
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆடு,மாடுகளை மேய்த்தபடி நன்கு பல்வகை படிப்புகளைப் படித்து, மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்று சாதனை படைத்திருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த சிங்கப்பெண் வான்மதி. இவரது தந்தை கார் டிரைவர் என்பதால், இக்குடும்பத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சிறுவயது முதலே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சிறுமி வான்மதி ஆடு, மாடுகளை மேய்த்தபடி பலரின் உதவியுடன் பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
படிக்கும் காலத்தில் இவரது பள்ளி விழாவுக்கு வந்திருந்த பெண் கலெக்டருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் மரியாதை, சிறுமி வான்மதியின் மனதில் ‘தானும் ஒரு கலெக்டராக வரவேண்டும்’ என்ற விதை ஆழமாகப் பதிந்தது. மேலும், ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தைப் பார்த்ததும், அந்த எண்ண விதை வேரூன்றியது. பின்னர் இளம்பெண் வான்மதி உயர்கல்வியில் கணினி பயன்பாட்டியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியபடி, மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்குப் படிக்கத் துவங்கினார். இதில் வான்மதி 3 முறை தோல்வியைத் தழுவினாலும், தனது 4-வது முயற்சியாக, கடந்த 2015-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 152-வது ரேங்க்குடன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்றுள்ளார். இவர் ஐ.ஏ.எஸ் தேர்வு நேர்காணல் முடிவு வெளியான நேரத்தில், வான்மதியின் முதுகெலும்பு காயம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்.
எனினும், அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தனது கனவு மற்றும் லட்சியத்தைக் கைவிடாமல் வான்மதி ஐஏஎஸ் அதிகாரியாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றபின், மகாராஷ்டிர மாநில பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக, தனது பணிகளைத் துவங்கினார் வான்மதி. இச்சமயத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பழங்குடியின மாணவர்களின் கல்வி, ஊட்டச்சத்து மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தினார்.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக, தற்போது மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் புதிய கலெக்டராக கே.வான்மதி பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். மேலும், அம்மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ‘நதியை நோக்கி நடப்போம்’ (சலா ஜானுய்யா நதிலா) எனும் நதி மீட்பு பிரசாணத்தையும், நிர்வாக வெளிப்படைத் தன்மைக்காக ‘மகாசம்பத்தி’ எனும் டிஜிட்டல் கண்காணிப்பு முறையைக் கொண்டு வந்து அம்மாவட்ட மக்களின் பெருமளவிலான பாராட்டுகளையும் கலெக்டர் வான்மதி பெற்றுள்ளார்.

இதன்மூலம் தங்களின் குடும்ப வறுமையையும் சமூக கட்டுப்பாடுகளையும் உடைத்து முன்னேறி சாதிக்க துடிக்கும் அனைத்து இளம்பெண்களுக்கும் மகாராஷ்டிர மாநில கலெக்டராக பொறுப்பேற்று இருக்கும் தமிழக பெண் வான்மதி ஐ.ஏ.எஸ் சிறந்த முன்னுதாரணமாகவும் கலங்கரை விளக்கம் போல் வழிகாட்டியாகவும் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment
Upload