தொடர்கள்
அழகு
உலக முதியோர் தின வாழ்த்துகள் – மோகன் ஜி, சித்திரம் தேவா

2026901141940688.jpeg

01.10.2026 உலக முதியோர் தினம்

மூப்பின் ராப்

கிழவி:

தடியெதுக்கு? ஏய் கிழவா !

துள்ளிக் குதித்தாடு!

தாடையிலே கையெதுக்கு?

தாவி விளையாடு!

நாட்படவே மரம் வளரும்.

காலமேறக் கல் இறுகும்.

வயதானால் மனிதன் மட்டும்,

மூப்பென்று முடங்குவதேன் கிழவா?

முனைந்திடா தடங்குவதேன் கிழவா?

கிழவன்:

ஆடியாச்சு ஆட்டமெல்லாம்.

ஆயிரமாய்ப் பார்த்தாச்சு!

ஆடுவதெலாம் அடங்குமடி கிழவி!

ஆடுசதை ஓய்ந்துபோச்சு கிழவி!

துள்ளவொரு காலமடி! பார்த்ததெலாம்

அள்ளவொரு காலமடி!

உள்ளமதில் அத்தனையும்

அசைபோடும் காலமிது கிழவி!

ஆடியிங்கு ஆவதென்ன கிழவி?

கிழவி:

சோம்பலின் பேச்சிதைய்யா! வீணான

சோர்வதன் புலம்பலைய்யா இதுவே!

காலுதறி எழுந்திரைய்யா! என்னோடு

காதலிலே பாடுமய்யா கிழவா!

கிழவன்:

அடடே! காதலின்னும் உண்டோடி?

படபடன்னு வருதேடி! கிழவி!

வாடி! ஆட கண்ணாட்டி! ஆடினபின்

பொக்கைவாய் முத்தமொரு சுகமடியோ கிழவி!