உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா போளி ஸ்டால்
முரண்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது அவ்வப்போது நமக்கு நினைவு படுத்திக்க கொண்டேயிருப்பவை பெயர்களும் அவற்றின் பொருளும் தான். என்னடா தத்துவமா ஆரம்பிக்கறானே அப்படின்னு பாக்கறீங்களா? பயம் வேண்டாம் ஒரு சிறு ஹோட்டலைப் பற்றித்தான் சொல்லப்போறேன். வேளச்சேரியில் நானறிந்த வரையில் 22 வருடமாய் நடந்துவரும் உணவகம், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா போளி ஸ்டால். ஆனால் தற்போது போளியைத் தவிர எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். என்ன செய்ய... பெயர் வைத்தால் அப்படியே நடக்க வேண்டுமா? எனக்கு கூடத்தான் கிருஷ்ணன் என்று பெயர் வைத்தார்கள்... ஆனால் நானோ என் மனைவி ஒருத்தியை தவிர.. வேற..... சரி சரி சொந்தக்கதை வேண்டாம்... ஹோட்டலுக்குள் போவோம்.... (தப்பிச்சேன்டா சாமி ..)
வேளச்சேரியில் 20 + வருடங்களாக வெற்றிகரமாக நடந்துவரும் உணவகம், ஆரம்பத்தில் போளி மற்றும் பல வகை இனிப்பு, காரம், பஜ்ஜி,போண்டா, வடை எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நானே சாப்பிட்டிருக்கிறேன். பின்னர் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு.. காலை உணவும், மதிய சாப்பாடும், இரவு டிபனும் போட துவங்கினார்கள்... (அப்போதெல்லாம் குருநானக் கல்லூரி தாண்டினால், பெரிய அளவில் ஆள் நடமாட்டமே இருக்காது.) பின்னர் இவர்களின் சுவை எல்லோருக்கும் பிடித்துப் போய்விட, போளியை கைவிட்டுவிட்டு டிபன்களை கைப்பிடித்தார்கள்.
காலையில் இட்லி, தோசை, பொங்கல், பூரி, ரொம்பவும் மிருதுவான இடியாப்பம், தொட்டுக்கொள்ள வடகறி, இவர்களின் பிரசித்தி பெற்ற ஐட்டம் இது. அவ்வளவு பிரமாதமான சுவையுடன் இருக்கும். சைதாப்பேட்டையில் அறிமுகமானதாக சொல்லப்படும் வடகறி, ஹோட்டலில் இரவு மீந்து விட்ட வடைகளை மறுநாள் காலையில் பிய்த்துப்போட்டு, கூட மசாலா ஐட்டங்களையும் சேர்த்து செய்யப்படும் தொடு கறி உணவாகும். பின்னர் வடகறி புதிதாக ஒவ்வொரு நாள் காலையிலும் அதே வடை மாவால் செய்யப்பட்டது. உடுப்பியில் வடகறிக்கு ஒரு தனி டேஸ்ட் உண்டு. தனியாக ஆர்டர் செய்து வாங்க வேண்டும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அன்றைய தினம் இடியாப்பத்திற்கு கூடவே தொடு கறியாக கொடுப்பார்கள். சாம்பார் சட்னி தனியாக வாளியில்.... கரண்டியுடன்.... நேயர் விருப்பமாக!
மதியம் வெரைட்டி ரைஸ் கிடைக்கும். கூடவே சிறு பாக்கெட்டில் பக்கோடா. வெஜிடபிள் பிரியாணி இவர்களின் மற்றுமோர் சிறப்பு உணவு (என் பொண்ணுக்கு எத்தனை சண்டே கப்பம் கட்டியிருக்கேன்?!!). சாம்பார் சாதம் அங்கேயே சூடாக வாங்கி சாப்பிட்டால், பெங்களூரில் கிடைக்கும் “பிஸிபேலாஹுளி” தோற்றுவிடும். பார்சல் வாங்கி சாப்பிட்டால் அவ்வளவு ரசிக்காது (வீட்டம்மா கட்டிக் குடுத்தது போல் இருக்கும், அப்புறம் என்னை திட்டக் கூடாது. நான் உங்க வீட்டம்மாவைச் சொன்னேன்). அதேபோல தயிர் சாதம், தயிரும், வெண்ணையும் சேர்ந்து இடை இடையே கேரட்டும் , பச்சைமிளகாயும் சேர்ந்து சுவை தர, நிஜமாகவே உடுப்பி கிருஷ்ணன் வேகமாய் வருவானோ இந்த சுவைக்காக என எண்ணத் தோன்றும்.
மாலை 4 மணி வாக்கில்... பஜ்ஜி, போண்டா, தயிர் வடை, கீரை வடை, காபி உண்டு, முன்பு போல் நின்று கொண்டு சாப்பிடாமல் இப்போது உட்கார்ந்தே நிதானமாக சாப்பிடும் வசதி செய்துள்ளார்கள்.. இரவு டிபன், சரியாக 6 .30 மணிக்கு துவங்கும். டிபன் ஐட்டம் மட்டும் தான். இவர்களின் நெய் தோசை நிச்சயமாக சுவைக்க வேண்டிய ஒன்று. ரோஸ்ட்டாக கேட்காமல் பதமாக வேண்டும் என்று கேட்டால் அதுவே வயிறும், மனமும் நிறைந்து விடும். சிறப்பு இனிப்பாக ரவா கேசரி உண்டு. அது தவிர கௌண்டரிலேயே பால்கோவா மற்றும் சிப்ஸ் வகைகளும் கிடைக்கும்.
வேளச்சேரி, விஜயநகர் ஸ்டாப்பிலிருந்து SRP TOOLS போகும் வழியில் வேளச்சேரி - தரமணி லிங்க் ரோடில் இடது பக்க சர்வீஸ் ரோடில் இருக்கிறது. டூ வீலர் பார்க்கிங் உண்டு, கார்களை சாலை பக்கவாட்டில்தான் பார்க் பண்ண வேண்டும்.
அடக்கமான விலை, ஆளை மயக்கும் சுவை, இனிமையான சேவை... ஈஸியா போலாம்.. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு...... ஊஊ ல ல லா பாடிக்கிட்டே.....
Leave a comment
Upload