
குருவாயூரின் கிழக்கே நடையில் கருட வாகனம் இருக்கும். அதனருகில் உள்ள ஆல மரத்தினடியில் உள்ள கல்லை குருவாயூரப்பன் என அவனின் பரம பக்தனான பூந்தானம் நம்பூதிரி [பூந்தானத்தைப் பற்றிய ஒரு சிறு கட்டுரை இதே இதழில் எழுதியுள்ளேன்] வழிகாட்ட, அந்த கல்லிற்கு மாலையிட்டு வணங்கினாள் மஞ்சுளா எனும் பக்தை. அவளின் மகிமையை உலகுக்கு அறியச் செய்த பூந்தானத்தின் சிலை ஒன்று இன்றும் காணலாம்.

ஜூன் 2026 முதல் வாரத்தில், 175 பேர் கொண்ட குரூப்பில் அடக்கமாக நாங்கள் ஸ்ரீமத் பாகவத சப்தாகத்திற்கு குருவாயூர் சென்றிருந்தோம். அதில் ஒருவரான சித்ரகலா அப்படி அந்த சிலையைக் கண்டு மஞ்சுளா ஆல் என்ற புனித தலத்தைக் கண்டுவிட்டு, பூந்தானத்தின் வீட்டை எப்போது காண்பேனோ என்று மனதுள் ஆதங்கம் கொண்டிருக்கிறார்.
இது ஒரு புறமிருக்க, எனது நண்பர் மாணிக்கவாசகம் பூந்தானத்தில் மோட்சம் கிடைத்த இடம் இருக்கும் அவரது இல்லத்திற்கு செல்ல ஒரு சின்ன பிளான் செய்து என்னிடம் கூறினார்.
ஆக நானும் எனது மனைவியும் மாணிக்கவாசகத்தின் மனைவி ராஜலக்ஷ்மியும் செல்லத் தயாரானோம். மாலை 5 மணிக்குத்தான் இல்லம் திறக்கும் நேரம் என்று யாரோ சொல்ல மதியம் மூன்று மணிக்கு காரில் ஏற முயன்றபோது எதிர்பட்ட சித்ரகலாவிடம், “வருகிறீர்களா? பூந்தானம் இல்லத்திற்கு,” என்றவுடன், சிலிர்த்தே போய்விட்டார்.
காலையில் மஞ்சுளா ஆல் என்ற இடத்தில் தனக்குள் ஏற்பட்ட சம்பாஷணையைத் தெரிவித்து, இப்படியும் குருவாயூரப்பன் லீலை செய்கிறான் என்றார். இரு நாட்களுக்கு முன்பு, கிடைப்பதர்க்கரிய தள்ளு முள்ளில்லாத தரிசனம் யாரோ ஒருவர் இவரை அழைத்து வந்து சன்னிதி முன்பு நிறுத்திவிட்டு, நல்லா பாரு!” என்று போய்விட்டாராம். அங்கு இருக்கும் வரிசை கண்ட்ரோல் செய்பவர்களும் இவரை ஒன்றும் விலகு என்று கூறவேயில்லையாம். எவ்வளவு நேரம் நின்றிருப்பேனே தெரியவில்லை
60 கிமீ தூரத்தை மாலை 5.05 மணியளவில் அடைய, பூந்தானத்தின் இல்லத்தின் கேட் பூட்டியிருந்தது. பார்வையாளர் நேரம் காலை 10 முதல் மாலை 5 வரை என்று அறிவிப்பு பலகை தெரிவித்தது.
முதல் மன வருத்தம்.
ஒரு காட்டுக்கு வேலியிட்டு கேட் போட்டிருக்கிறார்கள். கேட்டைத் தாண்டி உள்ளே ஒர் சின்ன பாதை காட்டுக்குள் சென்று கொண்டிருந்தது. வளைந்து கறுத்த காட்டுக்குள் சென்றது அந்த பாதை.
கார் சில அடிகள் தாண்டி ஒரு தகவல் பலகையிடம் நெருங்க, அதில் எதிரே உள்ளது பூந்தானத்தில் இல்லக் கோயில். விஷ்ணு சன்னிதானம் என்றது. மனது சற்று அமைதியடைந்து கோயிலின் அருகில் சென்றடைந்தோம். கோயிலும் 5.30 மணிக்குத்தான் திறக்கும் என்று தெரிந்தது. அருகே யாரும் இல்லதிருக்க கோயிலை ஒட்டிய அன்னதான அரங்கில் இரு வாலிபர்களைக் கேட்க்க, போய்க்கோ என்று பளிச்சென சொல்ல, ஏதோ வயப்பட்டவர்களாக, கோயிலும் இன்னும் திறக்கவில்லை, எதிரில் உள்ள பூந்தானத்தின் இல்லத்தின் கேட் வரை சென்று “யாராவது உள்ளே இருந்து வருகிறார்களா?” பார்ப்போம், என்று இல்லத்தை நோக்கி நகர்ந்தோம்.
சாலையில் வேகிக்கும் வாகனங்களைத் தவிற வேறு யாரையும் காணவில்லை.
பூட்டப்பட்டிருந்த சின்னப் பூட்டை வெறித்துப் ஏமாற்றத்தோடு பார்த்துக்கொண்டிருக்கையில், இல்லத்திற்குள் போகணூமா? என்றது ஒரு குரல்.
சத்தியமாக சொல்கிறேன் அங்கு நின்று பூட்டைப் பார்த்துக்கொண்டிருந்த 5-7 நிமிடங்களில் எங்களது இரு புறத்திலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவருமே இல்லை. பட படத்தது எங்களுக்கு? ஏதோ உதவி வருகிறதென்று.
லுங்கியைத் தூக்கிக் கட்டியபடி கரடு முரடான சீவப்படாத தலையுடன் ஒரு பிளாஸ்டிக் பையுடன் எதிர்பட்டார் அந்த குரலுக்குரியவர்.
வெளியூரிலிருந்து வருகிறோம், அதான், என்று ஏக்கத்துடன் என்றதும் அவர், சரி என் பின்னால் வாங்க என்றார்.
சற்றேறக்குறைய கோயிலின் எதிரில் அந்த வேலியில் சிறு இடைவெளிப்பகுதி தெரிந்தது. அதனருகே கால்வாய் பள்ளம். அதைத் தாண்டினால் காட்டுக்குள் செல்லும் ஒற்றையடிப்பாதை. வந்தவர், அந்த பாதையைக் காட்டி, இதைப் பிடித்துக்கொண்டு உள்ளே போங்கள். இல்லத்தை அடையலாம் என்று சொல்லிவிட்டு தன் வழியே போய் விட்டார். ஆதவன் சரிந்து கொண்டிருந்தான்.
ராஜலக்ஷ்மி முதலில் அந்த கால்வாயைத் தாண்டி ஒற்றையடிப்பாதையை அடைந்து மற்ற எங்களையும் பின் தொடரச் செய்தார். அந்த ஒற்றையடிப் பாதை நீண்டு வளைந்து சறுக்கும் பாதையாக இருந்தது. இடைப்பட்ட தூரத்தில் மேலும் மூன்று கால்வாய்களைக் கண்டோம். தாண்டினோம். கடைசி கால்வாயை ஒட்டி அந்த கேட்டிலிருந்து தொடங்கிய பாதை சென்றது. பைப் கம்பிகளூடே புகுந்து பாதையில் சேர்ந்து கொண்டோம். காட்டிற்குள் செல்ல ஆரம்பித்தோம்.


