
ஏம்பா ரமேசு, மருமக உடம்பு சாதரணமா இருக்கா ? எப்படி இருக்கு?! ஜாக்கிரதையாகப்பார்த்துக்கோ, இரண்டு பக்கமும் பொம்பளைங்க இல்லாத வீடுப்பா, கூட இருந்து உதவி செய்ய யாரும் வரமுடியாத நிலை, நம்ம சின்னதை சனி, ஞாயிறு லீவுலே அங்கே உதவிக்கு வரச்சொல்கிறேன் என்றவர், அப்படியே இன்னொரு விஷயம், நம்ம சின்னதிற்கும் மாப்பிள்ளை பார்க்கலாம் என நினைக்கிறேன், நீயும் நல்ல பையனாகப் பாரு, நல்ல இடமாக இருந்தால் உடனே முடிச்சிடுவோம் என தனது மகன் ரமேசிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்பா தணிகாசலம். இளைய மகள் சின்னது என்கிற துர்காவிற்கு தனியார் கம்பெனி ஒன்றில் வேலை.
யாருங்க போனிலே என கேட்ட மனைவி ராஜியிடம் 'உன் மாமனாரு' என்று கேலியாகச் சொன்னதும், சொல்லுங்க யாரு என திரும்பக்கேட்டாள் ராஜி.
சொல்றேன்லே மாமானாருன்னு என்றபடி பரபரப்பாக அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டியிருந்தான். மாமாகிட்டே நேற்று நான் பேச முடியவில்லை,எனக்கு மொபைல் ரீசார்ஜ் செய்து விடுங்கனு நேற்றிலேருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன் என்றாள். ஆபீஸ் சென்றுச்சேர்ந்து செய்து விடுகிறேன், இப்போது நேரமில்லை என்று கிளம்பினான்.
ஏங்க இருங்க,டிபன் செய்கிறேன் என்றவளிடம், மறுத்து வெளியே சாப்பிட்டுக் கொள்கிறேன், உனக்கும் பூரிக்கிழங்கும் இட்லியும் foody லே ஆர்டர் போட்டுவிட்டேன், சாப்பிட்டு ஓய்வெடு, பத்திரமாக இருந்துக்கோ,
டெலிவரிக்கு இன்னும் நாலு நாட்களே இருக்கு,கவனமா மெதுவாக நட, டக்கென வெயிட் எதுவும் தூக்கிடாதே, ஜாக்கிரதையாக இருந்துக்கே! என்று ராஜியிடம் அறிவுறுத்திவிட்டு கிளம்பினான் ரமேசு.
தணிகாசலம் ரமேசிடம் போனில் பேசியதை கேட்ட துர்கா,
அப்பா! என்று தயங்கியபடி கூப்பிட..
என்ன ? என்றார் தணிகாசலம்.
நான் ....என்று துர்கா ஆரம்பித்ததும், தான் பிக்அப் புக் செய்திருந்த 'Helping wheel appஓட்டுநர் வந்து விட வேலைக்கு அவசர அவசரமாக கிளம்பினார் தணிகாசலம்.
காலிங்பெல் ஓசையைக்கேட்டுவாசலுக்கு வந்த ராஜி உணவுப் பார்சலை பெற்றுக்கொண்டு திரும்பியபோது கால் தடுமாறி குப்புற விழுந்ததை பார்த்ததும் ஓடி வந்த foody பணியாளர்,
மேடம்,மேடம் என கூப்பிட்டும் எவ்வித அசைவுமின்றி கிடந்தாள் ராஜி.
தூக்கி ராஜியைப் புரட்டி முகத்தைப் பார்த்ததும் நெற்றிப்பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துக்கொண்டிருந்த்து.
