தொடர்கள்
கவர் ஸ்டோரி
கடலில் தோன்றும் சிவன். நிஷ்கலஙகா மகாதேவ் விகடகவி நேரடி விசிட் !! – ராமகிருஷ்ணன்

2026033023035651.jpeg

நிஷ்கலங்கா மகாதேவ் கோவில். குஜராத்தின் பாவ்நகர் நகருக்கருகே இருக்கும் கோலியாக் கடலோரத்தில் தான் இந்த அதிசய கோயில் உள்ளது.

இந்த கோயில் வானைப் பார்த்த பூமியில், ஒரு சதுர வடிவ மேடையில் ஐந்து தனித்துவமான 'சுயம்பு' சிவலிங்கங்கள் அமைந்துள்ளன; ஒவ்வொரு லிங்கத்திற்கும் எதிரே ஒரு நந்தி சிலை அமைந்துள்ளது.

20260330222509521.jpeg

[தர்மனின் லிங்கம்]

20260330222557367.jpeg

[பீமனின் லிங்கம்]

20260330224320518.jpeg

[அர்ஜுனனின் லிங்கம்]

20260330224412262.jpeg

[நகுலனின் லிங்கம்]

20260330224512716.jpeg

[சஹாதேவனின் லிங்கம்]

ஒரு உயரமான இரும்பு கம்பத்தில் காவி வண்ணக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. அருகில் சிமென்ட்டினால் ஆன 20 அடி உயர கலங்கரை விளக்கம் போன்ற அமைப்பு.

ஒவ்வொரு நாள் திதி என்ன என்பதை இங்கு மக்கள் பஞ்சாங்கத்தின் மூலம் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு கடலில் எந்த நேரத்தில் உயர் அலை/தாழ்வலை இருக்கும் என்பதை முன்கூட்டியே நிர்ணயம் செய்து தரிசன நேரத்தை அட்டவணையாய் வைத்திருக்கிறார்கள்..

20260330224646444.jpeg

குறைந்த அலை அல்லது தாழ்வு அலை என்பது கடற்கரையில் கடல் நீர்மட்டம் அதன் மிகக் குறைந்த நிலையை அடையும் நேரத்தைக் குறிக்கிறது. இந்த நேரத்தில், கடல் நீர் கரையிலிருந்து வெகுதூரம் பின்வாங்கிச் சென்று, மணல் பரப்பு, பாறைகள் மற்றும் ஆழமற்ற கடல் படுகைகளை வெளிக்காட்டுகிறது. இந்த நிலையே Low tide ஆகும். அந்த நேரத்தைத் தான் அந்த அட்டவணையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு உயர் அலைக்கும் அடுத்த உயர் அலைக்கும் இடையில் சுமார் 12 மணி நேரம் 26 நிமிடங்கள் இடைவெளி இருக்கும். பொதுவாக, பெரும்பாலான கடற்கரைகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை உயர் அலைகளும் (High tide), இரண்டு முறை தாழ்வு அலைகளும் (Low tide) ஏற்படும்.

அந்த வகையில் நமது விகடகவி டீம் நவமி திதியன்று காலை கடற்கரையோரம் அதிகாலை ஐந்தரைக்கே ஆஜர் ஆகிவிட்டது. அந்த அட்டவணையின் படி காலை 3.06 மணி முதல் காலை 8.06 மணி வரை தாழ்வலை என்று போட்டிருந்தது. சுமார் ஒரு கி.மீ தூரத்தில் மேடை போன்ற அமைப்பில் இரண்டு உயரமான தூண்களில் கொடி பறந்துகொண்டிருப்பது தெரிந்தது.

கடல் நீர் உள் வாங்கி இருந்தது. கடல் நீர் நிலத்தைப் பிளந்தவாறே கடலுக்குள் ஐக்கியமாக பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

20260330224813474.jpeg

முதியவர் ஒருவர், அந்த ஒத்தையடி கடல்நீரில் வழிகாட்டி போல் முன்னே செல்ல அவருடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே சென்றோம். கூரான சரளைக் கற்கள், கடல் சோழி சிப்பி வகைகள் கால்களை பதம் பார்த்தன. அந்த ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீருக்குள் கால்களை வைத்தவாரே செல்வதுதான் நல்லது. அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தால் மணல் போன்ற பரப்பு இருப்பினும் சதுப்பு நிலமாக வழுக்கும் அபாயம் அதிகமாக பட்டது. இப்படி புதிதாக பார்த்து பார்த்து மெல்ல மெல்ல செல்ல செல்ல முதியவர் அதற்குள் லிங்கங்களின் மேடைக்கருகில் சென்று விட்டிருந்தார்.

