தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 25 -ஜி.ஏ.பிரபா

2026910073617857.jpeg

உ

25. ஸர்வாங்க சுந்தரீ

ஸர்வானவத்யா ஸர்வாங்க

ஸுந்தரீ ஸர்வஸாக்ஷினி

ஸர்வாத்மிகா ஸர்வ ஸௌக்ய

தாத்ரீ ஸர்வ விமோஹினீ

அம்பிகை எவ்விதக் குறைபாடும் இல்லாதவள். இந்த உலகத்தைப் படைத்து, அதன் ஒவ்வொரு துளியையும் ஆழ்ந்து அனுபவித்து, கருணையோடு இயக்குபவள். எந்தவிதக் குறைகளும் இல்லாதவள் என்பதால்தான், அவள் குறையற்ற இந்த உலகத்தையும் படைத்திருக்கிறாள். எது தேவையோ அதைத் தருகிறாள்.

அம்மா இருக்கிறாள்; அவள் நமக்கு அனைத்தையும் தருவாள் என்ற நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். ஆனால், நமக்குக் கிடைத்ததை எண்ணி மகிழாமல், நாம் விரும்பியதை வேண்டி அழுகின்றோம். ஒரு உணவைத் தாய் நமக்குத் தருகிறாள் என்றால், அது நம் உடலுக்கு நல்லது என்பதற்காகத்தான். அதுபோலவே, ஜெகன்மாதாவான அம்பிகையும் நம்முடைய மனக்குறைகளை எல்லாம் சரிசெய்து, நம் ஆசைகளையும் நிறைவேற்றுகிறாள்.

அவள் எல்லா அங்க அழகும் நிறைந்தவள். "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" என்றுதானே அபிராமி பட்டர் பாடுகிறார்! இந்த உலகமே அழகு. இயற்கை அழகு, மலைகள், ஆறுகள், பறவைகள், மனிதர்கள் என அனைவரையும் அழகாகப் படைத்திருக்கிறாள். அனைத்துப் பிரபஞ்சத்தோடும் இணைந்து பேரழகியாக மிளிர்கிறாள் அம்பிகை.

அவளே அனைத்திற்கும் சாட்சியாய் இருப்பவள். நம் மனசாட்சியாகவும் இருக்கிறாள். நாம் எத்தனை காரியங்கள் செய்தாலும், அது யாருக்கும் தெரியாது என்றுதான் நினைக்கிறோம். ஆனால், நமக்குள்ளே உறைந்து நம் தவறுகளைச் சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பாள் அம்பிகை. அவளே அனைத்து உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவள்.

நமக்கு எது ஆனந்தம் அளிக்குமோ, அவை அனைத்தையும் அளிப்பவள் ஸ்ரீ பரமேஸ்வரி. அம்பிகையிடம் 'அதைக் கொடு, இதைக் கொடு' என்று கேட்பதைவிட, "எது எனக்கு நிம்மதி, நிறைவு, திருப்தி, மகிழ்ச்சி, ஆனந்தத்தை அளிக்குமோ அதை எனக்குக் கொடு, இவை அனைத்திலும் நீயே உறைந்திருந்து என்னுடன் இருக்க வேண்டும்" என்பதுதான் நம்முடைய வேண்டுதலாக இருக்க வேண்டும்.

எல்லோரையும் மயக்குபவள் அம்பிகை. அவளின் அருள் மழையில் நனைந்து, அவளிடம் மயங்கியே இந்த உலகமே அவளிடம் தஞ்சம் அடைந்திருக்கிறது.

"ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா..."

என்கிறது துர்கா சப்தஸ்லோகீ. 'அங்கிங் எனாதபடி' எல்லா இடங்களிலும் நிறைந்து அனைத்தையும் காப்பவள் அந்த அகிலாண்டகோடி நாயகி. அவளே அனைத்திற்கும் ஆதாரமாய் நிற்கிறாள்.

சிவசக்தி ரூபமான அவளுடைய திருவடிகளில் நாம் செய்கின்ற பூசனைகள் யாவும், மும்மூர்த்திகளும் தங்கள் சிரங்களிலே செய்த பூசைக்கு இணையானவை. தாயின் திருவடியைத் தாங்கும் ரத்ன பீடத்தை மும்மூர்த்திகளும் தாங்கி நிற்கிறார்கள் என்று லலிதா சகஸ்ரநாமம் சொல்கிறது ('ஸ்வாதீனவல்லபா' என்கிறது).

சக்தி என்பது குணம். குணம் தனித்து நிற்க முடியாது என்பதால் அது சிவனைச் சார்ந்திருக்கிறது. ஆனால், சிவனோ இவளுக்கு வயப்பட்டவர். யாருடைய அருளினால் பெண்கள் நல்ல கணவனை அடைகிறார்களோ, அது சக்தியின் அனுக்கிரகத்தினால் மட்டுமே சாத்தியம். ஈஸ்வரனின் அன்புக்கு உரியவள்.

தேவியின் இருப்பிடத்தைக் கூறத் தொடங்கிய வாக் தேவதைகள், "அவள் காமேஸ்வரனுடைய மடியில் அமர்ந்திருக்கிறாள்" என்றுதான் முதலில் சொல்கிறார்கள். அதன் பிறகு, அவள் மேரு மலையின் நடுவில் இருக்கும் சிகரத்தில் இருக்கிறாள் என்றும், 'சுமேரு மத்தியத்தில்' இருக்கிறாள் என்றும் கூறுகிறார்கள். 'ஸ்ரீமன் நகரம்' அவளுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது. 'சிந்தாமணி கிரஹத்தில்' அவள் வசிக்கிறாள். ஸ்ரீமன் நகரம் என்பதை ஸ்ரீசக்கரம் என்றும் பொருள் கொள்ளலாம். எனவேதான் அவளை 'ஸ்ரீ சக்கர நாயகி' என்று கவுடபாத சூத்திரங்களில் சொல்லப்படுகிறது.

அவள் வீடு சிந்தாமணி ரத்தினங்களால் செய்யப்பட்டது. மனதில் நினைப்பதைத் தந்தருளும் ரத்தினமே 'சிந்தாமணி'. அப்படிப்பட்ட பல ரத்தினங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மாளிகையே 'சிந்தாமணி கிரஹம்'. அதில் வசிப்பவள் அம்பிகை. மனம் நினைப்பதைத் தந்தருளும் சக்தி வாய்ந்தவை என்பதால், தேவியின் மந்திர அட்சரங்களும் 'சிந்தாமணி' எனப்படுகின்றன. அவைகளில் உறைபவள் அவள்.

அவளை அபிராமி பட்டரும்:

"ஆதித்தன், அம்புலி, குபேரன், அமரர்கோன், பிரமன்,

மாலாலன், செவ்வேள், கணபதி, காமன் முதல் எண்ணற்ற புண்ணியர்கள் உன்னையே போற்றுகிறார்கள்." என்று கூறுகிறார்.

அம்பிகையே ஜெகன்மாதா. இந்த உலகத்திற்கே ஆதாரம். எனவே, அவளை வணங்கியே மும்மூர்த்திகளின் முத்தொழிலும் ஆரம்பிக்கிறது.

​நாமும் தொழுது வணங்கலாம்.

*********