தொடர்கள்
ஆன்மீகம்
விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை..!! - சுந்தரமைந்தன்.

​ Lord vinayaka's favorite Steamed rice dumpling..!!

விநாயகர், நமது வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் வாரி வழங்கும் முழுமுதற் கடவுளாகக் கருதப்படுகிறார். விநாயகருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை மிகவும் பிடித்தமான உணவு என்பதால், அவருக்கு 'மோதகப்பிரியர்' என்றொரு பெயரும் உண்டு. விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்குப் பிரியமான கொழுக்கட்டை நைவேத்தியமாக வைப்பது, நம் முன்னோர்களின் வழிபாட்டு வழக்கமாகும்.

Lord vinayaka's favorite Steamed rice dumpling..!!

புராணத்தில் கொழுக்கட்டை:
ஒருமுறை விநாயகப் பெருமான் வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார். அவருடன் பல தேவர்களும் உடன் சென்றிருந்தனர். வசிஷ்ட முனிவர் மற்றும் அவரது மனைவி அருந்ததி (இந்து புராணங்களில் அருந்ததி கற்புக்கரசியாகவும், பக்தி மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாகவும் போற்றப்படுகிறார். திருமண வைபவங்களின் போது மணமக்கள் வானில் உள்ள 'வசிஷ்டர்-அருந்ததி' நட்சத்திரத்தைப் பார்க்கும் சடங்கு இன்றும் வழக்கத்தில் உள்ளது)
விநாயகருக்கும் மற்ற தேவர்களுக்கும் வசிஷ்ட முனிவர், அருந்ததி இருவரும் உணவு பரிமாறினர். பரிமாறிய அனைத்து உணவுகளை உட்கொண்ட பிறகும் விநாயகரின் பசி அடங்கவில்லை. அப்போது அருந்ததி, வெள்ளை மாவினால் சொப்பு செய்து அதனுள் அமிர்தமயமான பூர்ணத்தைப் பொதிந்து வைத்து மோதகம் தயாரித்து, (கொழுக்கட்டை) விநாயகருக்கு அன்போடு தந்தார்.

Lord vinayaka's favorite Steamed rice dumpling..!!

அந்த ஒரு கொழுக்கட்டையைச் சாப்பிட்ட உடனே விநாயகரின் பசியானது முழுமையாக அடங்கி, அவர் திருப்தியடைந்தார். தன் பசியைப் போக்கிய அந்த உணவையே தனக்கு மிகவும் பிடித்தமான உணவாக இந்த உலகுக்கு உணர்த்தும் விதத்தில், கொழுக்கட்டையை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருப்பதாகப் புராணங்கள் கூறுகிறது.

கொழுக்கட்டையின் ஆன்மீக தத்துவம்:

Lord vinayaka's favorite Steamed rice dumpling..!!

விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையின் வடிவம் மற்றும் சுவைக்குப் பின்னால் ஒரு ஆழமான ஆன்மீக தத்துவார்த்த அர்த்தங்கள் ஒளிந்துள்ளன.
வடிவத்தின் தத்துவம்: கொழுக்கட்டை மேல்நோக்கி கூர்மையாகவும், கீழ்ப் பகுதி அகலமாகவும் அமைந்திருப்பது ஒரு தத்துவத்தை உணர்த்துகிறது. இதன் கூர்மையான மேல் பகுதி, மனித மனம் இறைவனை நோக்கி ஒருமுகப்பட வேண்டும் (மனக்குவிப்பு) என்பதை உணர்த்துகிறது.
இதன் வடிவம் பிரணவ மந்திரமான 'ஓம்' வடிவத்தை அல்லது ஒரு முட்டையின் (அண்ட வடிவம்) வடிவத்தைக் குறிக்கிறது. இது பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் எல்லையற்ற தன்மையையும் காட்டுகிறது. விநாயகரின் கையில் இருக்கும் கொழுக்கட்டை, ஜீவாத்மா (மனிதன்) பரமாத்மாவுடன் (இறைவன்) இணைய வேண்டும் என்ற ஞானத்தையும் போதிக்கிறது.

Lord vinayaka's favorite Steamed rice dumpling..!!

சுவையின் தத்துவம் (வெளியே வெள்ளை, உள்ளே இனிப்பு): கொழுக்கட்டை செய்யும் முறையும் அதன் சுவையும் மனித வாழ்க்கையின் ஆன்மீகப் பயணத்தைக் குறிக்கிறது.
கொழுக்கட்டையின் வெளிப்புறம் சுவையற்ற, வெள்ளை நிற பச்சரிசி மாவால் மூடப்பட்டிருக்கும். இது மனிதனின் வெளி உலக ஆசைகள், மாயை மற்றும் தூய்மையான மனதைக் குறிக்கிறது. உள்ளே இருக்கும் வெல்லம் மற்றும் தேங்காய் கலந்த இனிப்புப் பூரணம், மனிதனுக்குள் இருக்கும் ஆத்மாவையும், இறைவனின் எல்லையற்ற ஆனந்தத்தையும் (பேரின்பம்) குறிக்கிறது.

Lord vinayaka's favorite Steamed rice dumpling..!!

நாம் நமது அகந்தை மற்றும் மாயையை அழித்தால் மட்டுமே, உள்ளே இருக்கும் இறைவனின் உண்மையான இனிப்பை (ஞானத்தை) அடைய முடியும் என்பதையே இது உணர்த்துகிறது.

Lord vinayaka's favorite Steamed rice dumpling..!!

2026 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில், உங்கள் இல்லங்களிலும் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து, விநாயகப் பெருமானின் முழுமையான அருளையும், நீங்காத செல்வத்தையும், மன அமைதியையும் பெற வாழ்த்துகிறோம்..!!

Lord vinayaka's favorite Steamed rice dumpling..!!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!