தொடர்கள்
பொது
லேப்டாப்பின் லப்டப் அதிகரிக்க வேண்டுமா?

இளைய தலைமுறையினரின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்ட  மடிக்கணினிகளில் நாளொரு மாடலும், பொழுதொரு அப்டேட்டும் வந்து கொண்டிருக்கின்றன. சரியான பராமரிப்போடுன் கையாண்டால் ஒரு அவற்றைப் பத்தாண்டுகள் வரை கூட பயன்படுத்த முடியும். 

மடிக்கணினிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்து அனுபவஸ்தர்களின் சில டிப்ஸ் : 

20171106143810890.jpg

* மடியிலோ அல்லது படுக்கையிலோ வைத்து பயன்படுத்தும் போது  அதிலிருந்து வெளியாகும் வெப்பம் உள்ளேயே தங்கி, உள்பாகங்களுக்குச் சேதம் ஏற்படுத்தும். உள்ளே உள்ள மின்னணு பாகங்கள்  உருகி உடைந்து போகும்.  சமதளப் பரப்பு கொண்ட மேசை மீது வைத்து மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* ஏ.சி. இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. அதிக நேரம் விளையாடுவோர், நாள் முழுக்க பயன்பாட்டிலேயே வைத்திருப்போர், ’கூலன்ட் ஸ்டாண்ட்’ என்ற சாதனத்தின்  மீது வைத்துப் பயன்படுத்தலாம். கூலன்ட் ஸ்டாண்டில், பெரிய சைஸ் மின் விசிறி 1  அல்லது சிறிய வகை மின் விசிறிகள் 3 வரை  இருக்கும். அது வெப்பத்தை உறிஞ்சி வெளியேற்றும். இதனால் வெப்பம் தங்காது. 

* நீண்ட நாள் உபயோகிக்காமல் வைத்திருந்தாலும் அது  பாதிப்பை ஏற்படுத்தும். மழை நாளில் பூஞ்சையை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது  செயலியக்கம் செய்து சிறிது பயன்படுத்தி விட்டு மூடிவிடுவது முக்கியம்.

 

* மடிக்கணினி என்பதே எங்கும் கொண்டு செல்வதற்காகத்தான். இதனை மழைநாளில் வெளியே எடுத்துச் செல்லும்போது, தண்ணீர் படாமல் காப்பதும், வெயில் காலத்தில் அதிக வெப்பத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம். 

* வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்துவது நல்லது.  இணையத் தொடர்பில் இருக்கும் போது தேவையற்ற மென்பொருட்கள் நமக்குத் தெரியாமலேயே தரவிறக்கம் ஆவதைத் தடுக்கவும், நமது தகவல்கள் களவாடப்படாமல் இருப்பதற்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை அப்-டு-டேட்டாக வைத்திருப்பது நல்லது.

* ஒரு செயலியை அல்லது மென்பொருளைத் தரவிறக்கம் செய்யும்போது அதை உண்மையான தளத்தில் இருந்து செய்கிறோமா, அத்துடன் வேறு ஏதேனும் இடைச் செருகல்களும் நமக்குத் தெரியாமலேயே உள்ளே வருகிறதா என்று கண்காணித்துக் கொள்வது நல்லது. தேவையற்ற மென்பொருள்  இருப்பது தெரிந்தால், அவற்றை முறைப்படி முற்றிலுமாக வெளியேற்றம் செய்து அழிப்பது நல்லது. 

* ஏதாவது பிரச்னை என்று உணர்ந்தால் நாமாகவே பிரித்து மாட்டக்கூடாது. கணினியில் மிக மெல்லிய இணைப்புகளும், தொட்டாலே உடைந்துவிடும் பாகங்களும் அதிகம். எனவே தகுந்த பயிற்சி பெற்ற நபரிடம் கொடுத்து சரி செய்து கொள்வது பெரும் செலவைத் தடுக்கும். 

* வருடத்திற்கு ஒரு முறையாவது பொது சர்வீஸ் செய்து விடுவது நல்லது. லேப்டாப்பின் அடியில் இருந்து வெப்பம் வெளியாகும் சிறு துவாரங்கள் அடைத்துக் கொண்டிருப்பது, பூச்சிகள் தங்கி இருப்பது, வயர்களில் உள்ள இணைப்பு விலகி இருப்பது போன்றவற்றைக் கண்டறிந்து சரி செய்து கொள்ள இது உதவும். RAM எனப்படும் நினைவக வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற மென்பொருட்களை அழிக்கவும் ஆலோசனை கிடைக்கும். 

* பொதுவாக ஒரு லேப்டாப் பேட்டரியின் ஆயுள் என்பது  இரண்டரை ஆண்டுகள் வரை  இருக்கும். சதா சர்வ காலமும் மின் இணைப்பில் பொருத்தி சார்ஜ் ஏறிக் கொண்டிருப்பது போல் இருக்கக் கூடாது. ஒவ்வொரு முறை சார்ஜ் ஏற்றும் போதும் முழு அளவு சார்ஜ் ஏறியவுடன், மின் இணைப்பைத் துண்டித்து விட்டு பயன்படுத்தினால் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். 10 நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் விடப்போவது தெரியவந்தால், பேட்டரியைத் தனியே கழற்றி வைப்பது நல்லது. இல்லையென்றால் அதிலுள்ள மின்சாரம் உள்பாகங்களில் அலைந்து கொண்டே இருப்பதன் மூலம் லேப்டாப்பின் நாடித்துடிப்பைக் குறையச் செய்யும்.

* மின் இணைப்பு கொடுக்கும்போது மின் இணைப்பு செயல்பாட்டில் உள்ளவாறே கொடுப்பது பெரும் தவறு. திடீரென உள்ளே வரும் மின்சார வேகம் காரணமாக உள் பாகங்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்படும். இது புரியாமல், ‘சார்ஜ் போட்டேன். என்னன்னே தெரியலை. லேப்டாப் வேலை செய்யலை. முதல்நாள் கூட நல்லா இருந்தது’ என்று புலம்பிப் பயனில்லை. 
* தண்ணீரில் விழுந்து, உள் பாங்களுக்குள் தண்ணீர் சென்று விட்டது என்று தெரிந்தால், முதலில் செய்ய வேண்டிய காரியம், பேட்டரியைத் தனியே கழற்றி எடுப்பதுதான். பின்னர் லேப்டாப்பை  தலைகீழாகக் கவிழ்த்து நிற்கச் செய்ய வேண்டும். இதில் தண்ணீர் கொஞ்சம் வடியும். இந்த முதலுதவிக்குப் பின் லேப்டாப்பை சர்வீஸ் சென்டர்க்கு எடுத்துச் செல்ல வேண்டும். நாமே முயற்சிப்போம் என்று ஆன் செய்தால், உள்ளே ஒரு துளி நீர் இருந்தாலும், அது மதர் போர்டைப் பாதித்துவிடும். நீரின் தாக்கம் குறையும் வரை உலரவைத்து, அனைத்துப் பாகங்களையும் சோதித்த பின்பே ஆன் செய்ய வேண்டும்.


- ஐஸ்வர்யா
­