படம் நல்லா இருக்குனு பலர் சொல்றாங்க ஆனால் படத்தோட பேரே இப்படி இருக்கே என்று நினைத்துக் கொண்டு தான் படத்தை பார்க்க தொடங்கி இருந்தேன். ஒரு இயக்குனரின் முதல் படமிது என்று சொல்ல முடியாத அளவு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது இந்த திரைப்படம். நாயகன் ரிஷிகாந்தை பல கதாபாத்திரங்களில் இதற்கு முன்பு பார்த்திருந்தாலும் இந்த படத்தில் மருதுவாக மனதில் நிற்கிறார். பிடிக்காத திருமண பந்தத்தில் இணையும் இருவரின் வாழ்வில் நிகழும் கதை என்று ஒரே வரியில் முடியக் கூடிய கதை தான், ஆனால் சொல்லப்பட்ட விதம் சிறப்பாக இருக்கிறது. 
படத்தில் என்னை வெகுவாக கவர்ந்த ஒன்று திருநெல்வேலி -தூத்துக்குடி வட்டார வழக்கு பேச்சு முறை. "அப்போவே சொல்லதுக்கென்ன, வாயில என்ன ஈரமண்ணையா வச்சுகிட்டு இருந்த ?" போன்ற வசனங்கள் வெகு சரளமாக திருநெல்வேலி வட்டாரங்களில் பேசப்படுபவை. எனக்கு இது மனதிற்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது. நாயகன்- நாயகி பிரதானமான கதாபாத்திரங்களாக வார்க்கப்பட்டிருந்தாலும் பெண் வீட்டினர், மாப்பிள்ளை வீட்டினர் என்று இரு தரப்பிலும் நடித்த நடிகர்கள் அனைவரின் நடிப்பும் வெகு எதார்த்தமாக இருப்பது, நம் ஊருக்கே போய் ஒரு கல்யாணத்தில் கலந்து கொண்ட ஒரு உணர்வைத் தந்தது.
நாயகனின் தங்கை கீர்த்தியாக நடித்திருந்த சுமித்ரா தேவி மற்றும் அவளது கணவன் கண்ணனாக வரும் அப்துல் லீ கதாபாத்திரங்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. நாயகியின் சித்தப்பாவாக நடித்திருக்கும் பகவதி பெருமாளின் நடிப்பு அருமையாக இருந்தது, படத்தை பார்க்கும் எவருக்கும் அவரை இரண்டு அடி போட வேண்டும் என்று தோன்றுமளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரம் அவருடையது. நாயகன்- நாயகியின் அம்மாகள், சித்தி, மதினி, தங்கை என்று ஒரு பட்டாளமே சேர்ந்து கைகலப்பில் ஈடுபடுவது கொஞ்சம் சினிமாத் தனமாக தெரிந்தாலும் ஒரு பக்கம் இயல்பு போலவும் தோன்றுகிறது. முதலிரவு அறைக்குள் நாயகன் - நாயகி போன பிறகு வீட்டிலிருக்கும் பெண்கள் பேசிக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் வெகு எதார்த்தம். படத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை முதலிரவுக் கட்டிலும் ஒரு கதாபாத்திரமாக வருவது ஒரு அழகியல்.

எதற்கும் வாயைத் திறக்காமல் இருக்கும் நாயகி, முதலிரவில் வந்து கணவனை ப்ரோ என்று அழைக்கும் போது நமக்கே நாயகனை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அதிகம் பேசாமல் முகத்தில் மட்டுமே உணர்ச்சிகளை காட்டும் நாயகியின் கதாபாத்திரத்தை அனிஷ்மா சிறப்பாகவே செய்திருக்கிறார். நாயகியின் ஒன்றுக்கும் உதவாத காதலனாக தானே நடித்திருக்கிறார் ராஜா கருப்பசாமி.
நாயகனின் அப்பாவும் அவருக்கு உதவும் மைக் செட் இளைஞனும் பேசிக் கொள்ளும் காட்சிகள் மூலம் இன்னும் கிராமங்களில் சாதி பார்க்கும் வழக்கம் மறையவில்லை என்பதை நிரூபிக்கிறார் இயக்குனர். அதே போல படத்தின் முக்கால்வாசி காட்சிகளை மரத்தடியில் இருக்கும் குலசாமி கோவிலில் நிகழ்வதாக காட்டி இருப்பதற்கு முதலில் இயக்குனருக்கு ஒரு சபாஷ். தன்னுடைய பேட்டிகளில், இதற்கு தான் எழுத்தாளர் "தொ. பரமசிவன் அவர்களின் எழுத்துக்களை வாசித்ததே காரணம்" என்று கூறி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இளைய தலைமுறையினர் வாசிப்பில் இருந்து விலகவில்லை என்பது மிக பெரிய ஆறுதல் எனக்கு. சேத்தனுடைய நடிப்பு நன்றாக இருந்தது, சில இடங்களில் நீ கொஞ்சம் பேசாம இரேன் என்று நமக்குச் சொல்ல தோன்றினாலும் நாயகன் -நாயகி மனமாற்றத்திற்கு இந்த கதாபாத்திரம் உதவியாக இருக்கிறது.
நாயகன் ரிஷிகாந்த்தின் நடிப்பு வெகு அருமை, அது தான் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. இவருக்கு லேசாக ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். அடுத்து டோரதியிலும் நடித்திருப்பதால் ரசிகைகர்கள் பலரின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். காதல், சாதியால் நிகழும் ஆணவக் கொலைகள், பெண்ணியம், நாட்டார் தெய்வங்கள் என்று பல விஷயங்களைக் குறித்தும் இந்த திரைப்படம் பேசுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார், தொடர்ந்து நல்ல திரைப்படங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அனைவரும் ஒருமுறை பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு குடும்பப் படமிது.
Don't judge a book by its cover (or Name)

Leave a comment
Upload