தொடர்கள்
கதை
தனக்கொரு நியாயம் - இரா கலைச் செல்வி

2026910073401441.jpeg

ஒரு வார காலமாகவே அந்த வீட்டில் ஒரு மௌனமும் குழப்பமும் நிலவியது. மேகநாதன் இறந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. தனது கணவரின் இறப்புக்கு பின் , குடும்ப சொத்துக்களை தனது பிள்ளைகளின் பெயருக்கு மாற்ற வேண்டும் என மேகநாதனின் மனைவி லட்சுமி தீர்மானித்தாள்.

தனது மாமனாரின் சொத்துக்களை, தாத்தாவின் சொத்து… மகன் வயிற்று பேரனுக்கு தான் என்ற வகையில் தனது மகனுக்கு எழுதி வைக்க தீர்மானித்தாள்.‌ அதற்கு தனது கணவனுடன் பிறந்த சகோதரிகளின் கையெழுத்து வேண்டும் என்பதால் அவர்களை அழைத்து விஷயத்தை கூறினாள்.

மேகநாதனின் சகோதரிகளான மீனாட்சியும் காமாட்சியும் விவரம் அறிந்து அண்ணி, சொத்துக்களில் பாதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் .மீதியில் எங்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள் என்றனர். அண்ணன் இல்லாம போனாலும் அந்த இரத்த பந்தம் மாறாதே… என்று காமாட்சி நிதானமாகப் பேசியபோது, லட்சுமிக்கு நெஞ்சடைப்பது போல் இருந்தது. காமாட்சியின் கருத்தில் லட்சுமிக்கு உடன்பாடு இல்லை.

காமாட்சிக்கும் மீனாட்சிக்கும் அண்ணன் மேகநாதன் மீது மிகுந்த மரியாதை. அண்ணன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தனர். ஆனால் அண்ணன் இருக்கும் வரை இப்படி சொத்துக்களை மாற்றுவது குறித்து எதுவுமே கேட்கவேவில்லை.

ஆனால் தற்போது அண்ணி ஒரு பேச்சுக்கு கூட உங்களுக்கு ஏதாவது பங்கு வேண்டுமா எனக் கேட்காமல், முழுவதும் என் மகனுக்குத்தான் எனக்கூறி சொத்தை மாற்ற நினைக்கும் போது, காமாட்சிக்கும் மீனாட்சிக்கும் ,ஏன் நம் அப்பா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தில் நமக்கு ஏதும் இல்லையா என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது.?

தாத்தா சொத்து பேரனுக்குத்தான் சேரணும். என் பையன் கார்த்திக்குத்தான் அந்த நிலம் முமுவதும் சொந்தம். அண்ணன் இறந்துபோனதும் வந்து பங்கு கேட்கறீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?" என்று கத்திவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள் லட்சுமி. அன்றிலிருந்து நாத்தனார்களுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

​ மீனாட்சியும் காமாட்சியும் வறுமையில் வாடுபவர்கள் அல்ல. கணவன் வீடுகளில் நல்ல வசதியோடுதான் வாழ்கிறார்கள். அதே சமயத்தில் அண்ணன் குழந்தைகளும் திருமணமாகி நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள். அதனால் , 'பெற்றோரின் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை உண்டு, அது தங்கள் பிறப்புரிமை' என்ற எண்ணத்தில்தான் அவர்கள் அதைக் கேட்டார்கள். ஆனால் லட்சுமிக்கு, 'தன் கணவன் இல்லாத தைரியத்தில் தன் மாமனார் சொத்தைப் பிடுங்கப் பார்க்கிறார்கள்' என்றே தோணியது.

இந்த பிரச்சனை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் தனது கணவன் சம்பாதித்த சொத்துக்களை , தனக்கு தேவையான பணத்தை வைத்துக்கொண்டு, மீதியை தன் மகன் மகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் எனவும் தீர்மானித்து விட்டாள் லட்சுமி.

