செப்டம்பர் 11, 2026 அதிகாலை... மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் வம்சாவளியில் வந்த டாக்டர் கவிஞர் இரா. உமா பாரதியிடம்.
அவரிடமிருந்து வந்த நினைவாஞ்சலி தான் இதோ : -
“பாரதி எதைத்தான் பாடவில்லை.
மண்ணைப் பாடும் போது வானளவு உயர்ந்து நின்றான். மண்ணில் வாழும் மாந்தரை பாடினான்.
அவனுடைய கண் என்னவோ இந்த உலகத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
அவன் எண்ணம் உலக சகோதரத்துவத்தை நாடியது.
காக்கை குருவி கடல் மலைகள் எல்லாமே தனது ஜாதி என்று பெருமை அடித்துக் கொண்டான்.
39 ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்த வாழ்வில் அவர் படைத்த புது சாத்திரங்கள் தான் அவரை உலகளாவிய நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
பாரதியின் பாதம் பதிந்த இடங்களான எட்டயபுரம் கடையம் ஆம்பூர் கல்லிடைக்குறிச்சி திருநெல்வேலி பொட்டல்புதூர் காரைக்குடி சென்னை பாண்டிச்சேரி ஈரோடு திருவனந்தபுரம் சூரத் காசி கல்கத்தா திருவண்ணாமலை இவை எல்லாம் அந்தந்த பிரதேச மண்ணும் நிலப்பண்பும் மகாகவி ஆட்கொண்டு அதன் பாதிப்புகள் பாரதியின் சொற்களில் பெரும் பங்குகள் வகித்தன என்பது தான் உண்மை.
தேசிய தாகம் மிகுந்து இருந்த அதே பாரதியின் மனதில் தெய்வீக வேட்கையும் சேர்ந்து அணையாமல் எரிந்து கொண்டிருந்தது என்பதை பாரதியின் கவிதைகளில் ஆராய்ந்து பார்த்தால் நம்மால் உணர முடியும்.
முன்னை முனிவர் உணர்ந்த மறை பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாலும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?
என்ற பாரதியின் வரிகள் இதைத்தானே நமக்கு தெளிவிக்கின்றன.
விண்ணையே கட்டியாலும் வேட்கையை பாரதி பெற்றான் என்பதை கீழ்க்கண்ட வரிகள் சொல்கின்றனவே
கண்ணில் தெரியும் காட்சி கைகள் கவர்ந்திட மாட்டாவோ! அட
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதோ!!
வெற்றி எட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே! என்றும்,
வேதம் என்றும் வாழ்க என்றும் கொட்டுமுரசே!!
என்ற வரிகளில் நாடும் வாழ வேண்டும் நாமும் வாழ வேண்டும் என்ற தொனி ஒலிக்கிறது அல்லவா!!!.
அந்த மகாகவியின் மந்திர சொற்களில் நாம் எல்லோரும் மயங்கி கிடக்கும் இந்த வேளையில் அனைவருக்கும் மகாகவியின் ஆசி கிட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று சுருக்கமாய் பெருமைபடச் சொல்கிறார்.


Leave a comment
Upload