தொடர்கள்
நெகிழ்ச்சி
"தலைவாவும் நானும்" - ஆர்.மீனலதா

20260412141050530.jpeg

2013ல் வெளிவந்த தலைவா திரைப்படத்தில், பிரபல நடிகர் மற்றும் படத்தின் ஹீரோவாகிய (இன்றைய முதல்வர்) விஜய்யுடன் சிறு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இறையருளே எனலாம். எதிர்பாராமல் வந்த வாய்ப்பு. விடுவேனா....!!

இன்றைய தமிழ்நாடு முதல்வர் விஜய், பல வருடங்களுக்கு முன்பு நடித்து புகழ் பெற்ற படமாகிய தலைவா, பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது.

டைரக்டர் திரு ஏ.எல்.விஜய்.

ஹீரோயின் அமலாபால் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர்.

20260414123536727.jpeg

20260414123638521.jpeg

விஜய் செட்டிற்குள் வருகையிலேயே ஆரவாரமாக இருக்கும். எத்தனை தடவை டேக் எடுத்தாலும், அசராமல் ஈடு கொடுப்பார் விஜய். முகம் சுளிக்க மாட்டார்.

தலைவா படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை பகிர்கிறேன்.

மதியம் 2 மணி அளவில் ஒரு காட்சி எடுக்க ஷுட்டிங் ஆரம்பமானது. கடுமையான வெய்யில்.

விஜயின் ஆறு சிநேகிதர்களும், எதிரிகளால் அடிபட்டு குற்றுயிரும், குலை உயிருமாக திறந்தவெளியில், சுடும் மண்ணில் விரிக்கப் பட்டுள்ள துணி மீது படுத்துக் கிடக்கின்றனர். கிழிந்த ஆடைகள், ஆங்காங்கே ரத்தக்கறை திட்டுகள். மேக்கப் மேனின் அருமையான கைவண்ணம்.

சுற்றிவர ஒப்பாரி வைத்து அழும் கூட்டம். விஜயின் அன்பு சிநேகிதனின் தாயாராக நான். தந்தையாக பிச்சை என்பவர்.

இருவரும் விக்கி - விக்கி அழவேண்டும்.

டைரக்டர் திரு ஏ.எல்.விஜய் சார், நான் நன்றாக அழவேண்டும் என, என்னிடம் கூறியிருந்தார்.

துயரச் செய்தி கேட்டு விஜய் தளர்ந்த நடையுடன் மெதுவாக வருவார்.

காய்ந்த இலைகளை நான்கு கூடைகள் நிறைய வைத்தவாறு நான்கு பேர்கள் படுத்திருப்பவர்களின் அருகே, இரு ராட்சத விசிறிகள் நடுவே நிற்க வேண்டும்

விஜய் சோகமாக அழுதவாறே தளர்ந்த நடையுடன் வருகையில், ராட்சத விசிறிகள் ஓட விடப்பட்டு, கூடை இலைகளை படுத்திருப்பவர்கள் மேல் கொட்ட, புயல் காற்று அடித்தாற் போல இருக்கும். மண்ணும், இலைகளும், புழுதியுமாக அவர்கள் மீது பறக்கும். பார்க்கையில் மனதிற்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

டைரக்டர் கட் கட் சொல்ல, மீண்டும் அதே காட்சிக்கு தயார் செய்ய வேண்டும்.

இலைகளைப் பொறுக்கி கூடையில் போடுவதும், படுத்திருந்தவர்கள் எழுந்திருந்து சிறிது ரிலாக்ஸ் செய்யவும், விஜய் மறுபடியும் சிறிது பின்னால் செல்லவும், அழுதுகொண்டு முன்னால் வரவும், நாங்கள் விக்கி விக்கி அழவும், இத்யாதி! இத்யாதி!.

இந்த காட்சி ரீடேக் - ரீடேக் என சுமார் 5-6 டேக்குகள் எடுக்கப்பட்டன.

அழுவதற்கு கண்ணில் நீர் வரவில்லை 4 ஆவது டேக்கில். விஜய் மற்றும் எங்கள் இருவருக்கும் கிளிசரினை கண்ணில் போட்டு அழ வேண்டிய நிலைமை.

2026041412372762.jpeg

சீன் எடுக்க, சுமார் 5 மணி நேரம் ஆனது. படத்தில் 2-3 நிமிடங்களே வரும் காட்சிக்குத்தான் எத்தனை உழைப்பு.

விஜய் என் தோள்களைப் பிடித்து ஆறுதல் கூறிய சீன் கட் செய்யப்பட்டுவிட்டது.

விஜய்யின் பாதுகாப்பிற்கு இருந்த பூனைப் படைகள் நடுவே, சைக்கிள் கேப்பில் அவரை சந்தித்து, அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரிய விஷயம் எனலாம்.

நான் நடித்த ஆறு சீன்களும் கத்தரிக் கோலால் வெட்டுப்படாமல் காட்டப்பட்டது.

தலைவா ஹிந்தி மொழி பெயர்ப்பு படத்திலும் அடியேன் உள்ளேன்.

விஜயின் துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்துள்ளேன்.

20260414123938717.jpg

அன்பாக பேசுவதிலும், மரியாதை அளிப்பதிலும், உணர்வுகளைப் புரிந்து கொள்வதிலும் சிறந்தவர் விஜய்.

மாண்புமிக தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் விஜய்க்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்