தொடர்கள்
கவர் ஸ்டோரி
மகா கணபதியும் மகா பெரியவரும்: பேரருளின் இரு சுடர்கள்!- வேங்கடகிருஷ்ணன்

20260809215311422.jpg

தமிழக ஆன்மீக வரலாற்றில் ‘நடமாடும் தெய்வம்’ என்று பக்தர்களால் போற்றப்பட்டவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ மகா பெரியவர் (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்). அவர் அருளிய உபதேசங்களும், செய்த அற்புதங்களும் மனித குலத்திற்கு நல்வழி காட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன. அதில் முதன்மையானது, விக்கினங்களைப்போக்கும் 'மகா கணபதி' வழிபாட்டிற்கு அவர் அளித்த முக்கியத்துவம்.

விநாயகரும் மகா பெரியவரும்
மகா பெரியவர் எந்தவொரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன், விநாயகப் பெருமானை மனதாரத் தொழுது தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். "விநாயகர் வழிபாடு என்பது எளிமையானது; ஆனால் அளப்பரிய பலன்களைத் தரவல்லது" என்று அவர் அடிக்கடி கூறுவார்.

ஒருமுறை, காஞ்சிபுரத்தில் பெரியவரைக் தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், "சுவாமி, என் வாழ்க்கையில் தொடர்ந்து தடங்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. என்ன செய்வது?" என்று வருந்தினார்.

அதற்கு மகா பெரியவர், "பிள்ளையார் பிடிக்காத மனிதர் உண்டோ? அரச மரத்தடியிலோ, குளக்கரையிலோ அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு ஒரு தோப்புக்கரணம் போட்டு, இரண்டு சிதறுகாய் உடைத்து, 'விநாயகனே என் விக்கினங்களைத் தீர்' என்று வேண்டிக்கொள். உன்னுடைய தடைகள் அனைத்தும் பனிபோல் விலகும்" என்று அருளினார். அந்த பக்தரும் அவ்வாறே செய்து தன் வாழ்வில் பெரு நன்மையடைந்தார்.

தோப்புக்கரணத்தின் ஆன்மீக & அறிவியல் ரகசியம்
மகா பெரியவர் விநாயகருக்குப் போடும் தோப்புக்கரணம் பற்றி விளக்கும்போது, அது வெறும் ஆன்மீகச் சடங்கு மட்டுமல்ல; உடலுக்கும் மனதுக்கும் ஆற்றல் தரும் அரிய பயிற்சி என்பதையும் தெளிவுபடுத்தினார். காதுகளைப் பிடித்துக்கொண்டு குனிந்து நிமிரும்போது மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு, மன ஒருமைப்பாடும் ஞாபக சக்தியும் பெருகும் என்பதை அன்றே சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதே ஆகும் தெருவுக்கு தெரு பிள்ளையார் கோயில், நதிக்கரைகளில் எல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்று இந்த தமிழ் தேசம் முழுவதும் அவர் வேற எந்த சுவாமிக்கும் இல்லாத அளவு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
அவரை பிள்ளையார் என்று அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம் சர்வ லோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேஸ்வரரின் ஜேஷ்ட புத்திரர் அவர் பிள்ளை என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும் வெறுமே பிள்ளை என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாக பிள்ளையார் என்று சொல்வது தமிழ்நாட்டின் சிறப்பு. குமாரன் என்றால் பிள்ளை என்றே அர்த்தம்.

பாரத தேசம் முழுவதிலும் குமரன், குமாரசுவாமி என்றால் பார்வதி பரமேஸ்வரரின் பிள்ளையாகிய சுப்பிரமணியரை குறிக்கும். தமிழிலும் குமரக்கடவுள் என்கிறோம் ஆனால் அவரை குமரனார் என்பதில்லை குமரன் என்று தான் சொல்வர். மூத்த பிள்ளைக்கு மரியாதை தோன்ற பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம் என்று பிள்ளையாருக்கு அறிமுகம் தருகிறார் பரமாச்சாரியார்.

அடுத்து பிள்ளையாருக்கு ஏன் தேங்காய் உடைக்கிறோம் விக்னேஸ்வரர் தன் அப்பாவான ஈஸ்வரனை பார்த்து உன் சிரசை எனக்கு பலி கொடு என்று கேட்டுவிட்டாராம். எல்லாவற்றையும் உயர்ந்தது எதுவோ அதை தியாகம் பண்ணினால் தான் மகா கணபதிக்கு பிரிதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்கு தயார் என்று அறிகுறியாகத்தான் ஈஸ்வரனை போலவே மூன்று கண்களை உடைய தேங்காய் சிருஷ்டித்து அந்த காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈஸ்வரன் அனுகிரகம் செய்திருக்கிறார்.

தேங்காயை உடைக்கும் போது சிதறும் துண்டங்கள் குழந்தைகளுக்கு தான் உரிமை என்கிறார் காஞ்சிமகான். ஒரு குழந்தை மூலமாக தான் அவருக்கே அந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. அப்போது நாகப்பட்டினத்தில்(1941) சாதூர் மாச விரதம் அனுஷ்டித்து வந்திருக்கிறார் பெரியவர். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறைய சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்கு குழந்தைகள் ஒரே நெரிசலாக சேர்ந்து விடுவார்கள். திபு திபு என்று அவர்கள் ஓடி வருவதில் பெரியவர் மீது விழுந்து விடக்கூடும் என்கிற பயம் அவருடன் வந்தவர்களுக்கு.

