தொடர்கள்
ஆன்மீகம்
மஹாளய பட்சமும்..!! மஹா பெரிவாளும்…!!! - ஆரூர் சுந்தரசேகர்.

Mahalaya Paksha..!! Maha Perivaalum…!!!

மஹாளய பட்ச நாட்களில் நம் முன்னோர்கள் அவரவர் உறவினர்களைத் தேடி பூலோகத்திற்கு வருவதாக ஐதீகம்.
தர்ம சாஸ்திரங்களுள் மஹாளய பட்ச நாட்கள் மிகவும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டிருப்பதால், பிதுர் தர்ப்பணம் என்பது போற்றப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பதினைந்து திதிகளும் மஹாளய புண்ணிய காலம் என்பதால் நாம் பித்ருக்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் நம்மையும் நம் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்கள்.
மஹாளயம் என்பது ஆன்மாக்கள் லயிக்கும் இடம். இந்த மஹாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக நம் இல்லம் தேடி வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது.

Mahalaya Paksha..!! Maha Perivaalum…!!!

மஹாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் கொடுக்கும் இந்த தர்ப்பணத்திற்காக அவர்கள் காத்திருப்பார்கள். அதனால் இந்த மஹாளய பட்சம் காலத்தில் நம் முன்னோர்களைத் திருப்தி செய்யும் வகையில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது பசி,தாகம் தீர்க்க வேண்டி தர்ப்பணம், அன்னதானம் செய்ய வேண்டும். மாதந்தோறும் முன்னோர்களுக்குத் தர்ப்பணமும், அன்னதானமும் செய்ய முடியாதவர்கள் இந்த மஹாளய பட்ச காலத்தில் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

இங்குக் கொடுக்கும் பொருள் அங்கு எப்படிச் சேரும்?.. மஹா பெரியவா:

Mahalaya Paksha..!! Maha Perivaalum…!!!

மஹா பெரியவா, மறைந்த நம் தாய் தந்தையருக்கும், முன்னோர்க்கும் கொடுக்கும் தர்ப்பணத்தின் அவசியத்தையும், அதன் பின்னால் உள்ள தெய்வீக ரகசியங்களையும், குறிப்பாக காகங்களுக்கு உணவு அளிப்பதன் முக்கியத்துவத்தையும், பித்ரு தோஷத்தைப் போக்க மஹாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்வதினால் கிடைக்கும் பலன்களையும் வலியுறுத்தியுள்ளார்.
யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுப்பதினால் அது நம் முன்னோர்களைப் போய்ச் சேருமா?, மற்றும் எள்ளும் நீரும் இறைத்தல் அவர்களுக்குத் திருப்தி தருமா?
என்ற கேள்விகளுக்கு மனுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாளானதைச் செய்ய வேண்டும்.
'எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன. அல்லது கண் முன்னாலேயே ஒருவர் எடுத்துக் கொள்ளுகிறார். அல்லது சாப்பிடுகிறார். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களைச் சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா?'' -- ஒரு சிலர் வாய்விட்டுக் கேட்கிறார்… அவர்களுக்காக மஹா பெரியவா பதில்…

Mahalaya Paksha..!! Maha Perivaalum…!!!

மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் பித்ரு காரியங்கள் மற்றும் தர்மங்கள் குறித்துப் பலர் எழுப்பும் இந்த நியாயமான சந்தேகத்திற்கு, காஞ்சி மஹா பெரியவா தங்களின் தெய்வத்தின் குரல் உரைகளில் மிக எளிய, ஆழமான மற்றும் தர்க்கரீதியான விளக்கத்தை அளித்துள்ளார்…
"நாம் இங்கே ஒருவருக்கு அரிசி, வாழைக்காய் கொடுக்கிறோம் அல்லது எள்ளும் நீரும் இறைக்கிறோம். அது எப்படி எங்கோ இருக்கும் முன்னோர்களைச் சேரும்?" என்று கேட்கிறார்கள்.
இதற்குப் பெரியவா ஒரு அழகான உதாரணத்தைக் கூறுகிறார். நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் உங்கள் மகனுக்குப் பணம் அனுப்ப விரும்புகிறீர்கள். இந்தியாவிலிருந்து இந்திய ரூபாய் நோட்டுகளை ஒரு கவரில் வைத்து தபாலில் அனுப்பினால் அது அப்படியே அவரிடம் போய்ச் சேருமா? இல்லை. நீங்கள் இங்கே உள்ள வங்கியில் அல்லது போஸ்ட் ஆபீஸில் ரூபாயைக் கொடுக்கிறீர்கள். அவர்கள் அதை அந்த நாட்டு நாணயமாக (டாலராகவோ அல்லது பவுண்டாகவோ) மாற்றி, அங்குள்ள உங்கள் மகனிடம் சேர்க்கிறார்கள். இடைத்தரகராக இருக்கும் வங்கி எப்படி பணத்தை மாற்றிக் கொடுக்கிறதோ, அதேபோல நாம் இங்கே பித்ருக்களுக்குக் கொடுக்கும் வஸ்துக்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் 'வங்கி அதிகாரிகளாக' பித்ரு தேவதைகள் (வசு, ருத்ர, ஆதித்யர்)செயல்படுகிறார்கள்.
நாம் கொடுக்கும் எள், தண்ணீர், அரிசி, வாழைக்காய் போன்றவற்றை அந்த தேவதைகள் ஏற்றுக்கொண்டு, நம் முன்னோர்கள் எந்த உலகத்தில், எந்த உருவத்தில் (மனுஷனாகவோ, தேவனாகவோ, விலங்காகவோ அல்லது பறவையாகவோ) இருக்கிறார்களோ, அதற்கேற்ற உணவாக (அமிர்தமாகவோ, புல்லாகவோ, தானியமாகவோ) மாற்றிஅவர்களிடம் சேர்த்து விடுகிறார்கள். எனவே, நாம் செய்யும் தர்மம் வீணாவதில்லை.

காகங்களுக்கு உணவு அளிப்பதன் தெய்வீக ரகசியம்:

Mahalaya Paksha..!! Maha Perivaalum…!!!

பித்ரு காரியங்களில் காகங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதற்கும் மஹா பெரியவா விளக்கியுள்ளார்.
காகம் என்பது யமலோகத்தின் வாசலாகவும், யம தர்மராஜனின் வாகனமாகவும், அவனது தூதுவனாகவும் கருதப்படுகிறது. பித்ரு லோகத்தில் இருக்கும் நம் முன்னோர்களால் பூலோகத்திற்கு நேரடியாக வர இயலாது. ஆனால், பித்ருக்களின் அலைவரிசையோடு (Vibrations) மிக எளிதாகத் தொடர்பு கொள்ளும் சக்தி காகத்திற்கு உண்டு. நாம் காகத்திற்கு அன்னமிடும்போது, அது பித்ருக்களையே நேரடியாகச் சென்றடைகிறது. காகம் உணவை மகிழ்ச்சியோடு ஏற்கும் போது, நம் முன்னோர்களின் ஆன்மா குளிர்ந்து நம்மை ஆசீர்வதிக்கிறது.
குடும்பத்தில் தொடர்ந்து ஏற்படும் தடைகள், திருமண தாமதம், வம்ச விருத்தி இல்லாமை, பணக் கஷ்டம் போன்ற பல துன்பங்களுக்கு 'பித்ரு தோஷம்' முக்கிய காரணமாக இருக்கும். மஹாளய பட்சத்தில் முகம் தெரியாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், எள்ளும் நீரும் இறைத்து பித்ருக்களை வணங்குவதும் பித்ரு தோஷங்களை வேரோடு அழித்து, வம்சத்திற்கு தீர்க்கமான ஆசியைத் தரும்.

கடைசியாக மஹா பெரியவா வலியுறுத்துவது:

Mahalaya Paksha..!! Maha Perivaalum…!!!

நமக்கு இந்த உடலையும், அறிவையும், வாழ வசதியையும் கொடுத்துவிட்டுச் சென்ற நம் தாய், தந்தை மற்றும் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் தான் இந்த பித்ரு காரியங்கள். அவர்கள் எந்தப் பிறவி எடுத்திருந்தாலும், தங்களின் சந்ததியினர் தங்களை நினைத்துச் செய்யும் இந்த வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து, "என் வம்சம் வாழ்க!" என்று வாழ்த்துவார்கள். இந்த ஆசி ஒன்றே நம் வாழ்வை அனைத்து வளங்களோடும் சிறக்க வைக்கும்.

Mahalaya Paksha..!! Maha Perivaalum…!!!