
புறநானூறு சங்க காலத்துப் புறவாழ்வை படம்பிடித்துக் காட்டும் பாடல்களால் ஆனது.
குறிப்பாக அரசர்கள், பெருவீரர்கள், வள்ளல்கள் போன்றோரின் புகழ், வீரம், கொடை, அருள்தன்மை போன்ற குணநலன்களைப் பேசும் சிறப்பான பாடல்கள் அமைந்தது.
இதில் ஆண்பாற் புலவர்கள் மட்டுமின்றி பல பெண்பாற் புலவர்களும் யாத்த பாடல்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். சங்க காலத்தில் கல்வியில் சமநிலை இருந்ததும் இதனால் அறிய கிடைக்கிறது.
மேலும், அந்நாளைய புலவர்களின் பேச்சுக்கு மதிப்பிருந்த காலமாகவும் அறியலாம். மன்னனுக்கே அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் துணிவும் உயர்நிலையும் புலவர்களுக்கு இருந்ததும் தெரிய வருகிறது. இவ்விதமான நல்வழிப்படுத்துவதற்கு என்று ‘செவியறிவுறூஉ துறை’ என்ற பகுப்பே இப்பாடல்களில் உள்ளது.
இன்று நாம் காண இருக்கும் பாடலை எழுதியவர் பிசிராந்தையார் ஆவார். பாண்டிய மன்னனான அறிவுடை நம்பிக்கு ஒரு வழிகாட்டலாக இந்தப் பாடலை பாடியிருக்கின்றார்.
இந்தப் பாடல் பாடாண் திணையில் நேரிசை ஆசிரியப்பாவாக அமைந்திருக்கிறது.
இனி பாடல் :
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்.
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே
பாடல் விளக்கம் :

‘மா’ என்ற சிறிய அளவேுயுள்ள நெல்வயலே ஆனாலும், அதில் நன்கு விளைந்து முற்றிய நெல்லை அறுவடை செய்து, அதிலிருந்து பெற்ற அரிசியை சமைத்து, பெரும் சோற்றுக் கவளமாக்கி, யானைக்கு ஊட்டி வந்தால் அதுவே பல நாட்களுக்கு அதன் பசியாற்றப் போதுமானது.

அவ்வாறன்றி நூறு பெரும் நெல்வயல்களாகவே இருந்தாலும், யானை அவற்றில் நுழைந்து, தன் உணவை தானே உண்ண முற்படுமாயின், அது உண்பதைக் காட்டிலும் அதன் கால்களில் மிதியுண்டு வீணாகும் நெல்லின் அளவு பற்பல மடங்கு அதிகமாகும்.
அது போலவே, அறிவில் சிறந்த மன்னவன் தன் மக்களுக்கு தக்க வரிவிதிப்பு முறையறிந்து நெறியோடு வரி விதித்தால், நாடு வளம் ஆகிச் செழிக்கும்.
அவ்விதமாக இல்லாமல், மதியூகமில்லாத மெல்லியனான மன்னவனோ, தன் விருப்பக் குறிப்பறிந்து தானும் அதனையே கூறி எத்திப் பிழைக்கும் சுற்ற பரிவாரங்களுடன் சேர்ந்து, மக்கள் பால் பரிவின்றி வருத்தி அளவுக்கதிகமாக இறை விதித்தானேயானால், அவனும் கெட்டு நாடும் நலிவுற்று சீர்கெடும்.
அருஞ்சொற் பொருள் :
காய்நெல் = முற்றிய நெற் கதிர்கள்
மா = (தோராயமாக) ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு நில அளவு
செறு = வயல்
தமித்து புக்கு =தனித்துப் புகுந்து
யாத்து= சேர்ந்து
நத்தும் = வளம் பெருகும்
மெல்லியன் = அறிவு நுட்பம் குறைந்தவன்
வரிசையறியா = தகுதி அறியாத
வைகலும் = நாள்தோறும்
பரிவு தப = அன்பு கெடும் வகையில்
நச்சின் = விரும்பினால்

Leave a comment
Upload