
பிரசன்னாவின் அறைக்கதவை எவ்வளவோ தட்டிப் பார்த்தும் திறக்காததால் சுந்தரமும் சுகன்யாவும் என்ன செய்வது என்று திகைத்தனர்.
சுந்தரம் சுகன்யா இருவரும் டாக்டர்கள். தங்கள் மகன் பிரசன்னாவும் டாக்டராக வேண்டும் என்று விரும்பினர். பிரசன்னாவும் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் நன்றாகவே படித்து பிளஸ் டூ முடித்து நீட் தேர்வு எழுதியிருந்தான்.
தோல்வியால் வருத்தமுற்றிருந்த பிரசன்னா பொறுக்க முடியாமல் அறைக்குள் சென்று தாளித்துக் கொண்டு விட்டான்.
அரை மணி நேரமாகியும் பிரசன்னா கதவை திறக்கவில்லை. இருவரும் வெளியிலிருந்து "பிரசன்னா வெளியே வா. அடுத்த முறை நன்கு எழுதி தேர்வாகிவிடலாம். பயப்படாதே. நீ நன்றாகத்தான் எழுதியிருப்பாய். தேர்வு முடிவுகளில் தவறு இருக்கலாம். வா சாப்பிடலாம். கதவைத் திற" என்று மாறி மாறி கதறினர்.
சோகம் கவிந்த முகத்தோடு வெளியே வந்த பிரசன்னா "அம்மா பசிக்குது" என்றபடி டைனிங் டேபிள் முன் சென்று உட்கார்ந்தான்.
சாப்பிட்டு முடிந்ததும் "அப்பா நான் இன்று மதியம் நண்பர்களோடு ஏதாவது சினிமாவுக்கு போகலாமா?" என்று கேட்டதும் "தாராளமாக உனக்கும் ஒரு மாறுதலாக இருக்கும்" என்றார் சுந்தரம்.
"குட்" என்று ஆமோதித்தாள் சுகன்யா.
மாலை ஆறு மணியளவில் சுந்தரம் பணிபுரியும் அரசு மருத்துவமனைக்கு இருபதுக்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர்.
அவர்களில் பிரசன்னாவும் ஒருவன்.
அதிர்ச்சியுற்ற சுந்தரத்தால் மயங்கிய நிலையில் இருந்த பிரசன்னாவிடமிருந்து எவ்வித தகவலும் பெற முடியவில்லை. இருப்பினும் மற்ற மருத்துவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையினை வழங்கிக் கொண்டிருந்தார் டாக்டர் சுந்தரம்.
அப்போது டிவி திரையில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் அன்று மாலை கடைத்தெருவில் துணிக்கடையொன்றில்
ஏற்பட்ட தீ விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தன் உயிரை பணயம் வைத்து ஒரு கர்ப்பிணிப்பெண் உட்பட நான்கு பேரை காப்பாற்றிய பிரசன்னாவை பாராட்டியும் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைப் பார்த்த டாக்டர் சுந்தரம் மகனை நினைத்து பெருமிதம் அடைந்தார்.
அப்போது அவருடைய மொபைல் சிணுங்கவும் எடுத்து "ஹலோ சொல் சுகன்யா இங்கே..." என்று அவர் பேசி முடிக்கும் முன்பே "என்னங்க நம்ம பிரசன்னா நம்மை ஏமாற்றி விட்டான். நீட் தேர்வில் பாஸ் ஆகவில்லை என்பதால் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சினிமாவுக்கு போவதாக நம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்" என்று கதறினாள்.
கண் முன்னே மயங்கி கிடக்கும் பிரசன்னாவைப் பார்த்துக் கொண்டே "கவலைப்படாதே சுகன்யா. பிரசன்னா இங்கேதான் இருக்கிறான். உடனே புறப்பட்டு வா மற்றவற்றை நேரில் பேசிக்கொள்ளலாம்” என்றதும் அவள் விடும் நிம்மதி பெருமூச்சு கேட்டது அவர் செவிகளில்.
மறுநாள் மயக்கம் தெளிந்து கண் விழித்ததும் சுந்தரம் "பிரசன்னா, உன்னுடைய சாகச செயலை பாராட்ட மாவட்ட ஆட்சியாளரும் பத்திரிகைக்காரர்களும் இன்னும் சற்று நேரத்தில் இங்கே வரவிருக்கிறார்கள். நான்கு உயிர்களை காப்பாற்றிய உன்னால் எங்களுக்கும் பெருமை" என்றார்.
முழுவதும் குணமாகி வீடு திரும்பிய பிரசன்னா நேராக மூடியிருந்த தன் அறைக்குச் சென்றான். தான் எழுதிய கடிதம் மேசையில் அப்படியே இருந்ததைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். "நல்ல வேளை அம்மாவும் அப்பாவும் இதைப் பார்க்கவில்லை. கோழைத்தனமாக தான் எடுக்கவிருந்த முட்டாள்தனமான முடிவு அவர்களுக்கு தெரியாமலேயே இருக்கட்டும்" என்று சொல்லிக்கொண்டு அதை கிழித்துப் போட்டான்.
அவனின் அந்த செயலை சுந்தரமும் சுகன்யாவும் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்து விட்டனர்.
ஒரு மாதம் சென்று மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதத்தில் எதிர்வரும் குடியரசு தினத்தன்று மாண்புமிகு முதல்வரின் "வீர தீர செயலுக்கான விருது பிரசன்னாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குடியரசு தினத்தன்று விருதைப் பெற்றுக் கொண்ட பிரசன்னா தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கும் போது "நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலைக்கு தயாரானேன். ஆனால் இறைவனின் திருவருள் அன்று நேர்ந்த தீ விபத்தில் சிக்கிய சில உயிர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்றிருந்தது. அதனால் இன்று இந்த பாராட்டும் விருதும். எனவே என்னைப் போன்ற மாணவர்கள் பரீட்சை தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் ஒவ்வொருவருக்கும் ஒரு வெற்றிப்பாதையை இறைவன் காட்டுவான் என்று நம்பி முயற்சியினை தொடர வேண்டும். மேலும் என்னுடைய விருப்பம் ராணுவத்திலோ போலீஸிலோ சேர வேண்டும் என்பதுதான். ஆனால் என் டாக்டர் பெற்றோர்களோ அவர்களைப்போல டாக்டராக வேண்டும் என்று விரும்பினர். பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப ஊக்கப்படுத்தினால் நம்மைப்போன்ற இளைஞர்கர்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள்" என்றான்.
இதனை கேட்ட சுந்தரமும் சுகன்யாவும் ஒருவரையொருவர் அர்த்த புஷ்டியோடு பார்த்துக்கொண்டனர்.

Leave a comment
Upload