
ஆப்பிள் ஐபோன் டுயோ: வாங்கலாமா வேண்டாமா?
ஆப்பிள் நிறுவனத்தின் புது வரவு அல்லது அவர்களின் ஸ்பெஷல் மாடலான 'ஐபோன் டுயோ' (iPhone Duo) பற்றி மார்க்கெட்டில் இப்போது பட்டையைக் கிளப்பும் விவாதங்கள் என்னென்ன? கிட்னி விற்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் யோசனையை கிளப்பியிருக்கிறது ஐபோன் டுயோ. இந்த ஆப்பிள் போனை வாங்குவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கும் டெக் பிரியர்களுக்காக...
மடிக்கும் திரை
இதுவரை சாதாரண ஐபோன்களைப் பார்த்த நமக்கு, இது புத்தகம் போல விரியும் 7.6 இன்ச் பெரிய திரை வசதியுடன் வருவது ஒரு பெரிய மாயம் தான். அதிலும் ஃபோனை மூடும்போது வெளியில் 5.4 இன்ச் திரை பாஸ்போர்ட் சைஸில் கச்சிதமாக உட்கார்ந்துகொள்வது ஆப்பிளின் இன்ஜினியரிங் வித்தை.
கண்ணைப் பறிக்கும் விலை
இதன் இந்திய விலை தொடக்க நிலையிலேயே கிட்டத்தட்ட ₹3,00,000-க்கு அருகில் தொடங்குகிறது. ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் பல வருட சேமிப்பு அல்லது ஒரு ஹனிமூனுக்கான பட்ஜெட் விலையில் ஒரு ஃபோன் வருவதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய 'அதிர்ச்சி !!
'A20 Pro' சிப்
பார்க்கத்தான் ஃபோன் மடங்கும் வடிவத்தில் மெலிதாக இருக்கிறதே தவிர, உள்ளே இருக்கும் ஹார்டுவேர் சும்மா ராக்கெட் வேகத்தில் பறக்கும். ஆப்பிளின் அதிநவீன 2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட A20 Pro ப்ராசஸர், லேப்டாப்களையே மிஞ்சும் அளவுக்கு வேகம் கொடுப்பது டெக் உலகை வியக்க வைத்துள்ளது.
இரண்டு திரைகளுக்கும் நடுவே கேமரா வித்தைகள்
Duo Preview: போட்டோ எடுப்பவர் ஒருபுறம் போனை வைத்துக் கொள்ள, போட்டோவுக்குப் கொடுப்பவர்கள் தங்களை அவுட்டர் ஸ்கிரீனில் எப்படி இருக்கிறார்கள் என்று லைவ்வாகப் பார்த்து திருத்திக் கொள்ளலாமாம்.
குழந்தைகள் போட்டோ எடுக்கும்போது கேமராவைப் பார்க்காமல் அடம் பிடித்தால், வெளித் திரையில் கார்ட்டூன் அனிமேஷன்களைக் காண்பித்து அவர்களின் கவனத்தை கேமரா பக்கம் திருப்பும் க்யூட்டான வசதி இதில் உண்டு.
ஆப்பிள் கம்பெனி எப்போதுமே ஒருபுறம் ஆச்சரியத்தையும், மறுபுறம் அதிர்ச்சியையும் கொடுக்கக்கூடிய வித்தைக்காரர்கள். "சார், இதுல புதுசா என்ன இருக்கு?" என்று கேட்டால், லோகோவைச் சற்றுத் திருப்பிப் பார்ப்பது முதல் இன்டீரியர் டிசைனை மாற்றுவது வரை எல்லாவற்றிற்கும் ஒரு லட்சத்தைத் தாண்டிய தொகையை பில் போடுவார்கள்.
இப்போது இந்த ஐபோன் டுயோவை கையில் தூக்கிப் பிடித்தால், சாதாரணமாக டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர் கூட உலகப் பணக்காரர் போல ஒரு ஃபீல் வந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால், அந்த ஃபீலுக்காக ஆண்டாண்டு காலமாய் கஷ்டப்பட்டு சேர்த்த சேமிப்பைத் கரைக்க வேண்டுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!
