அங்கே நடந்தது என்ன ?
- சுதாங்கன்
____
1992ம் ஆண்டி டிசம்பர் 6. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாளான அன்றைய நிகழ்வு, அதற்குப் பிறகு இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையின் மன விடுமுறையை குலைக்கும் நாளாகவே டிசம்பர் 6 இந்திய சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது.
அன்று நடந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு முன்பு, கொஞ்சம் பாபர் மசூதி விவகாரத்தின் சுருக்கத்தை கொஞ்சம் பார்க்கலாம்.

அயோத்தியின் இந்த பாபர் மசூதி,1528ம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவரால் கட்டப்பட்டது. தனது எஜமானரின் பெயரை அவர் அதற்கு சூட்டினார்.
மசூதி, இந்துக்களின் கடவுளான ராமர் பிறந்த இடமாக பூஜிக்கப்படும் அயோத்தியில் கட்டப்பட்டது. மூன்று குவிமாடங்களைக் கொண்ட மசூதியைச் சுற்றிலும் உட்புற மதில் இருக்கிறது. வெளிப்புறச் சுற்றுச் சுவருக்கு உள்ளே சிறிய அளவில் கட்டடங்களும் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய கோயில்களும் இருந்தன.
19ம் நூற்றாண்டு தொடங்கி, மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறை வெடித்து வந்திருக்கின்றன. ராமர் பிறந்ததைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்ட கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டிருப்பதாக இந்து அமைப்பினர் சொல்கிறார்கள்.
1885ல் பிரச்னை நீதிமன்றத்துக்குச் சென்றது. மசூதி அடுத்த வெளிப்பகுதியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்று உள்ளூர் கோவில் பூஜாரி கோரிக்கை விடுத்தார்.
மசூதிக்கு அருகில் ஒரு கோயில் கட்டுப்படுமானால் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், 1949ல் வழிபாட்டுக்காக ஒரு சில இந்து சிலைகள் ரகசியமாக மசூதிக்குள் வைக்கப்பட்டன. சிலைகளை அகற்றினால் கலவரும் வரும் என்று பயந்து போன காங்கிரஸ் அரசு, உள்ளிருந்த சிலைகளை அகற்றவில்லை.
உள்ளூர் நீதிமன்றம், இந்துக்கள் மசூதிக்குள் சென்று வழிபட அனுமதியளித்தது.அதே நேரத்தில் பக்தர்கள் யாரும் விக்ரகங்களுக்கு அருகில் செல்லக்கூடாதென்றும் தொலைவில் இருந்து கம்பி கதவுகளுக்குப் பின்னால் இருக்கும் சிலைகளை மட்டுமே வழிபடலாம் என்றும் சொன்னது. இந்த நடைமுறை 40 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.
அயோத்தி, இந்தியாவிலேயே அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமான உத்திரபிரதேசத்தில் அமைந்திருக்கிறது. அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் உத்திரபிரதேசம், டெல்லி அதிகார மையத்துக்கு செல்லும் வழியாக அமைந்தது. இங்கே காங்கிரஸ் கட்சி வெகுகாலம் மிகுந்த செல்வாக்கோடு இருந்தது. மேல்தட்டு இந்துக்கள், முஸ்லீம்கள், தலித்துகள் எனப் பல வண்ணக் கலவையான வாக்கு வங்கி காங்கிரஸ் வசமிருந்தது.
1980 இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
ஜனதா தளத்தில் முலாயம் சிங் யாதவ் 18 சதவீத முஸ்லீம்களின் ஆதரவைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். `இஸ்லாமிய ஆதிக்கத்தால் இந்துக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்’ எனும் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு பா.ஜ. க தன் இயக்கத்தை முன்னெடுத்தது.
