
பிற்கால தமிழ் சிற்றிலக்கிமாகிய குறவஞ்சி வகைமையிலிருந்து பாடல்கள் இரண்டை இன்று பார்ப்போம். சற்றொப்ப 300 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த திரிகூட இராசப்பக் கவிராயர் இயற்றிய ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ எனும் இசை நாடக ஆக்கத்திலிலுள்ள இனிய பாடல்கள் இவை.
இந்தக் குறவஞ்சியில் பயிலும் சந்த அழகும் இசையில் அமரும் இனிய பண்களின் நேர்த்தியும் மிகவும் ரசிக்கத் தக்கன.
இன்றைய பாடலின் முதல் சில வரிகளை கவியரசர் கண்ணதாசன் ‘ஆதி பராசக்தி’ எனும் திரைப்படத்தில் அவர் எழுதிய சொல்லடி அபிராமி!’ என்று தொடங்கும் பாடலுக்கு இடையில் மிகப் பொருத்தமாகச் சேர்த்திருந்தார். கவிஞருக்கும் மிகப் பிடித்தமான வரிகள் இவை.
திருவீதி உலா வரும் குற்றால நாதரின் பேரழிலில் தன் வசமிழந்த கன்னியர்கள் வாட்டமுற்றிருக்கிறார்கள். அந்நேரம் அங்கு சுடர்போல் ஒளிரும் வசந்தவல்லி என்னும் காரிகையும் வருகிறாள்.
சில பாடல்களில் வசந்தவல்லியின் அழகையும் போக்கையும் விவரித்த கவிராயர், அவள் பந்து விளையாடும் அழகை சில பாடல்களில் வருணிக்கிறார். பந்தினைத் தூக்கிப் போட்டு விளையாடும் ஒலியின் சந்தத்திலேயே பாடல்கள் ஆச்சரியகரமாக அமைந்திருப்பதைக் காணலாம்.
பாடல் 1
செங்கையில் வண்டு கலின் கலின் என்று
செயம் செயம் என்று ஆட - இசை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்து ஆட - இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தரி பந்து பயின்றாளே!
பொருள் விளக்கம்;
வசந்தவல்லி பந்தடிக்கையில் அவளுடைய செங்கைகளில் உள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றபடி, ‘ஜெயம் ஜெயம்’ எனக் குறிப்புணர்த்தி முழங்கினவாம்.
அவளுடைய சிற்றிடை ‘இனியும் துவளாது நிலைக்குமா?’ என்று ஐயமுற்ற அவளின் பாதச் சிலம்புகள் புலம்புகின்றன. அவற்றோடு சேர்ந்து அவள் அணிந்திருந்த தண்டைகளும் ஒலியெழுப்பிப் புலம்பினவாம்.
ஆனால் அவளிரு கொங்கைகளோ, தம்மைப் போன்றிருக்கும் அந்தப் பந்தின் வடிவை வெற்றி கொண்டுவிட்டதாக குதூகலத்துடன் குழைந்து குழைந்து ஆடினவாம்.
இந்த விதமாக, பூக்கள் குலுங்கும் பசுங்கொடி போலிருக்கும் வசந்தவல்லி எனும் பேரழகி பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
பாடல் 2
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டு ஆடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன் சிலை வண்டு ஓட - இனி
இங்கிது கண்டு உலகு என்படும் என்படும்
என்று இடை திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றனளே!
பொருள் விளக்கம்
பெரிய காதணிகளை அணிந்திருந்த வசந்த வல்லியின் காதுகள்வரை நெருங்கி நீண்ட கயல் மீன்களைப் போன்ற அவளுடைய விழிகளிரண்டும் புரண்டு புரண்டு ஆடிக் கொண்டிருந்தன.
வசந்த வல்லியின் கார் கூந்தலில் மொய்க்கும் வண்டுகள் கலைந்து நீங்குவது கண்டு, மன்மதனுடைய வில்லின் நாணாக அமைந்த வண்டினமும் அவற்றுடன் கலந்து பறக்கத் தொடங்கி விட்டதாம்.
இங்கு வசந்த வல்லி பந்தாடும் இந்த அழகைக் கண்டால், இந்த உலகம் என்ன பாடுபடும் என்ன பாடுபடும் என்று சிந்தையுற்று, அவளுடைய சிற்றிடையும் துவண்டு வாட்டமுறுகிறதாம்.
இவ்விதமாக, செந்தாமரையிலே வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற அழகிய நங்கையாகிய வசந்தவல்லி பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
பின்குறிப்பு ;
இந்த கட்டுரையின் துவக்கத்தில், மேற்கண்ட வரிகள் கவிஞர் கண்ணதாசன் மிகவும் ரசித்தவை என்று சொன்னேன் அல்லவா?
1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்திலுள்ள டெட்ராய்ட் நகரில், தமிழ் மொழியைப் பற்றி கண்ணதாசன் உரையாற்றினார். அதுதான் கவியரசர் கடைசியாக ஆற்றிய உரையாகும் .
அந்த உரையில் கூட இந்தக் குற்றால குறவஞ்சி பாடல் வரிகளைத் தன் மென்மையான குரலில் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment
Upload