​அன்று மாலை, வழக்கறிஞர் சதாசிவம் வீட்டிற்கு வந்திருந்தார். லட்சுமியின் கணவர் மேகநாதன் தன் வாழ்நாளில் சுயமாகச் சம்பாதித்த வீட்டை , மகள் மங்கை பேருக்கும், வங்கிக் கணக்கின் வைப்புத் தொகை முழுவதையும் , லட்சுமி கூறியபடி , அவர் மகன் கார்த்திக்கும் மாற்றி ஆவணங்களைர் தயார் செய்து கொண்டு வந்திருந்தார். அந்த ஆவணங்கள் மேஜை மீது இருந்தன.

லட்சுமி அம்மா நீங்கள் கூறியபடி​ உங்கள் கணவரின் ஒரு கோடி பெறுகின்ற வீட்டை உங்கள் பெண் மங்கை பேருக்கும் , வங்கிக் கணக்கில் உள்ள 50 இலட்சத்தை உங்கள் மகன் பேருக்கும் ,மாற்றி ஆவணங்களை ரெடி பண்ணிவிட்டேன் என்றார் வழக்கறிஞர்.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மகளுக்கும் , வங்கி கணக்கில் உள்ள 50 இலட்சத்தையும், தாத்தாவின் சொத்தான நிலத்தையும் மகனுக்கு கொடுக்க வேண்டும் என்ற லட்சுமியின் எண்ணம் அனைவருக்கும் புரிந்து போனது.

​ அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்த மேகநாதனின் கடைசி சித்தப்பா மெதுவாக நிமிர்ந்து , லட்சுமியை பார்த்தார். மேகநாதனின் தங்கை மீனாட்சியும் கூடத்தில் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தாள்.

​"லட்சுமி..." - சித்தப்பாவின் குரலில் ஒருவித முதிர்ந்த நக்கலும் ஆழமான வேதனையும் கலந்திருந்தது.

​"உன் கணவன் சுயமா சம்பாதிச்ச சொத்துல, உன் பொண்ணு மங்கைக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் பெறுகிற வீட்டை எழுதி வைக்கிறாய். ஏன்னா அவ உன் பொண்ணு! ஆனா, என் அண்ணன் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச சொத்துல ,அவர் பொண்ணுங்களுக்குப் பங்கு கேட்டா... அவங்க அநியாயம் பண்றதா சொல்லி , பேசாமலேயே முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாய். இது எந்த வகையில் நியாயம்?"

“ஏன் எனது கணவர் தான் அவரின் தங்கைகளை படிக்க வைத்தார். திருமணம் செய்து வைத்தார். பிரசவம் பார்த்தார். எவ்வளவோ செலவு செய்தார் .அதெல்லாம் கணக்கு இல்லையா…?”

“அம்மா லட்சுமி.. அண்ணன்…தங்கைகளைப் படிக்க வைப்பது, திருமணம் செய்து வைப்பது எல்லாம் அண்ணன் தங்கை உறவுக்குள் நடப்பது. அது அவர்களுக்குள் இருக்கின்ற அன்பும் பாசமும். தங்கையை படிக்க வைத்ததைப் பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது.?

நீ இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பே ,அவர்கள் அண்ணன் தங்கை என்பது நினைவிருக்கட்டும். நீ மனைவியாக வந்துவிட்டால் உன் கணவருக்கு தங்கை என்ற உறவு இல்லாமல் போய்விடுமா..? ஓ அவன் தங்கைக்கு சோறு போட்டதற்கு எல்லாம் கூட , நீ வந்த பிறகு கணக்குப் பார்ப்பாயோ..? உன் கணவர் அவரின் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தல் என்பது அவரின் உரிமை . அவரின் விருப்பம். அதைக் கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. ஏன் உனக்காக உனது சகோதரர்கள் எதுவுமே செய்யவில்லையா.? அப்படியே செய்ய விட்டாலும் அது அவர்களின் விருப்பம். உன் மகளுக்கு அண்ணனாக உன் மகன் எதுவும் செய்யவில்லையா? உன் மகளுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் உள்ள வீட்டை எழுதி வைக்க உனக்கு மனம் வருகிறது. அது மட்டும் எப்படி சரி?

உன் நாத்தனார்களுக்கு அவர்களின் அப்பாவின் சொத்தில் ஒரு கால்வாசியை கொடுக்கக் கூட உனக்கு மனம் இல்லை. நீ ஒரு பேச்சுக்கு கேட்டு இருந்தால் கூட , அண்ணன் மீது இருந்த பாசத்திலும் அன்பிலும் அவர்கள் , அண்ணி நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இருப்பார்கள். ஆனால் நீ அவர்களுக்கு உரிமை இல்லை என்றும், உறவுக்கு மரியாதை கொடுக்காமல் நடந்துள்ளாய். இது மிகப்பெரிய தவறு அம்மா” என சற்று கோபமாகவே கூறினார்.