குழந்தைகளுக்கு கண்டித்து விரட்டி இருக்கிறார்கள் அவர்கள். அப்போது துடிப்பு மிகுந்த சிறுவன் "பிள்ளையாருக்கு தேங்காய் போட்டுவிட்டு பிறகு எங்களை வரவேண்டாம் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் உரிமை தான் அதை எடுத்துக்கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்" என்று கூறியிருக்கிறான் அவன் பேசிய வேகம் அதில் இருந்த உறுதியை பார்த்தபோதுதான் உண்மைதான் குழந்தை சுவாமியின் பிரசாதத்தில் குழந்தைகளுக்கு தான் முழு உரிமையும் என்பது காஞ்சி பெரியவருக்கு தெரிந்ததாம். அவர் மேலும் விநாயகர் புராணம் விவரிக்கிறார் குழந்தைக்கு எது அழகு குழந்தை என்றால் அந்த பருவத்தில் நிறைய சாப்பிட வேண்டும் உடம்பு கொஞ்சம் கூட இளைக்க கூடாது.

ஒரு சந்நியாசி நிறைய சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசு ஆகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாக கொழுகொழுவென்று இருந்தால் தான் அழகு நிறைய சாப்பிடுவது தான் அழகு குழந்தை நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்த குழந்தை சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார் கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

20260809215429532.jpg
அந்த குழந்தைசாமியின் முழு அனுகிரகமும் பெற்றவர் மகா பெரியவர் ஒரு முறை அவர் தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தபோது காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் வீதி உலா வர துவங்கினாள். காமாட்சியை தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த பெரியவா தேனம்பாக்கத்தில் இருந்து கிளம்பினார்.

கூட இருந்தவர்களுக்கோ இவர் நடந்து அங்கே செல்வதற்குள் நான்கு வீதி புறப்பாடு முடிந்து காமாட்சி கோயிலுக்குள் சென்று விடுவாளே என்று கவலைப்பட்டனர். தேனம்பாக்கத்தில் இருந்து கிளம்பிய பெரியவா வாசலில் இருந்த பிள்ளையார் முன் நின்று கண்களை மூடி சிறிது நேரம் தியானித்தார்.

பிறகு விடு விடு என்ற கிளம்பி நடக்க துவங்கினார். பெரியவா காஞ்சிபுரம் போய் சேர்ந்த போது காமாட்சி ரதம் சரியாக பாதி வழியில் நின்று இருந்தது விசாரித்த போது கோயில் யானை திடீரென நடுரோட்டில் நின்று பிளிற ஆரம்பித்துவிட்டது. அந்த இடத்தை விட்டு அது நகர மறுத்தது அதனால் ஊர்வலம் தடைப்பட்டு போய் அங்கேயே நின்று கொண்டிருந்தது என்று சொன்னார்கள். மகா பெரியவர் நேரே யானையிடம் சென்று அதற்கு வாழைப்பழம் கொடுத்து துதிக்கையை தடவி விட்டார்.

அதுவரை முரண்டு பிடித்துக் கொண்டு இருந்த அந்த யானை சாதுவாக கிளம்பி ஊர்வலத்தின் முன்னே நடக்க ஆரம்பித்தது. பெரியவா காமாட்சி தரிசனம் செய்து பின் தேனம்பாக்கம் திரும்பினார். கூட இருந்தவர்களுக்கு வியப்பு, அப்போது தான் தெரிந்தது அவர் கணபதி முன் நின்று சொன்ன விஷயம் தான் இங்கே இந்த கணபதியை சண்டித்தனம் செய்ய வைத்து காமாட்சியை பெரியவா வரும் வரை நிறுத்தி வைத்தது என்கிற உண்மை.

20260809215512516.jpg

ஸ்ரீ காஞ்சி மடத்தில் மகா கணபதி ஹோமம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்பட்டு வந்தன. மகா பெரியவர் தனது பக்தர்களுக்கு அளித்த முக்கிய அறிவுரை:

தினமும் காலையில் எழுந்தவுடன் விநாயகரைத் தரிசிப்பது அல்லது நினைப்பது அன்றைய நாளை மங்களகரமாக்கும்.

அருகம்புல் மற்றும் எருக்கம் பூ மாலை கொண்டு விநாயகரை வழிபடுவது கிரக தோஷங்களை அகற்றும்.

காரியத் தடை நீங்க, சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து கணபதியை வழிபடுவது சிறந்தது.

பேரருளின் சங்கமம்
மகா கணபதி எப்படி எளிய வடிவில் வீற்றிருந்து அனைவரையும் காக்கிறாரோ, அதேபோல்தான் மகா பெரியவரும் எளிமையின் வடிவாக வாழ்ந்து, தம்மை நாடி வந்த பக்தர்களின் துயரங்களைத் துடைத்தார். மகா கணபதியின் அருளும், மகா பெரியவரின் ஆசிகளும் நம் அனைவரது வாழ்விலும் உள்ள தடைகளை அகற்றி, அமைதியையும் வளத்தையும் தரட்டும்.

"ஸ்ரீ மகா கணபதி ஸ்தோத்திரம் பாடுவோம்... மகா பெரியவரின் திருவடிகளைப் போற்றுவோம்!"