
‘ஒன்றானவன் உருவில் இரண்டானவன்’ என்ற திருவிளையாடல் திரைப்படப் பாடல் தொலைக்காட்சி பெட்டியில் எங்கோ ஒலித்து கொண்டு இருக்கிறது.
சட்டென திருவீழிமிழலை திருப் பதிக தேவாரப் பாடல் நினைவுக்கு வந்தது. திருஞானசம்பந்த பெருமானின் அந்த ஒப்பற்ற தேவாரப் பாடலை இன்று சிந்திப்போம்.
பாடல் :-
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே.
பாடலை பதம் பிரித்துப் பார்க்கலாம்;
ஈறாய்; முதல் ஒன்றாய் ; இரு பெண் ஆண்; குணம் மூன்றாய்;
மாறா மறை நான்காய்; வரு பூதம்அவை ஐந்தாய்;
ஆறுஆர் சுவை; ஏழோசையொடு; எட்டுத்திசை தானாய்;
வேறாய்; உடன் ஆனான் இடம் வீழம்மிழலையே".
பாடலின் விளக்கம் :-
பேரூழிக் காலத்தில் யாவற்றையும் ஒடுக்குபவனாகவும்,
அவ்விதம் ஒடுங்கிய யாவற்றையும் தனியொருவனாய் முதலாக நின்று மறுபடியும் தோற்றுவிப்பவனாகவும்,
சக்தியும் சிவனுமாக இரண்டாகி இருப்பவனும்,
முக்குணங்களான சத்துவம், இராஜசம், தாமசம் என மூன்றின் வடிவமாகவும் இருப்பவனும்,
காலத்தினால் மாற்றம் கொள்ளாத நான்கு வேதங்களின் வடிவானவனும்,
ஐம்பூதங்களான வானம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகியவை தானே ஆனவனும்,
இனிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு எனும் ஆறு சுவைகளாகப் பிரிந்து நம் வாழ்வில் சுவை கூட்டுபவனும்,
ஏழு ஸ்வரங்களான சட்ஜம், ரிஷபம்,காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் இன்னும் ஓசை வடிவங்களாகி இசையாகவே இருப்பவனும்,
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு,தென்மேற்கு எனும் எட்டு திசைகளாகி எங்கும் வியாபித்திருப்பவனும்,
மேற்சொன்ன யாவுமாகியும் அவற்றுக்கும் வேறாகியும் உடனாகியும் இருக்கின்ற ஈசனின் இருப்பிடம் திருவீழிமிழலையே அன்றோ?!
இவ்விதம் எண்களைக் கொண்டே திருஞானசம்பந்தப் பெருமான் திருவிழிமிழலை பெம்மானுக்கு சொல்மாலை சாற்றிய விதம் போற்றத் தக்கது அல்லவா?!

Leave a comment
Upload