எனக்குப் பின்னால் நண்பர்கள் சிவாவும் ராமும் சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தனர். தனித்து விட்டேனோ என்று பயப்பட எண்ணுகையில் அந்த தொலை தூரத்தில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்தில் இருந்து வானம் செவ்வாடை அணியத்தொடங்கியது. பின்னால் அர்ச்சகர் வந்துகொண்டிருந்தார். பயந்த உள்ளத்தில் பக்தி புகத் தொடங்கியது. ஹர் ஹர் மஹாதேவ் தன்னிச்சையாய் அடிவயிற்றிலிருந்து எழுந்தது.

அங்கிருந்து இன்னமும் ஒரு அரை பர்லாங்கு தூரத்திற்கு சென்று கடல் நீராடினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக உயரத் துவங்கினான் ஆதவன்.

20260330230449584.jpeg

மேடைக்கு வந்து திருநீரணிந்து பஞ்ச பாண்டவர்களின் தர்மர் முதலாய் அர்ஜுனன், பீமன், நகுலன், சஹாதேவன் ஆகியோர்க்காக அமைந்த சுயம்பு ஐந்து லிங்கங்களை வலம் வந்தேன். கடல் நீர் கொண்டு அபிஷேகம் செய்தேன்.

20260330225039648.jpeg

சஹாதேவனின் லிங்கத்தருகே அமர்ந்து சிவனுக்குகந்த ஸ்ரீருத்ரம், சமகம் சுக்தங்கள் அனைத்தையும் பாராயணம் செய்து கொண்டிருந்தேன். மணித்துளிகள் வளர வளர சூரியனும் வளர்ந்தான்.. அதற்குள் அந்த மேடையில் பக்தர்கள் நிரம்பிவிட்டிருந்தனர். மலர், வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனைகளும் பால் கொண்டு அபிஷேகங்களும் நடந்த வண்ணமிருந்தன.

மணி எட்டு. இன்னும் இருபது நிமிட பாராயணம் பாக்கி இருக்கையில் ராம் அருகில் வந்து, சார் சீக்கிரம் போலாம் வாங்க. தண்ணி உள்ளார வர ஆரம்பிச்சாச்சு என்றதும் சுற்றும் முற்றும் பார்க்கையில் ஓரிருவர் தவிர்த்து மற்றவர் கரையை நோக்கி தூரம் சென்று விட்டிருந்தனர். குளித்து விட்டு வந்த இடத்தை நோக்கினேன். அந்த இடத்தைத் தாண்டி அலைகள் மேடையை வருட முன்னும் பின்னும் முயன்று கொண்டிருந்தன.

20260330230604698.jpeg

[ஒரு பக்தர்]

சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னம் இங்கு தானே சிவ பெருமான் பஞ்ச பாண்டவர்களுக்கு தோன்றி அருளினார். அவர்களது பாவ வினைகள்க் களைந்தார். இதை எண்ணுகையிலேயே, மனதில் ஒரு வித சிலிர்ப்பு, நாளங்கள் மீட்ட மயிர்க்கூச்செரியல். இந்த இடம் ஒரு சர்ரியல் அனுபவம்.

இன்னும் சில நிமிடங்களில் இந்த இடத்தில் நிற்க முடியாது. முழுகடித்து விடும் என்று தோன்றவில்லை. ஆனால் அது தான் அதிசயம்.

20260330225637300.jpeg

[கடல் நீர் கரையைத் தழுவுமுன் நாங்கள் விரைந்து கொண்டிருக்கின்றோம்]

சிவராமுடன் கரையை அடைந்தேன். தங்கியிருந்த விடுதியின் முன்பு தமிழிலேயே விடுதியின் பெயர்

20260330225256153.jpeg

[சான்வி ரிசார்ட்]

அங்கு கிடைக்கும் வசதிகள் பற்றி எழுதியிருந்தது. ஓ..இங்கு நிறைய தமிழ் பேசும் மக்கள் வருகிறார்கள் என்பது தெரிந்தது. ஆண்கள் பெண்கள் சிறுவ சிறுமியர் என பதினைந்து பேர் எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்தனர். ஆமதாபாத் தமிழர்கள். பேச்சுக் கொடுத்தேன்.

20260330225414968.jpeg

அகமதாபாத்தில் ஒரு தலைமுறையாய் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறினர். பூர்வீகம் புதுச்சேரி என விடுதி வைத்து நடத்தும் ராஜேந்திரன் கூறினார். அகமதாபாத்தில் தமிழ் மீடியத்தில் தான் சார் படித்தேன் என்று பெறுமிதம் கொண்டார் மருத்துவத் துறை விற்பனை தொழிலில் ஈடுபட்டிருக்கும் கார்த்திக். விகடகவி அகமதாபாத் என்ற ஒரு வாட்சாப் குரூப்பையே அமைத்துவிட்டார் உடனே.

சிவபெருமான் கடலுக்குள் சென்றிருப்பாரே என்ற யோசனை வேறு அலையடித்து கொண்டிருந்தது.