பதறிப்போன foody பணியாளர் சிதறிக்கிடந்த மொபைலை எடுத்து சேர்த்து ஆன் செய்ததில் அது "பேட்டர்ன்லாக்" செய்யப்பட்டிருந்தது. பின் தனது மொபைலிலிருந்து 108 ஐ கூப்பிட்டு ராஜியை அரசு மருத்துவமனையில் சேர்த்து கூடவே இருந்து கவனித்துக்கொண்டார். மதிய வாக்கில் நினைவுத் திரும்பிய ராஜியிடம் கணவர் ரமேசின் எண்ணை வாங்கி தகவல் சொல்லி, ரமேசு வரும் வரை காத்தியிருந்து தனது வீட்டிற்கு கிளம்பிய foody பணியாளரிடம்,
ரொம்ப நன்றி தம்பீ.. நேரத்திற்கு அழைத்து வந்து பெரிய உதவி செஞ்சிருக்கீங்க என்ற ரமேசு, உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுதா?! சொந்த ஊர், அப்பா மற்றும் பார்க்கும் வேலை என கேட்டு அவரிடம் சில நேரம் பேசி மொபைல் எண்ணை வாங்கி கொண்டு விடைக் கொடுத்தார் ரமேசு.
துர்கா...மருமக ராஜி கீழே விழுந்து காயம் ஏற்பட்டடுவிட்டதாம்,
அப்படியே டெலிவரிக்காகவும் ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்கானாம்,
சீக்கிரம் என பரபரத்தார்,அலுவல் முடித்து வீட்டிற்கு வந்த தணிகாசலம்.
ஆட்டோ பிடித்து செல்லும் வழியில், காலையிலே ஏதோ சொல்ல வந்தாய், நான் அவசரமாக கிளம்பியதில் கேட்க நேரமில்லை,
இப்போது சொல்லும்மா என்றார் தணிகாசலம்.
இல்லபா, இப்போ அது முக்கியமில்லை, அண்ணியைப் பார்ப்போம் பிறகு சொல்கிறேன் என தவிர்த்து விட்டாள் துர்கா.
மருத்துவமனையில் நல்ல நிலையில் மருமகளைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் விட்ட தணிகாசலம், நம்ம குலதெய்வம் நம்மை என்றும் கைவிடாதுபா தைரியமாக இரு என நம்பிக்கை வார்த்தைச் சொல்லி மருமகளுக்கு திருநீறு பூசிவிட்டார்.
அப்பா, கெடுதல்லேயும் நல்லது நடந்தமாதிரி ஒரு நல்ல பையன் கிடைத்திருக்கான் நம்ம துர்காவிற்கு என்ற ரமேசு, பையன் வீட்டிலே சொல்லி பேசவருமாறு அழைத்திருக்கேன்,என காலையில் நடந்த வற்றையெல்லாம் அப்பாவிடம் சொன்ன ரமேசு, பையன் IT கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்தாலும், ஊருக்கு உதவிட ஒரு அவசர ஊர்தி வாங்க foody லே டெலிவரி பாய் ஆக வேலையை பார்த்துகிட்டு அப்பா அம்மா, தங்கைகளை கவனித்துக்கொண்டுஇருக்கின்றான் என காலையில் சந்தித்தவனைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தான் ரமேசு.
இந்தக் காலத்திலே இப்படி ஒரு புள்ளையா?! என ஆச்சரியமடைந்தவர்,
நீ சொன்னால் சரியாகத்தானிருக்கும் வரட்டும் பேசுவோம் என்று சொன்னதும்,
அப்பா.. என்னை கேட்காமல் நீங்களே எப்படி முடிவெடுக்கிறீர்கள்..
நான் ஒருவரை மனத்தால் விரும்புகிறேன் அதுதான் காலையில் சொல்ல வந்தேன் என்றாள்.
யாரை என்றனர் கோரசாக... காலையில் உங்களை happy wheel அழைக்க வந்தாரே அவரைத்தான் என்றாள் துர்கா.
அவனா...? என்றார் தணிகாசலம்.
ஆமாம் என்றாள்.
போகும்போதே சாதாரணமாக விசாரித்தேன்மா? என்ன தம்பீ இதிலே என்ன வருமானம் வரும் என..
நீங்க கொடுக்கிற 50,60 லே பிடித்தம் போக ரைடுக்கு 35 வரை கிடக்குமாம்.
அதுவும் அவனுக்கு பைக் ஓட்டறதுதான் பிடிக்கும், அதையே தொழிலாக மாற்றிக் கொண்டுவிட்டானாம்.
இதெல்லாம் பார்ட்டைம்லே பண்ற வேலைம்மா,அவனைப்போய்... காதலித்து,அதெல்லாம் நமக்கு சரியாக வராது என்றார்.
