
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த டி-20 போட்டியில் முதலில் பேட்டிங்கிற்கு களமிறங்கிய இந்திய அணி 184 ரன்கள் என்ற இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 111 மட்டுமே எடுத்து, இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவினார்.துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில், ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் சிறப்பான தொடக்க ஆட்டமும், அதைத் தொடர்ந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த பந்துவீச்சும் இந்தியாவிற்கு எட்டாவது ஆசியக் கோப்பை பட்டத்தை (டி20 வடிவில் நான்காவது முறை) பெற்றுத் தந்தன; இதில் இந்தியா முந்தைய சாம்பியனான இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மகளிர் டி20 ஆசியக் கோப்பையில் ஷஃபாலி மற்றும் மந்தனா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 129 ரன்கள் குவித்து, இந்திய அணியை 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் என்ற வலுவான நிலைக்கு உயர்த்தினர். இந்திய வீராங்கனைகள் ஐந்து கேட்சுகளைத் தவறவிட்ட போதிலும், தீப்தி சர்மா மற்றும் என். ஸ்ரீ சரணி தலைமையிலான சுழற்பந்து வீச்சு கூட்டணி, இலங்கை அணியை ஆட்டத்தின் முழு நேரமும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இலங்கை அணியின் சமரி அதபத்து 36 ரன்களுடன் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தாலும், இறுதியில் இந்த அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிரான மோதல்களில் இந்தியா தற்போது 6-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மகளிர் ஆசியக் கோப்பையை இந்தியா எட்டாவது முறையாக வென்று வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசியக் கோப்பையின்போது நிகழ்ந்ததைப் போன்ற ஒரு சூழலே ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயிலும் காணப்பட்டது; ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வெற்றியைக் கொண்டாடும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.இதில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவரும் அந்நாட்டின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இதில் இந்திய மகளிர் அணி கலந்து கொள்ளாததால், இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கை அணிக்கு மட்டுமே பதக்கங்களை வழங்கினார். அதன்பின்னர் விழா திடீரென நிறைவு செய்யப்பட்டது.

கிரிக்கெட் என்றாலே ஆண்களுக்கான ஆட்டம் என்றிருந்த காலம் மாறி, ஆண்கள் அணியை மிஞ்சும் வகையில் மகளிர் அணி இப்போது தொடர்ந்து பல வெற்றிகளை குவித்த வண்ணம் உள்ளனர். இவர்களது வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்றும், அடுத்து நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் இவர்கள் வெற்றி பெறவேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்!

Leave a comment
Upload