தொடர்கள்
வலையங்கம்
தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை சந்திக்கலாமா

20260629171400605.jpeg

கர்நாடக முதல்வர் அழைப்பின் பேரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூர் செல்கிறார். அங்கு நடக்கும் இரு முதல்வர்கள் சந்திப்பில், காவிரி நதி நீர் பிரச்சனை, மேகதாது அணை போன்ற பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பார் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து முதலமைச்சர் பெங்களூர் செல்லக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கர்நாடகம் விரிக்கும் வலையில் முதல்வர் சிக்க கூடாது என்பது இவர்கள் கருத்து.

இன்று வரை காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா அரசு நமது உரிமையை மதித்து நடந்ததில்லை என்பது தான் வரலாறு. காவிரி நடுவர் மன்றம் உச்ச நீதிமன்றம் என்று போராடி தான் நமது உரிமையை நிலைநாட்டி இருக்கிறோம். இதெல்லாம் நமது கடந்த கால அனுபவங்கள். இப்போதும் காவிரியை தண்ணீர் திறக்காததால் நமது விவசாயிகள் அவதிப்படுகிறார்கள். அவர்கள் தண்ணீர் இல்லை என்று சாதிக்கிறார்கள். அதே சமயம் மேகதாது அணை கட்டி தண்ணீரை தேக்கி வைக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதி தேவையில்லை என்று சமீபத்தில் மத்திய அரசு சொல்லி இருக்கிறது. இப்படி எல்லா வகையிலும் தமிழ்நாட்டுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை தான் கர்நாடகா அரசும் சரி மத்திய அரசும் சரி இதுவரை எடுத்திருக்கின்றன. எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலமைச்சர் பெங்களூர் போவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. உச்சநீதிமன்றமே காவேரி பிரச்சனையில் இரண்டு முதல்வரும் மனம் விட்டு பேசலாமே என்று யோசனை சொல்லி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்வர் தனியாக கர்நாடக முதல்வரை சந்திக்காமல் எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன் எல்லா கட்சியும் சேர்ந்து அங்கு என்ன பேசப்போகிறோம் என்ற ஒருமித்த கருத்தை முடிவு செய்ய வேண்டும். இதுவும் ஒரு முயற்சி தான்.

கர்நாடகத்தில் தற்போதைய சூழல் சரியில்லை. பதற்றமான சூழலில் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன... தமிழக முதல்-அமைச்சர் வரும்போது கர்நாடகாவில் போராட்டம் நடந்தால் சரியாக இருக்காது. எங்கள் மாநிலத்திற்கு விருந்தினராக வருவோருக்குஎந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. சிறிது காலம் காத்திருக்கலாம். அதன் பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பேசலாம்- - கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார்...

முதல்வர் விஜய்யை முதலில் வர சொன்னது கர்நாடக முதல் டி கே எஸ் சிவகுமார் தான் .இப்போது வர வேண்டாம் என்கிறார். தண்ணீர் திறந்து விட முடியாது என்கிறார் lஇதன் மூலம் பெங்களூர் முதல்வர் போவது வீண் வேலை என்பது தெளிவாகி விட்டது சட்டபூர்வமாக முதல்வர் இதை எதிர்கொள்வது தான் சரியான வழி கர்நாடகா போக வேண்டாம்