தொடர்கள்
தொடர்கள்
திருமுருகாற்றுப்படையும்..!! அறுபடை வீடுகளும்..!!! - 2 - ஆரூர் சுந்தரசேகர்.

thirumurukaattruppadaiyum..!! arupadai veedukalum..!!!

ஆற்றுப்படை:
சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிப்படுத்தும் பண்பினை ஆற்றுப்படை இலக்கியங்கள் விளக்குகின்றன.
இக்காலத்தில் தோன்றிய ஆற்றுப்படை நூல்களாகிய பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவற்றுக்குக் கடவுள் வாழ்த்தாக இந்த திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கிறது.

ஆற்றுப்படை என்றால் என்ன?
‘ஆற்றுப்படுத்துதல்’ என்றால் ‘வழிபடுத்துதல்’ அல்லது ‘வழிகாட்டுதல்’ என்று பொருள்.
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்;
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”
என்று தொல்காப்பிய புறத்திணையியலில் ஆற்றுப்படையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. ஒரு புரவலனிடம் சென்று பரிசில் பெற்ற பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் ஆகியோருள் ஒருவர்; பரிசில் பெறவிழைகின்ற ஒருவருக்குத் தாம் பெற்ற பெருவளத்தைக் கூறி அப்பொருள் நல்கியவரிடத்தே செல்லவேண்டிய வழி வகைகளையும் அவரின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வழிப்படுத்துவதாகும். இவ்வகையில் மேலே கூறப்பட்ட ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களும் பொருளை வேண்டி ஆற்றுப்படுத்தப்படுபவரின் பெயரோடு சார்ந்து அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை இறைவனிடம் அருளை வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவும், முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமைந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த வேறுபாடு தான் திருமுருகாற்றுப்படையை ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களில் இருந்து தனித்துவமானதாக எடுத்துக்காட்டுகிறது. இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா என்ற ஒரு முழுநீளப் பாட்டாகும். வீடுபேறு பெறத் தகுதியானவரை முருகப் பெருமானை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. (“ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும்.)
இந்நூலில் நக்கீரர் வரிசைப்படுத்திப் பாடிய முருகனின் ஆறு திருத்தலங்களைத்தான் ஆறுபடை வீடுகளாய் இன்றும் நாம் வழிபட்டு வருகிறோம்.

திரு+முருகன்+ஆற்றுப்படை = திருமுருகாற்றுப்படை சரி. ‘ஆற்றுப்படை’ என்றால் ‘வீடுபேறுகளைப் பெற்ற ஒருவன், வீடு பேறுகளைப் பெற மற்றொருவனை வழிநடத்துவது’ என்று பொருள்படும். அதாவது, ஒரு கொடையாளியிடம் தானம் பெற்று தன் வறுமையைப் போக்கிக்கொண்ட ஒருவன், வறுமையில் வாழும் மற்றொருவனுக்கு அந்த வள்ளலின் இருக்குமிடம், போகும் வழி, வள்ளலின் குணம் ஆகியவற்றை எடுத்துக்கூறி, “அங்கே சென்று உன் வறுமையைத் தீர்த்துக்கொள்” என்று வழிகாட்டுதலே ஆற்றுப்படுத்துதல் ஆகும்.
முருகனைத் தஞ்சமடைந்து, அவன் அருளைப்பெற்ற நக்கீரர், நம்மைப்போன்ற பக்தர்களுக்கு, முருகன் வாழும் ஆறு படை வீடுகளைப் பற்றி நமக்கு எடுத்துச் சொல்லி, முருகனை வணங்கி அவன் அருளைப்பெற நமக்கு வழிகாட்டி ஆற்றுப்படுத்தி எழுதியதே திருமுருகாற்றுப்படையாகும்.

திருமுருகாற்றுப்படையும், அறுபடை வீடுகளும்:
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளை தனித்தனியாகக் கூறியுள்ளது. அங்குச் சென்று முருகனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் அறுபடை வீடுகளும், மனிதர்களும் எப்படி யோக சாஸ்திரத்துடன் ஒருங்கிணைந்துள்ளது என்பதைக் காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் என்ற முதலாவது பகுதியில் முருகப் பெருமானின் திருவுருவச் சிறப்பு, அவன் அணியும் கடம்ப மாலையின் சிறப்பு. சூரர மகளிர் செயல்கள், சூரனை வதைத்த முருகனின் வீரம், மதுரை வள நகரின் சிறப்புகள், திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகு ஆகியன எடுத்துக்காட்டப்படுகின்றன.
திருச்சீரலைவாய் என்ற இரண்டாம் பகுதியில் முருகன் தன் அடியார்களுக்கு அருள் புரிய எழுந்தருளும் யானையின் இயல்பு, முருகனின் ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கரங்கள் ஆற்றும் செயல்கள், முருகன் எழுந்தருளியிருக்கும் தோற்றம் என்பன சொல்லப்படுகின்றன. திருஆவினன்குடி என்ற மூன்றாம் பகுதியில் முருகனை வழிபடும் முனிவர்கள், தேவருடன் முருகனை வழிபட வரும் மகளிர் வனப்பும் ஏனையவர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. திரு ஏரகம் என்ற நான்காம் பகுதியில் அந்தணர்களின் இயல்பும், அவர்கள் முருகனை வழிபடும் முறைமையும் கூறப்பட்டுள்ளன. குன்றுதோறாடல் என்ற ஐந்தாம் பகுதியில் குன்றக்குரவை நிகழ்ச்சி, முருகனை வணங்க வரும் பாடுமகளிர் ஆடுமகளிர் மாண்புகள் அவர்களின் சிறப்புக்கள் ஆகியனவும்; பழமுதிர்சோலை என்ற ஆறாம் பகுதியில் முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்கள், அதற்கு ஆற்றுப்படுத்தும் முறை, முருகனின் அருள்பெறும் வழி, மற்றும் அருள் புரியும் விதம் பழமுதிர்சோலையில் உள்ள அருவியின் சிறப்பு ஆகியன எடுத்துரைக்கப்படுகின்றன.
பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, “ஆறுபடை” என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது. தமிழகத்தில் முருகனுக்குப் பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாகக் கருதி வழிபடப்படுகிறது.
அறுபடை வீடும் முருகப்பெருமானும் அவர் எழுந்தருளியிருக்கும் ஸ்தலங்களில் முக்கியமானவை அவை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் தங்கித் தன்பால் வருபவர்களுக்கு அருள் செய்து பக்தர்களுக்கு இறையின்பம் தருபவர் முருகப்பெருமான்.