வாங்கலாமா?
அந்த பிராண்ட் கெத்து: ஐபோன் வைத்திருப்பவன் எப்போதுமே வம்படியாக ஒரு கம்பீரத்துடன் வலம் வரலாம். மளிகைக் கடைக்காரரிடம் பேரம் பேசும்போதுகூட, பாக்கெட்டிலிருந்து ஐபோனைத் தூக்கி டேபிளில் வைத்தால் கிடைக்கும் மரியாதை தனி ரகம்!
கேமரா மாயாஜாலம்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸும், செல்ஃபியும் உங்கள் வாழ்க்கையின் மூச்சுக்காற்று என்றால், இதில் விழும் போட்டோக்கள் உங்கள் முகத்திலுள்ள பருவைக் கூட ஒரு 'சினிமா ஆர்ட்' போல காட்டும்.
ரீசேல் வேல்யூ: ஆண்ட்ராய்டு போன் வாங்கினால் வாங்கிய மறுநாளே பாதி விலைக்குப் போய்விடும். ஆனால் ஆப்பிள் அப்படியல்ல; நாலு வருஷம் கழித்து விற்றாலும், வாங்கிய விலைக்கு அருகில் கேட்க ஆட்கள் வருவார்கள்.
வேண்டாமா?
விலை நிலவரம்: இந்திய நடுத்தரக் குடும்பத்தின் பட்ஜெட்டிற்கும், ஆப்பிள் போனின் விலைக்கும் எட்டயபுரத்திற்கும் கன்னியாகுமரிக்கும் உள்ள தூரம். இதை வாங்கினால் அடுத்த சில மாதங்களுக்கு வீட்டுச் செலவிற்குக் கையேந்த வேண்டியிருக்கும்!
சார்ஜரும் கேபிளும்: போனுக்கே லட்சக்கணக்கில் கொடுத்தாலும், சார்ஜர் அடாப்டரைத் தனியாகத் காசு கொடுத்து வாங்குங்கள் என்று ஆப்பிள் கனிவாகச் சொல்லும் போது தான் நெஞ்சடைத்து வரும்.
அடிப்படைக் தேவைகள்: ஆண்ட்ராய்டில் இருக்கும் பல இலவச வசதிகள், கஸ்டமைசேஷன்கள் ஆப்பிளில் கிடைக்காது. "நான் கூகுள் பே-ல காசு அனுப்புறேன், இதுல கொஞ்சம் சிக்கல் இருக்கு பாஸ்" என்று சொல்ல வைக்கும் சில ஆப்பிள் நுணுக்கங்கள் எரிச்சலூட்டும்.
உங்கள் பாக்கெட்டில் காசு தாராளமாகக் புரள்கிறது, "எனக்கு ஸ்டைல்தான் முக்கியம், சமூகத்தில் என் கெத்து குறையக்கூடாது" என்று நினைத்தால் – கண்ணை மூடிக்கொண்டு வாங்குங்கள்!
மாறாக, "என் சம்பாத்தியம் என்னோட வியர்வையில் வந்தது, சும்மா ஒரு 'ஆப்பிள் லோகோ'வுக்காக லட்சத்தைக் கொட்ட என்னால் முடியாது" என்று சிந்தித்தால் – இந்த ஐபோன் டுயோவை பார்ப்பதைவிட, அமைதியாக ஒரு நல்ல மிடில் கிளாஸ் ஆண்ட்ராய்டு போனை வாங்கிவிட்டு, மிச்ச பணத்தில் உங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல டூர் போய் வாருங்கள்.
ஆனால் ஒரு ஹார்ட் கோர் ஐபோன் வெறியனைக் கேட்டுப் பாருங்கள். டுயோ தேவையா என்றால் அந்த கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் இன்னொரு கேள்வி கேட்பார்கள்.
அதான்....
வாழ்வதற்கு ஒரு கிட்னி போதுமாமே ????

Leave a comment
Upload