தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 22 - ஜி.ஏ.பிரபா

2026081900103169.jpeg

22) பாபசமனீ

​ஹத்யாதி பாபசமனீ ஹரிதச்வாதி ஸேவிதா I

​ஹஸ்திகும்போத்துங்க குசா ஹஸ்திக்ருத்தி ப்ரியங்கனா II

​மனிதர்களாகப் பிறந்தவர்கள் தெரிந்தும், தெரியாமலும் பல பாபங்களைச் செய்கிறார்கள், கொலை, துரோகம், அதர்மம் என்று தீமைகளே நம்மைச் சுற்றி இருக்கிறது. மன்னிக்க முடியாத பல குற்றங்களை மனிதர்கள் செய்கிறார்கள்.

​இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை. பிறப்பு, இறப்பு என்பது மட்டுமே உண்மை. மற்ற எல்லாமே மாயை. எதுவும் நம் கூடவே வரப் போவது இல்லை. என்றாலும், நாம் நிரந்தரமானவர்கள் என்ற எண்ணமே எல்லோரிடமும்.

துன்பங்களே ஒருவனை தூய்மையாக்குகிறது.

முடிவில் எதுவும் நிலை இல்லை. மாயை என்ற உண்மை அறிந்து, ஞானம் பெற்று, தவறுக்கு வருந்தும் போது காலம் முடிந்து விடுகிறது.

​அந்த நேரத்தில் நம்மை மன்னிப்பவள் அம்பிகை மட்டுமே. எனவேதான் பாபசமனீ, பாபாரண்ய தவாநலா என்று துதிக்கிறது ஸ்ரீலலிதா.

அவள் தேவர்களாலும் துதிக்கப்பட்டவள். பண்டாசுரன் என்னும் அரக்கனை அழிக்க அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள் ஸ்ரீஅன்னை. யானைத் தோல் போர்த்திய பரமசிவன் பத்தினி.

​புலித் தோல், மழு, யானைத் தோல், நாகம், தலையில் கங்கை அணிந்தவன் ஈசன். இவை எல்லாம மனிதனின் குணங்களைக் குறிப்பவை. அடக்க முடியாத, கொடிய உயிரினங்களைத் தன் ஆடையாகக் கொண்டவன் பரமசிவன். அவனே அம்பிகையின் கடைக்கண் பார்வைக்குக் கட்டுப்படுகிறார். அமுதீசர் ஒரு பாகமகலாத அன்னையே என்கிறார் அபிராமி பட்டர்.

​நமது இன்னல்கள் இன்னதென்று ஒருவரிடத்தில் போய்ச் சொல்லி, அவர்கள் அன்போடு ஓடி வந்து நம் இன்னல்கள் தீர்ப்பது என்பது முடியாத விஷயம்.

மஞ்சள் படிந்த திருமேனி உடைய அன்னை மனம் வைத்தால் மட்டுமே நம் இன்னல்கள் நீங்கி வாழ முடியும்.

​எனது இன்னல் இன்னபடியென்று வேறொருவருக்கு

​இசைத்திடவும் அவர்கள் கேட்டு இவ்

​இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள்

​எள்ளளவும் முடியாது.

என்ற கூறும் அபிராமி பட்டர்.

​நின்னைக் கருது நல்லடியார்க்கு எளிதில் வந்து

சடுதியிற் காத்து ரட்சித்து

என்பவர் உன் பாதம் நம்பினேன் என்கிறார்.

இந்த நம்பிக்கை என்ற விஷயம்தான் அம்பாளிடம் முக்கியம்.

​நம்பிக்கை உள்ளவர்களுக்கு எந்த பூஜையோ, மந்திரங்களோ தேவையில்லை. அந்த நம்பிக்கையின் வடிவமாக அம்பிகை விளங்குகிறாள்.

அவளை அம்மா என்று அழைத்தால் போதும். ஓடி வந்து விடுவாள். அனைத்திற்கும் மேலானவளாய் இருப்பதால்தான் ஈசனின் பிரியமான்வளாய் இருக்கிறாள்.

அவள் மதுரம் என்றும் குறிப்பிடப்படுகிறாள். மதுரம் என்றால் பிரியத்திற்கு இடம் என்ற பொருள் உண்டு. எல்லாருக்கும் பிரியமானவள். எல்லோராலும் விரும்பப்படுகிறவள் தாய்.

எல்லோருக்கும் பிரியமானவள்தானே அம்மா.

அவளே தீரா என்றும் அழைக்கப்படுகிறாள். அறிவுள்ள பண்டிதை. தைரியத்தை உடையவள்.

அவள்தானே அமுது தருகிறாள். அறிவை அமுதமாய் ஊட்டுகிறாள்.

குழந்தைக்கு அன்னையே முதல் ஆசிரியையாகவும் இருக்கிறாள். குழந்தைக்கு அறிவையும், தைரியத்தையும் கொடுத்து, இந்த உலகில் வாழ வழி காட்டுபவள்.

எனவேதான் அவள் பண்டிதர்களால் வழிபடப்படுகிறாள்.

“என்னை பாதாளத்தில் தள்ளினாலும் சரி, எல்லா உலகங்களின் அதிபதியாக ஆக்கினாலும் சரி. அம்மா உன் சரணங்களை நான் விடமாட்டேன்” என்று ஸ்ரீ சுவாமிகள் கூறுகிறார்.

ஆனந்தம் என்ற ரசத்தை கொடுத்து அனைவராலும் வழிபடப்படுபவள். சைதன்யம் என்பது சித்ரூபம். ஆத்ம சைதன்யம் என்பது ஆத்மாவின் சித்ரூபம். இந்த ஆத்ம ரூபத்தால் வழிபடப்படுபவள் அம்பிகை.

அவள் ஸ்தோத்திரப் பிரியை. அவளை வழிபட வித்யா உபாசகர்களாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அம்மாவை அழைப்பதற்கு மொழிகள் தேவையா?

அம்மாவுக்குத் தெரியும், குழந்தையின் அழுகை எதற்கு என்று. அவளை நினைத்தாலே போதும். தன் சாம்ராஜ்ய பதவியிலிருந்து இறங்கி வந்து நம்மளை கட்டி அணைத்து காப்பாற்றுபவள் ஸ்ரீ லலிதா.

​தன் உயிரினும் மேலான மனைவியின் புன்னகை ஒன்றிலேயே மகிழ்ந்து ஈசன் அனைத்து வரங்களையும் அள்ளி வழங்குவார் என்கிறார் ஆதிசங்கரர்.

​“அன்னையே உன் புன்சிரிப்பு ஒன்று போதும். அதில் மயங்கி ஈசன் உன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களைத் தந்து விடுவார்”- என்கிறார்.

தன் வாம பாகத்தை அளித்தவர் அல்லவா ஈசன். அவரின் இதயத்தில் நிறைந்து இருப்பவளே நம் சிந்தையும், செயலுமாக இருக்கிறாள்.