
"டொக்"என்ற சப்தத்தை தொடர்ந்து டிரைவர் "ஸாரி" என்று சொல்லியது பின் சீட்டில் உட்கார்ந்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்த சுகன்யாவை வெளியே பார்க்க செய்தது.
சென்னையின் பீக்அவர் டிராபிக். ஸிக்னலில் எப்போதும் போல் சுற்றிலும் வாகனங்கள். அவள் சுற்றுமுற்றும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தபோது காரின் முன் கதவைத் தட்டிய இளைஞனிடம் கண்ணாடியை இறக்கிவிட்டு "அதான் ஸாரி சொல்லிட்டேனே ஸார்; பிரேக் கொஞ்சம் லூசாக இருந்ததால் இடித்து விட்டது" என்று டிரைவர் சொன்னது அவள் காதில் விழுந்தது.
அந்த இளைஞன் "போலீஸ் பைக்ல இடித்துவிட்டு ஸாரியா?
முதலில் காரை விட்டு இறங்கு" என்று மிரட்டினான்.
அந்தக் குரலைக் கேட்ட சுகன்யா "ஆஹா, இது நம் தங்கமா ! ஹெல்மெட் போட்டிருப்பதால் உறுதியாக சொல்ல முடியவில்லையே” என்று யோசித்தாள்.
அந்த போலீஸ் கண்டிப்பை ரசித்தாலும், நடுத்தர வயதைக்கடந்த அந்த டிரைவரை ஒருமையில் திட்டியதை-- அதுவும் அவர் ஸாரி கேட்டதற்கு பின்னும்- அவளுக்கு நெருடியது.
இதற்குள் க்ரீன் ஸிக்னல் விழுந்துவிட பின்னால் வரிசை கட்டி நின்ற வாகனங்களின் ஹாரன் ஒலி காதைப் பிளந்தது. தொடர்ந்து அவர்கள் பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை.
"என்னங்க, லேசாக இடித்துவிட்டதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறீர்களே? நியாயமா?" என்று டிரைவர் சொல்வது அவளுக்கு கேட்டது.
ஹெல்மெட்டை கழற்றிவிட்டு டிரைவரிடம் "கொடுத்தால் கொடு இல்லாவிட்டால் கேஸ்தான்" என்று இரைந்தது தங்கம் தான் என்று புரிந்து கொண்டதும் விதிர்த்துப்போனாள்.
அமைதியாக ஹேண்ட் பேக்கிலிருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை டிரைவரிடம் தந்து "இந்தாங்க, இதை கொடுத்து விட்டு புறப்படுங்க. அவசரம்" என்றாள்.
ஸ்டேஷனுக்கு வந்து பைக்கிலிருந்து இறங்கிய தங்கப்பன் வாட்ஸப்பில் சுகன்யாவிடம் இருந்து வந்த மெசேஜை படித்ததும் அதிர்ந்து போனான்.
"மூன்று மாதங்களாக பழகி வந்தோம். காலஞ்சென்ற என் அப்பாவைப் போல் போலீஸ் வேலை என்பதாலும் நேர்மையானவராக நீங்கள் நடந்து கொண்டதையும் நம்பி இன்று மாலை சந்திக்கும் போது கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லலாம் என்றிருந்தேன்.
ஆனால் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியது நீங்கள் யார் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டது. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்தை உங்கள் மேசை மேல் மட்டும் வைத்தால் போதாது."
வெறுப்பில் பையில் இருந்து அந்த இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களையும் வீசி எறிந்து விட்டு தலையில் அடித்துக் கொண்டான் தங்கப்பன்.

Leave a comment
Upload