தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 26 : “காத்தலுக்கென்று ஒருவன்” – மோகன் ஜி

20260510213109502.jpg

அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்றொரு பெரும் புலவர் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்தார். அவர் பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர். இவருடைய பாடல்கள் ஆச்சரியமான சொல்லாடலும் மிகுந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவை.

இவர் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றி பாடிய ஒரு பாடலை இன்று பார்ப்போம்.

பாடல் ;

சோனையும் காத்து நல்லானையும் காத்துத் துரோபதை தன்

தானையும் காத்து அடைந்தானையும் காத்து தடத்து அகலி

மானையும் காத்து அனுமானையும் காத்து மடுவில் விழம்

ஆனையும் காத்தவனே! எனைக் காப்பது அரிதல்லவே!

இதன் பொருளாவது ;

சோனை என்றால் பெருமழை என்று பொருள். கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி பிருந்தாவனத்தின் மக்களை காத்தவனே! ;

நல்லானை - உத்தமராகிய தர்மரைக் காத்து ரட்சித்தவனே!;

தானை என்றால் ஆடை. துரியோதனன் சபையில் திரௌபதிக்கு சீலைகளாக வழங்கி அவளுடைய மானம் காத்தவனே!

அடைந்தானை - சரணாகதி அடைந்த விபீஷணனைக் காத்தவனே!

தான் செல்லும் வழியில், கல்லாய்ச் சமைந்திருந்த அழகிய அகலிகையைத் தன் திருவடியை வைத்துக் காத்தவனே!

அனுமனைத் தன் அணுக்கனாக இணைத்துக் காத்தவனே!

பெரிய மடு ஒன்றில் இறங்கிய கஜேந்திரன் எனும் யானையின் கால்களை அங்கிருந்த முதலை பற்றிக் கொள்ள, ‘ஆதிமூலமே!’ என்ற யானையின் அலறலை கேட்டு, தன் சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனைக் காத்தவனே!

இவ்வளவு பேரையும் காத்து ரட்சித்த உனக்கு, என்னைப் போன்ற சாமானியனைக் காப்பது ஒரு பெரிய காரியம் அல்லவே!

பாடலின் நயம் நம்மை பரவசப்படுத்துகிறது அல்லவா?

அடுத்த வாரம் இன்னொரு வேறு ஒரு பாடலுடன் சந்திப்போம்.