலின் ஆன்மிக வரைபடம் என்றே சொல்லப்படுகிறது.
ஸ்தல சிறப்பு:

சிதம்பரம் நடராஜர் கோயில் சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பிரமாண்டமான அமைந்துள்ளது, இக்கோயிலில், சபாநாயகர், சிவகாமசுந்தரி அம்மன் மற்றும் மூலவரான ஆகாய லிங்கம் (சிதம்பர ரகசியம்) ஆகியவை முக்கிய சந்நிதிகளாகும்.
இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் தேவார மூவர்களின் ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்த இடம் மேலும் திருமுறைகள் உருவாயின என்பதும் வரலாறு.
இக்கோயிலின் பிரகாரத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் தனித்தனி சந்நிதிகள் கொண்ட 'நால்வர் கோயில்' அமைந்துள்ளது.
பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியைக் குறிக்கின்றது. பொற்கூரை வேயப்பட்ட கனகசபை, பொன்னம்பலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பொன்னம்பலத்தில் உள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளைக் கொண்டுள்ளதுடன், இது 64 கலைகளையும் குறிக்கின்றது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.மற்றும்

உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடையவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானைத் தரிசனம் செய்யலாம். சிதம்பரம் நடராஜருக்குத் தினமும் ஆறு கால பூஜை நடத்தப்படுகிறது. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனம் மிகச் சிறப்பு.
முற்காலத்தில் இங்குத் தில்லை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. மற்றும், புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் என்ற வேறு பெயர்களும் உண்டு.
இங்கே ஒரு மகிமை வாய்ந்த ஸ்படிகலிங்கம் உள்ளது. அதற்குத் தினமும் ஆறு காலம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

நடராஜருக்காக இக்கோவிலில் நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு வந்து அர்ப்பணிப்பதை. மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர்.
“இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. உருவம் அழியும்…பெயர் மறையும்…ஆனால், எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஆகாய தத்துவம் மட்டும் நிலைத்திருக்கும்.” சுருக்கமாக, "சிதம்பர ரகசியம்" என்பது உருவமற்ற, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் (சிவா-பார்வதி) இருப்பை உணர்த்தும் ஒரு ஆத்மார்த்தமான தத்துவம்..”


Leave a comment
Upload