இனி மாலை இதே 3 மணி முதல் எட்டு மணி வரை கோயில் தெரியுமாம்.என்று பராக் கோஸ்வாமி இந்த கோயிலைப் பற்றிக் கூறினார்.

2026033023084154.jpeg

கோவிலைப்பற்றி

கடல் அலைகள் உயரும்போது (உயர் அலை நேரத்தில்) இந்த ஆலயம் நீரால் சூழப்பட்டு மூழ்கிவிடுகிறது; அலைகள் வடியும்போது (தாழ் அலை நேரத்தில்) மீண்டும் வெளியே வந்து, பக்தர்களின் பாவங்கள் அனைத்தையும் கழுவி அகற்றுவதாக உறுதியளிக்கும் வகையில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர் அலை நேரத்தில், இறைவனின் திருவுருவம் நீரால் மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறது; அப்போது ஆலயத்தின் கொடியையும், ஒரு தூணையும் மட்டுமே காண இயலும். கடல் அலைகளின் சீற்றத்தைத் தாங்கும் வகையில் மிகுந்த கவனத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், நவீன பொறியாளர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் இன்றும் ஒரு விடை காணா புதிராகவே திகழ்கிறது.

வரலாறு:

குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு, அதாவது, சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்பு, த்வாபர யுகத்தின் போது பாண்டவர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கௌரவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, தங்கள் பாவங்களைக் குறித்து பாண்டவர்கள் குற்ற உணர்வு கொள்ளத் தொடங்கினர். தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் பொருட்டு, பாண்டவர்கள் கிருஷ்ணரை அணுகினர். கிருஷ்ணர் அவர்களிடம் ஒரு கருப்பு நிறக் கொடியையும், ஒரு கருப்பு நிறப் பசுவையும் அளித்து, அவற்றைப் பின்தொடருமாறு பணித்தார். அந்தக் கொடியும் பசுவும் எப்போது வெண்மை நிறமாக மாறுகின்றனவோ, அப்போது உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதன் பிறகு, சிவபெருமானிடம் சென்று மன்னிப்பு கோருமாறும் கிருஷ்ணர் அவர்களை அறிவுறுத்தினார். அந்தப் பசு எங்கு சென்றதோ அங்கெல்லாம் பாண்டவர்கள் அதைத் தொடர்ந்து சென்றனர். பல ஆண்டுகள் பல்வேறு இடங்களுக்குச் சென்றும், அந்தக் கொடியின் நிறமோ பசுவின் நிறமோ மாறவே இல்லை. இறுதியாக, அவர்கள் கோலியாக் கடற்கரையை அடைந்தபோது, ​​அந்தப் பசுவும் கொடியும் வெண்மை நிறமாக மாறின. உடனடியாக, பாண்டவர்கள் சிவபெருமானை தியானித்து, தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரினர். பாண்டவர்களின் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் லிங்க வடிவில் காட்சியளித்தார். எனவே, அவர்கள் இந்த ஆலயத்திற்கு 'நிஷ்களங்க மகாதேவர்' என்று பெயரிட்டனர்; 'நிஷ்களங்கம்' என்பது கறையற்ற, தூய்மையான மற்றும் களங்கமற்ற நிலையைக் குறிப்பதாகும்.

கோயிலின் திருவிழா

இந்திய நாட்காட்டியின்படி, 'சிராவண' (ஆவணி) மாதத்தில் வரும் அமாவாசை இரவில், 'பதர்வி' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. பாவ்நகர் மன்னர்களால் ஆலயக் கொடி ஏற்றப்படுவதன் மூலம் இத்திருவிழா தொடங்குகிறது; ஏற்றப்படும் இந்தக் கொடி 364 நாட்களுக்கு ஆலயத்தில் பறந்துகொண்டிருக்கும், அடுத்த திருவிழா வரும்போது மட்டுமே அது மாற்றப்படுகிறது.

தாழ் அலை நேரத்தில் கடல் நீர் வடியும்போது, ​​பக்தர்கள் கடற்கரையிலிருந்து வெறும் கால்களுடன் நடந்து சென்று இந்த ஆலயத்தை தரிசிக்கின்றனர். கோயிலை வந்தடைந்ததும், பக்தர்கள் முதலில் 'பாண்டவர் குளம்' எனப்படும் குளத்தில் தங்கள் கை கால்களைக் கழுவிக்கொண்ட பிறகு, சன்னதியைத் தரிசிக்கச் செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்; இந்நாட்களில் அலைகள் வடிந்து ஓயும் தருணத்திற்காக பக்தர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். எனவே, இக்கோயிலின் முழுமையான தரிசனமும் கடல் அலைகளின் நிலையைச் சார்ந்திருப்பதால், சன்னதிக்கு வருகை தருவதற்கு முன்னதாகவே கடல் அலைகளின் ஏற்ற இறக்க நேர அட்டவணையைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

இதோ இந்த மெய் சிலிர்க்கும் யாத்திரையின் ஒரு வீடியோ தொகுப்பு