ஏம்பா? வறுமையா ? சாதியா? எது உங்களைத் தடுக்கிறது என கேட்டாள் துர்கா “சாதிலே உசந்தவனாக பார்க்க சொல்லலைமா அதற்காக, உழைக்கிறச்சாதியான்னு கூட பார்க்க வேண்டாமா?!”
அண்ணன் சொல்லும் பையனைப் பார்த்தால் உழைப்போடு பொறுப்பும், அக்கறையோடு அரவணைப்பும் உள்ளவனாகத் தெரிகிறான்மா என்றார் தணிகாசலம்
எனக்கானவனைத் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமையில்லையா?
என்றாள் துர்கா.
உன் உரிமையிலே எங்க கடமையை இழக்க நாங்க விரும்பலை,என்ன கஷ்டங்கள் வந்தாலும், பிள்ளைகளுக்கு நல்லதைத்தான் செய்வோம்னு நம்பிக்கை வேண்டும் முதலில் உங்களுக்கு என்றார் தணிகாசலம்.
என்ன என மருமகள் ராஜி கேட்க, மாப்பிள்ளை தேடுகிற வேலயை நமக்கு வைக்கலை,அவளே தேடிகிட்டாளாம் என்றார் தணிகாசலம்.
நான் சொன்ன அந்த பையன் ஏற்கனவே கமிட்டடாம்,
சாரி சொல்லி இப்போதுதான் போன் செய்தான் என்ற ரமேசு,
சரி துர்கா, நீ சொன்ன அந்த பையனை வரச் சொல்லு அவனையும் பார்த்துப்பேசுவோம் என்றான் ரமேசு.
அழைப்பினை ஏற்று அந்த மருத்தவ மனைக்கு வந்த happy wheel காதலனை வாசலில் எதிர் கொண்ட தணிகாசலம் தன் முகத்தை திருப்பிக் கொண்டார்..
அவனுக்கு எதிரே சென்று கூடவே வார்டுக்கு அழைத்து வந்த துர்காவையும் அவனையும் ஆச்சரியமாகப் பார்த்தான் ரமேசு.
இங்கேயேதான் சுற்றிசுற்றி வரீங்களா நீங்க ! என்றதும்
அண்ணா இவரைத் தெரியுமா உங்களுக்கு என்றாள் துர்கா?
தெரியுமாவா ?! நான் சொன்ன , நம்ம foody "டெலிவாரி பாயே" இவர்தானே என்றான் மகிழ்ச்சியாக..
அதெப்படிப்பா, ஒரே நேரத்திலே எங்க குடும்பத்தையேசுற்றி சுற்றி வந்துருக்கே ஏதாவது ப்ளானா என்று கேட்டு சிரித்தனர் ரமேசும், தணிகாசலமும்.
Company யிலே Work from home, காலை மாலை நேரத்தில் food delivery and vehicle Ride ஏற்கனவே சொன்னேன்லே அதான் சார் என் இலட்சியம் என்றான் சந்தோஷ்.
அதென்ன ஆம்புலன்சு இலட்சியம் என கேட்ட தணிகாசலத்திடம்,
இந்த foody மற்றும் happy wheel டெலிவரியிலே நான் கற்றுக்கொண்டதே மனிதனின் வாழ்நாட்களில் நேரம் எவ்வளவு முக்கியங்கிறதைதான் சார்.
டையத்திற்கு கிடைக்காத எதுவும் பின் பயனற்றதாகிவிடுகிறது. சின்ன வயசிலே எத்தனையோ ஆசைகள், ஆனால் கிடைக்கலை. அந்த ஆசைகளை இப்போது பெற முடியும், ஆனால் அவைகள் தற்போது தேவையற்றவைகளாகிவிட்டன.
சக மனிதனுக்கு உடை, உணவு,சிகிச்சை எல்லாமே அப்படிதானே சார், டையத்திற்கு கிடைக்கணும்,அதனாலேதான் நான் வாங்க விரும்புகிறேன் ஒரு ஆம்புலன்சு வாகனம். எதுவும் டையத்திற்கு கிடைக்கணும் என் மக்களுக்கு அவ்வளவுதான், என்றபோது மெய்சிலிர்த்து நின்றனர் நால்வரும் அவன் வார்த்தைகளின் டெலிவரியில்....

Leave a comment
Upload