
இவ்வுலகில் மிகவும் உயர்ந்தது, ஒப்புவமை சொல்ல முடியாதது நம் உயிர்.
ஒரு மனிதனுக்கு உயிரைக்காட்டிலும் மேலான ஒன்று இருக்க முடியாது. இம்மண்ணில் நம் இயக்கங்கள், நம் உழைப்பு எல்லாம் உயிரை காக்கவும், வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளவும்தான். விலை மதிப்பில்லாத உயிரை அலட்சியத்தால் போக்கிக் கொள்வது பெரும் குற்றம்.
எட்டு இளைஞர்கள் சமீபத்தில் விபத்தில் சிக்கி உயிர் இழந்த சம்பவம் நம்மைப் பதற வைக்கிறது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் இறுதியாண்டு பயிலும் ஜோசுவா ஹில்சன், முரளிகிருஷ்ணன், பிரசன்னா, சூர்யா, யுவசஞ்சித் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவர்கள் ஜீவா, விஷ்வா சந்தோஷ் ஆகிய நண்பர்கள், கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் 3 நாட்கள் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். நண்பரின் புதிய காரை எடுத்துக் கொண்டு அனைவரும் சென்றார்கள்.
குருவாயூர் போய் விட்டு கொடுங்கல்லூர் திரும்பிக் கொண்டு இருக்கையில் அவர்களது கார் சாலை சீரமைப்பு காரணமாக மாற்றுப் பாதையில் திருப்பி செலுத்த வேண்டி இருந்தது. அவ்வாறு வந்த கார் திருச்சூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் மேல் பயங்கரமாக மோதியது. எட்டு மாணவர்களும் அந்த இடத்திலேயே இறந்தனர். கார் பெரும் சேதம் அடைந்ததால், காரை வெட்டி எடுத்து மாணவர்களின் உடல் உறுப்புகளை சேகரித்துள்ளனர்.

விபத்தில் மரணம் அடைந்த எட்டு பேரும் 20 -21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். வாழ்க்கைப்பற்றி அவர்களும் அவர் தம் பெற்றோரும், குடும்பத்தினரும் கட்டி வைத்த கனவுகள் சடுதியில் சரிந்து போயிற்று. வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத துன்பத்தை அவர் குடும்பத்தினர் சுமந்தே தீர வேண்டும். எதனாலும், எவராலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.
பாதுகாப்பான பயணம் எத்தனை முக்கியம் என்பதை நாம் இளைஞர்களுக்குக் கற்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டோம் என்றே கருதுகிறேன். சாலை விதி மீறல், அதீத வேகம், மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவது, இளமைக்கே உரிய அலட்சிய போக்கு என்ற காரணங்களுடன் அன்றாடம் நாம் பயணிக்கும் சாலைகளில் விபத்துக்களைக் காண்கிறோம்.
இவற்றுள் பெரும்பாலும் இளைஞர்களே அதிக இழப்புகளைச் சந்திக்கிறார்கள். கேரளாவில் உயிரிழந்த நண்பர்கள் மது அருந்தி விட்டு சென்றதாகவும், அங்குள்ள போலீசாரிடம் வாக்குவாதம் செய்து விட்டு வேகமாக வண்டி ஒட்டி சென்றதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் மறைந்த உயிர்கள் திரும்ப போவதில்லை.
இதைப்போலவே நாமக்கல் அருகே நடந்த மற்றொரு சாலை விபத்து நம்மை பதைபதைக்க வைக்கிறது.
திருச்செங்கோட்டை சேர்ந்த சேகர், அமுதா தம்பதியினரின் மகள்கள் நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா மூவரையும் அவரது சித்தப்பா மகளான கல்லூரியில் படிக்கும் கலைச்செல்வி பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். வரும் வழியில் சாலையைக் கடக்கும் போது, தனியார் பேருந்தில் மோதி நால்வரும் மரணமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள் இழந்து அக்குடும்பம் கண்ணீரில் தத்தளிக்கிறது.
ஒரே வண்டியில் நான்கு பேர் பயணிப்பது, சாலை விதி மீறல், ஹெல்மட் போடாமல் சென்றது என்று இந்த விபத்துக்கும் காரணங்களை சொல்கிறார்கள். ஆனால் இந்த வண்டியை ஓட்டிய கலைச்செல்விக்கு வயது 19. இறந்த குழந்தைகள் 12, 13, 17 வயதுடையவர்கள். என்ன சொல்லி அவர்களை ஆற்ற முடியும்?

பள்ளி விட்டதும் இரு சக்கர வண்டியில் கலைச்செல்வி அழைத்து வருவது தினசரி வழக்கம் என்கிறார்கள்.இத்தனை பேரும் ஒரே வண்டியில் செல்லும் போது பேலன்ஸ் பண்ணி ஓட்டுவது கடினம். இச்செயலை பெற்றோர்கள் தினமும் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் தெரியவில்லை.
பள்ளிக் குழந்தைகளை ஒன்றோடு ஒன்றாக அடுக்கிக் கொண்டு நம் கண் முன் பறக்கிற ஆட்டோகாரர்கள் இத்தகைய விபத்துக்களைப் பார்த்த பின்பு திருந்த வேண்டும். பள்ளி நேரத்தில் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்கள் எல்லோரும் ஆபத்தை வலிய அழைத்துக் கொள்கிறார்கள்.
புத்தாண்டு, கொண்டாட்ட நாட்கள், விடுமுறை தினங்களில் நண்பர்களுடன் மது அருந்துவதும், பின்னர் மதுவின் ஆதிக்கத்துடனே கார்களில், டூ வீலர்களில் பறப்பதையும் நாம் பார்க்கிறோம். அந்நாட்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதையும் காண்கிறோம் .
அரசு, சட்டம், சாலை விதிகள், காவல்துறை உதவி , நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டல், என நம் பாதுகாப்புக்கான அமைப்புகள் பல இருக்கின்றன . எல்லாம் இருந்த போதும் கவனக்குறைவு, அதிக வேகம், மிதமிஞ்சிய அலட்சியம், நண்பர்களோடு சேரும் போது தோன்றும் சாகச மனோபாவம், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாத அலட்சியம் இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
விபத்துகளைக் காணும் போதும்,கேள்விப்படும் போதும் நாம் கண்ணீர் விடுகிறோம். ஆனால் அவை கற்பிக்கும் பாடத்தை நம் மறந்து விடுகிறோம். நம் இளைஞர்களும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை .
ஒரு விபத்து தரும் வேதனை, துக்கம், உளைச்சல், வலிகளை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள். மாறாத துயர நினைவுகளை, தழும்புகளாக அவர்களும் அவரைச் சார்ந்தவருக்கும் சுமக்கிறார்கள்., உயிருக்கு உயிராக வளர்த்த மகன்களை, மகள்களை மண் தின்ன கொடுக்கிறார்கள். பின்னர் வாழ்நாள் முழுவதும் கண்ணீரை சுமக்கிறார்கள்.
பெற்றோரும்,கல்வி நிறுவனங்களும் இன்னும் பொறுப்பை, கவனத்தை , விழிப்புணர்வை தம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்
இளைஞர்கள் விரும்பாத போதும், 'கண்டிப்பு' என்னும் கசப்பு மருந்தை அவர்களுக்கு புகட்ட வேண்டும், சாலைகளில் கவனமாக பயணிக்க வழிகாட்ட வேண்டும்.
சாலைகளில் பத்திரமா போங்க பிள்ளைகளே, வாழ்வென்பது வரம் !

Leave a comment
Upload