
உ )ஹம்ஸவாஹனா
ஹயாரூடா ஸேவி தாங்க்ரிர் ஹயமேத ஸமார்ச்சிதா I
ஹர்யக்ஷ வாஹனா ஹம்ஸவாஹனா ஹத தானவா II
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பார்கள். அனைத்திலும் முதலாவதாக அன்னையே இருக்கிறாள்.
தைத்ரீய உபநிஷதம் மாதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக என்கிறது.
தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியும் போது, தெய்வத்தையே தாயாராக நாம் நினைக்க முடியும்.
இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து, காத்துக் கொண்டிருக்கிற பராசக்தியை நாம் தாயாராக நினைப்பதால்தான் அவளை அம்பிகை என்கிறோம்.
அவள் எல்லாமாக இருக்கிறாள்.
எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்பவள் அம்பிகை.
எனவேதான் அம்பிகையை பூஜித்தால் அனைத்து தெய்வங்களையும் பூஜித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
அம்பிகை அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தின் கால்களாக மும்மூர்த்திகள் இருக்கிறார்கள் என்கிறது ஸ்ரீலலிதா. அவர்களால் பூஜிக்கப்படுபவள் பராசக்தி. ஹரி ப்ரஹ்மேந்திர சேவிதா என்கிறது அதே ஸ்ரீலலிதா.
அச்வாரூடா என்றால் குதிரைப் படையை நடத்தும் சக்தி என்று பொருள். பண்டாசுரனை அழிக்க, குதிரைப் படையை நடத்தி வருபவள். அஸ்வாரூடா திஷ்டி தாஸ்வ கோடி, கோடி பிராவ்ருதா என்று போற்றுகிறது சஹஸ்ரநாமம்.
இவளை அச்வமேதத்தால் அம்பாளை ஆராதித்துப் புருஷனாக மாறியதாக தேவி பாகவதம் கூறுகிறது.
அம்பிகையே அலைமகள், கலைமகள் என்பதுடன் துர்க்கையாகவும் இருக்கிறாள். ஹர்யஷா வாஹநாயை என்பது சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள் என்பதால் அன்னையே ஸ்ரீதுர்க்கையும் என்கிறது லலிதா த்ரிசதீ.
சசாமர ரமாவாணி சவ்ய தக்ஷிண சேவிதா என்கிறது நாமம். கலைமகள், அலைமகள் சாமரம் வீசுகிறார்கள் அன்னைக்கு. அதையே இங்கு த்ரிசதீ ஹம்சவாஹனா என்றும் அன்னை அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவள் என்று குறிப்பால் உணர்த்துகிறது.
ஹம்சத்திற்குப் பிராணன் என்றும் மற்றொரு பொருள் உண்டு. உயிர்களுக்குப் பிராணசக்தியாகவும் அம்பிகை விளங்குகிறாள்.
பண்டாசுரனை வதம் செய்யவே அம்பிகை நெருப்புக் குண்டத்தில் தோன்றுகிறாள். அசுரர்களை ஸம்ஹாரம் செய்யவே ஸ்ரீலலிதாம்பிகை தோன்றுகிறாள். நம் மனதுக்குள்ளும் பல அசுரகுணங்கள் இருக்கின்றன. அவைகளை அழித்து நம்மை புடம் போட்ட தங்கமாக மாற்றுகிறது அவளின் மேலான பக்தி.
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
என்கிறார் ஒரு கவிஞர்.
இதையே ஸ்ரீமூகர்
“அந்தரபி பஹிரபி த்வம் ஐந்துததேரந்த காந்தக்ருத ஹந்தோ
சிந்தித்த ஸந்தாநவதாம் ஸந்ததமபி தந்தநீஷி மகிமாநம்”
என்கிறார்.
காலகாலனான பரமேஸ்வரரின் மனதுக்குள் தான் என்னும் எண்ணமாகவும்,அஹம் என்னும் தத்துவமாக அமையும், தன் உணர்வாகவும், இடைவிடாமல் தன்னைப் பூஜிக்கும் அனைத்து ஜீவர்களின் உள்ளும் புறமும் இருந்து மிகச் சிறந்த ஆத்ம ஞானத்தை அளிக்கிறாள் அம்பிகை.
பிறர் நமக்கு எந்த போதனையும் செய்ய வேண்டியது இல்லை. அதற்கும் முன்னால் தப்பு செய்யாமல் இருந்தால் போதும். இதைத்தான் தாயார் தன் குழந்தை பிறந்த்து முதல் போதிக்கிறாள்.
அம்பிகை தாயாக இருக்கிறார்.
அவளுடைய சரண கமலமே கதி என்று நாம், நம் குறையைப் போக்கிக் கொள்ள அவளை அடிபணிய வேண்டும்.
தியானம் என்கிற ஒரு அழகான விஷயத்தை நமக்குள்ளே வைத்திருக்கிறாள் அம்பிகை. நம்முடைய ஆத்மாவுக்குள் ஒளியாக அவளே இருக்கிறாள். அதை நாம் செய்து கொண்டிருந்தாலே போதும், ஒரு கஷ்டமும் வராது.
சகல லோகங்களும் சௌபாக்கியத்துடன் இருக்கும். அனைவரின் மனதிலும் அமைதி பரிபூரணமாக இருக்கும்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று காரியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மா பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று ரூபம் கொள்கிறது. ஆனால் இந்த மூன்று வட்டத்தையும் தனக்குள் கொண்டு இருப்பவள் பராசக்தி,
அவளே நம் உள்ளத்தில் ஒளிந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறாள்.
அம்பிகையின் தியானம் நம்முடைய மனதில் இருக்கும் தாகத்தைத் தீர்க்கிறது. ஒளி கொடுக்கிறது. நிலவின் ஒளியைப் போல இதமாக இருக்கிறது.
அம்பிகை அமிர்தமாக இருக்கிறாள். அதை அவளுடைய தியானத்தின் மூலம் நாம் பருக வேண்டும்.
ஞானம் இல்லை என்றாலும், அறிவிலியாக இருந்தாலும் அம்மா என்றாலே அனைத்தையும் அள்ளித் தரும் கருணாசாகரம் ஸ்ரீலலிதா. அவளின் ஆயிரத்தெட்டு, முன்னூறு நாமங்களைச் சொல்ல முடியாவிட்டாலும் அம்பிகே, தாயே, பராசக்தி ஸ்ரீலலிதே என்று எப்படி அழைத்தாலும், குழந்தையின் அழுகை கேட்டு ஓடிவரும் தாய்போல் பறந்தோடி வந்து நம்மைக் காப்பாள் அம்பிகை.
*************************

Leave a comment
Upload