
எல்லோர்க்கும் என்னைப் பிடிக்கிறது.
குறிப்பாக,
என் உள்வட்டத்திற்குள் நகர்ந்து,
தொடர்பில் இணைந்த நட்பு வட்டம்.
நாட்காட்டியில் தினம் மாறுமுன்
வாட்சப்பில் மனம் திறக்கிறார்கள்.
எனக்கு எது பிடிக்கும் என சிநேகிதங்களுக்கு
தீர்மானிக்கத் தெரிகிறது.
செய்திகள், அறிவுரைகள், வாழ்த்துகள்,
படச்சுருள்கள் என
பொய்யிலா அன்பில் பகிர்கிறார்கள்.
ஒரே விஷயத்தை பலருக்கும் பகிர முடிகிறது.
இன்றில்லா விட்டால் நாளை என அதே
பகிர்வை விடுவதேயில்லை.
பார்ப்பதும் படிப்பதும் பக்கத்தே தேர்ந்து
நீக்கியபடியே நாளும் கரைகிறது.
பார்த்ததை சிலநேரம் அதே அன்போடு ஏனையோருக்கும் பகிர்கிறேன்.
சிலர் அவற்றை ரசித்து விளக்கமும் விரிவாகவே பதிகிறார்கள்.
காலை வணக்கங்களுக்கு நன்றி பாராட்டி
மதியம் வந்து விடுகிறது.
மதியங்களில் நீக்கல் படலம் ஆரம்பம்.
நீக்காது கடந்தாலோ அலைபேசி அழுகிறது.
பாரம் சுமக்கவொட்டாமல் விறைத்துக் கொள்கிறது.
இவ்விதம் பகிர்வில் பாசம் வளர்ப்பவர்களுக்கு
நேரில் உரையாட எதுவுமே இருப்பதில்லை.
பாசம் அறுமின் பாசம் அறுமின்
ஈச னோடாயினும் பாசம் அறுமின்
வாட் சப்பாயினும் பாசம் குறைமின்.
(*இதைப் படித்தவுடன் மறக்காமல் மற்றவர்களுக்கும் அனுப்பவும்!)

Leave a comment
Upload