லட்சுமி திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

​ "தனக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயம்னு வாழறது மனித தர்மம் இல்லை லெஷ்மி," என்றார் சித்தப்பா. "பணம் யாருக்கு வேணாம். ஆனா, இந்த மீனாட்சியும் காமாட்சியும் பணத்துக்காக இங்க வரல. அண்ணன் போனாலும் நாங்க இந்த வீட்டுப் பொண்ணுங்க'ங்கற உரிமையையும் கௌரவத்தையும் தேடி வந்தாங்க. 'உங்களுக்கும் பங்கு இருக்குடி'ன்னு நீ ஒரு வார்த்தை அன்பா சொல்லியிருந்தா, அவங்களே 'எங்களுக்கு எதுவும் வேணாம் அண்ணி'ன்னு சொல்லிவிட்டுப் போயிருப்பாங்க. நீ உரிமையையும் மறுத்து, பேசாமல் ஒதுங்கியதன் மூலமா அந்த உறவுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையையும் தூக்கி எறிஞ்சுட்ட..." என்று அமைதியாக பேசினார் சித்தப்பா. மேலும் “தனக்கு ஒரு நியாயம் தரணிக்கு ஒரு நியாயம்” என யோசிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியோடு நிறுத்தினார்.

​ ஓரமாக நின்றிருந்த மீனாட்சி மெல்லிய குரலில் சொன்னாள், "அண்ணி... நாங்க வசதியாத்தான் இருக்கோம். இந்தச் சொத்து இல்லாம நாங்க வாழ முடியாதா என்ன? ஆனா 'நாங்களும் இந்த குடும்பத்துல பிறந்தவங்கதான்'னு ஒரு அங்கீகாரம் வேணும்னு நினைச்சோம். அதுக்காகக் கேட்டதுக்கு எங்களைப் பகையாளி மாதிரி பார்த்துப் பேசுவதையே நிறுத்திட்டீங்களே... சொத்து இன்று வரும் நாளை போகும். ஆனா உறவும் அன்பும் தான் மனிதனை மனிதனா வாழ வைக்கும். அடுத்தவர் உரிமையையும் உணர்வையும் மதிப்பதில்தான் இருக்கிறது உறவுக்கு மரியாதை. அதை நீங்க தராம போனதுதான் எங்கள் மனதிற்கு வலிக்குது. மற்றபடி சொத்து எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை . அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

​ அந்தக் கணத்தில் லட்சுமியின் நெஞ்சில் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது.

​ தான் தன் மகளுக்குப் யோசித்த அதே தாய்மைதானே, தன் மாமனாருக்கும் அவர் மகள்கள் மீது இருக்கும்? தன் மகளுக்கு உரிமையைத் தேடித்தரும் அதே மனம் , தன் நாத்தனார்களின் உரிமையை மறுப்பது எவ்வளவு பெரிய சுயநலம்? மங்கைக்கு ஒரு நியாயம், மீனாட்சிக்கும் காமாட்சிக்கும் ஒரு நியாயமா? என மனசாட்சி உறுத்த தொடங்கியது.

வெறும் சொத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே பந்தமல்ல; ஒருவர் உணர்வை மற்றவர் புரிந்து கொண்டு உறவுக்கு மரியாதை தருவதே மனித தர்மம் என்பதை லட்சுமி உணரத் தொடங்கினாள். கண்கள் கலங்கிய நிலையில், வார்த்தைகள் வராமல் தவித்தவள் மெதுவாக நடந்து சென்று மீனாட்சியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

​மனுஷ தர்மம் என்பது சட்டப் புத்தகங்களில் இல்லை; அது சுயநலத்தைக் கடந்து அடுத்தவர் நியாயத்தைச் சிந்திக்கும் மனித மனதின் விசாலத்தில்தான் இருக்கிறது என்பது லட்சுமிக்கு மெல்ல புரிய தொடங்கியிருந்தது.