உள்ளே செல்ல செல்ல இல்லம் தெரிந்தது. கருத்த காட்டினுள் நன்கு பராமரிக்கப்பட்டிருந்த இல்லம். இரு கட்டிடங்களுக்கு இடையே டைலிட்ட பாதை சென்றது.
சரண விளியோடு மனையினருகே சென்றடைந்தோம். அங்கிருந்து சாலை மறைந்திருந்தது. வளர்ந்த மரங்கள் அடர்ந்திருந்தன.

எங்கள் நால்வரைத் தவிர விரையும் இருட்டும், ஓங்கி வளர்ந்த மரங்களும் புதர்களும் தான் எங்களுடன் இருந்தன.


ஒரு திறந்தவெளி தாழ்வாரத்தில் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் நின்றுகொண்டிருந்தான். அருகே முகம் மட்டும் திறந்த நிலையில் நின்றிருந்த உடல் சிவப்பு துணியால் மூடப்படிருக்கும் பூந்தானத்தின் சிலை இருந்தது. அந்த சிலை இன்னும் திறக்கப்படவில்லை என்று கோயிலில் தெரிந்துகொண்டோம்.

[வலமிருந்து ராஜலக்ஷ்மி, சித்ரகலா, சரஸ்வதி]

இன்று வைகுந்தம் செல்கிறேன் என்று காலை முதலே சொல்லிக்கொண்டிருக்கிறார் பூந்தானம்.
அங்கு தான் புஷ்பக விமானம் வந்திறங்க யார் யாரெல்லாம் வர விருப்பப் படுகிறார்களோ வாருங்கள் என பூந்தானம் அழைக்க அவரது இல்ல பணிப்பெண் பூந்தானத்தின் வேஷ்டியைப் பிடித்த வாறே விமானத்தில் ஏறிச் சென்றாளாம்.
அந்த புண்ணிய இடத்தில் உலக க்ஷேமத்திற்கு பிரார்த்தனை செய்தோம். அந்தி சாய்ந்து விட்ட நேரம். இயற்கையான சூழல். தெய்வீக நிகழ்வு நடந்த இடம். உணர்ந்ததெல்லாம் தெய்வீகம் தான், வேறெதுவும் இல்லை.
இதே போன்று தான் மஹாராஷ்ட்டிராவின் விட்டலனின் பக்தனான சந்த் துக்காராம் மார்ச் 9, 1650 ஆம் ஆண்டு கருட விமானத்தில் வைகுண்டம் சென்றார் என்று வரலாறு உண்டு.
த்ருட பக்தி அன்று பூந்தானத்திடம் இருந்தது. இன்று, எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டிருந்த நண்பர்களின் முயற்சி தான் இந்த அபூர்வ தரிசனத்தை உண்மையாகியது.
பின்னர், பூந்தானத்தின் இல்லக் கோயிலில் தரிசனம் செய்தவாறே குருவாயூர் திரும்பினோம்.
புனித தலங்களில் தரிசனம் அமைவதில் பகவானின் கை இருக்கத்தான் செய்கிறது. உணர்ந்துவிட்டால் அனுபவம் வேறு எல்லைக்குள் சென்று விடுகிறது என்பது சத்தியம்.
ஆண்கள் வேட்டி துண்டுடுத்தித் தான் கோயிலில் செல்ல முடியும். பேண்டுடன் சென்ற எனக்கு கோயில் நம்பூதிரி தந்த புத்தம் புதிய வேட்டி என்னை கோயிலுக்குள் செல்ல ஏதுவாக்கியது.

Leave a comment
Upload