
மதுரை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16327/16328) ரயிலில் கடந்த 22-ம் தேதி அகன்ற பக்கவாட்டு கண்ணாடி ஜன்னல் மற்றும் மேற்கூரையுடன் புதிதாக ‘விஸ்டாடோம்’ ஏ.சி பெட்டியை இணைத்து, வாரந்தோறும் சோதனை ஓட்டமாக தென்னக ரயில்வே துறை சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இச்சோதனை ஓட்டம், வரும் 2027-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதிவரை தற்காலிக அடிப்படையில், மதுரையில் இருந்து ஒவ்வொரு வாரமும் வாரத்தில் வியாழன் முதல் ஞாயிறு வரை என மொத்தம் 4 நாட்களும், குருவாயூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கள் வரை என மொத்தம் 4 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பெட்டியின் சிறப்பம்சங்கள்: இந்த நவீன விஸ்டாடோம் பெட்டியில் உள்ள சொகுசு இருக்கைகளை, தங்களின் உடல் வசதிக்கேற்ப பயணிகள் 180 அல்லது 360 டிகிரி வரை சுழற்றிக் கொண்டே இருக்கலாம். மேலும், ரயில் பெட்டியின் பக்கவாட்டில் மிக அகன்ற கண்ணாடி ஜன்னல்களும், மேற்கூரை பகுதியில் வெளிப்படையான கண்ணாடியும் (Glass Ceiling) அமைக்கப்பட்டு உள்ளன.

இதன்மூலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் எழில் கொஞ்சும் வான்மேகங்கள், இயற்கை வனப்பகுதி காடுகள் மற்றும் அவ்வப்போது பரவலாக பெய்யும் மழையை கண்டு ரசிக்க முடியும். மேலும், இந்த ரயில் பெட்டியின் பின்பகுதியில் தனியாக ஒரு பார்வையாளர் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பயணிகள் நின்றபடியே இயற்கை அழகு காட்சிகளை கண்டு ரசித்து, அவற்றை தங்களின் செல்போன் வீடியோ மற்றும் அதிநவீன காமிராக்கள் மூலம் படம் பிடிக்கலாம்.
தானியங்கி நெகிழ்வுக் கதவுகள் (Automatic sliding doors): இந்த ரயில் பெட்டியில் எல்சிடி தொடு திரைகள், மினி ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், செல்போன் சார்ஜிங் வசதிகள் மற்றும் பயோ-டாய்லெட் போன்ற பல்வேறு சொகுசு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நவீன விஸ்டோடோம் பெட்டி இணைந்திருக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலில், செங்கோட்டை மற்றும் புனலூர் இடையிலான சுமார் 50 கிமீ மலைப்பாதை பயணம் மிக அழகானது.
இந்த ரயில் மார்க்கத்தில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 13 கண் பாலம் (கழுத்துருட்டி பாலம்), 6க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள், அடர்ந்த காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கடந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஊர்ந்தபடி செல்கிறது. இந்த நவீன விஸ்டோடோம் ரயில் பெட்டியின் பயணக் கட்டணம் வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களின் எக்சிகியூட்டிவ் சேர் கார் (AC Executive Chair Class) கட்டணத்துக்கு நிகராக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்ய மதுரையில் இருந்து புனலூருக்கு ரூ.1,010 கட்டணம், மதுரையில் இருந்து கொல்லத்துக்கு ரூ.1,140 கட்டணம் , மதுரையில் இருந்து குருவாயூருக்கு ரூ.1,875 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும், எனினும், இந்த அழகான கண்ணாடி ரயில் பெட்டியில் பயணம் செய்து, மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை சொகுசு இருக்கையில் அமர்ந்தபடி, 360 டிகிரி கோணத்தில் கண்டு ரசிக்க விரும்பும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. விஸ்டோடோம் கண்ணாடி ரயில் பெட்டியில் சென்று, மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிப்போமா?!

Leave a comment
Upload