1984ம் வருடம் விஸ்வ இந்து பரீட்சித் பாஜகவுடன் இணைந்து கரசேவை இயக்கத்தை ஆரம்பித்தது. மசூதியை இடித்துவிட்டு அங்கே ராமர் கோவில் கட்டுவதுதான் அவர்களின் திட்டம். ராஜீவ் காந்தி தலைமைக்கு வந்தார். ஆனால் அவர் மதச்சார்பின்மை கொள்கையை தெளிவாக்கவில்லை. வாக்கு வங்கிக்காக இந்துக்கள், இஸ்லாமியரிகள் இருவரையும் அரவணைத்துச் செல்ல நினைத்தார். இதன் பொருட்டு உச்சநீதிமன்றம் ஷா பானு வழக்கில் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். சல்மான் ரூஷ்டியின் ` சாத்தானின் வேதம்’ புத்தகத்தை தடை செய்தார். கூடவே, விஸ்வ இந்து பரீட்சத்தை விட தன்னை அதி இந்துவாக காட்ட நினைத்தார். 1986ல் பாபர் மசூதியின் கதவுகளை திறந்து இந்துக்கள் வழிபட வழி செய்தார். மூன்றாண்டுகள் கழித்து மசூதிக்கு தொட்டடுத்த இடத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை செய்யவும் அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால் இந்த முயற்சிகள் ராஜீவ் காந்திக்கு தேர்தலில் பலன் தரவில்லை. முஸ்லீம்கள் முலாயம் பக்கம் போனார்கள். 1989ல் காங்கிரஸ் உத்திரபிரதேசத்தை இழுந்தது.
முன்பு இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பாஜக இதன் பிறகு நாடாளுமன்றத்தில் 85 இடங்களைப் பெற்றது. 1990ம் வருடம் இந்து போராளிகள், மசூதியை கைபற்ற முயன்றார்கள். முலாயம் சிங் அப்போது அங்கே முதல்வர். துப்பாக்கசூடு நடத்த உத்தரவிட்டார்.
முலாயம் சிங் அன்று மசூதியைக் காப்பாற்றினார். ஆனால் இந்துக்களின் வாக்குகளை இழந்தார். அடுத்த தேர்தலில் பாஜக வென்றது. கல்யாண்சிங் முதல்வரானார். அயோத்தி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது.
எந்தக் கட்சி பாபர் மசூதி இடிக்க வேண்டுமென்று சொன்னதோ அதே கட்சியிடம் உத்திரபிரதேச ஆட்சி வந்தது. கல்யான்சிங் அரசு 1991 ஜுலை மாதம் பதவியேற்றவுடன் பாபர் மசூதியைச் சுற்றியிருந்த 2.77 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொண்டது. அங்கிருந்த பழங்காலக் கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
நிலைமையை உணர்ந்த அப்போதைய பிரதமர் ராவ் 1991 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்து , முஸ்லீம் குழுக்களுடன் 90 முறை பேச்சு வார்த்தை நடத்தினார். உயர், உச்ச நீதிமன்றங்கள் கோயில் கட்டவும் பல தடைகள் விதித்திருந்தாலும் அதை மீறவே அங்கிருந்த பாஜக அரசு யோசித்துக் கொண்டிருந்தது.
1992 அக்டோபர் 30... விஸ்வ இந்து பரீட்சத் டிசம்பர் 6 அன்று மசூதிக்கு அருகே உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் கரசேவை நடத்தப் போவதாக அறிவித்தது.
நடக்கப்போகும் விபரீதங்களை உளவுத்துறை பிரதமருக்கு தெரிவித்திருந்தது. ஆனால் ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்த்து, அந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே பாஜக ஆட்சியைக் கலைக்க பிரதமர் ராவ் தலைமையிலான அரசு தயாராக இல்லை. பாஜகவின் பரம எதிரிக் கட்சியான இடது சாரிகளும் அந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.
கூடவே பிரதமர் ராவ் ஆசாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே இந்து மகாசபா, ஆர்ய சமாஜம், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புக்களுடன் சேர்ந்து ஹைதராபாத் சமஸ்தானத்தை மூஸ்லீம்களின் கட்டுபாட்டிலிருந்து விடுவிக்க களத்தில் இறங்கிப் போராடியவர். இந்தியா முழுவதும் உள்ள மடங்கள், மடாதிபதிகள். சாமியார்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்.
அதனால் பதட்டம் இருந்தாலும் டிசம்பர் 6 க்கு முன் கல்யாண்சிங் தலைமையிலான ஆட்சி கலைக்கப்படவில்லை.
டிசம்பர் 6 அன்று காலை பிரதமர் ராவ், தனது குடும்ப டாக்டர் ஸ்ரீநாத ரெட்டியையும், ஆஸ்தான ஜோசியர் என்.கே. சர்மாவையும் சந்தித்தார். அப்போது அவர்கள் பேசியதை வெளியில் சொல்ல மறுத்துவிட்டார் சர்மா.
காலை ஒன்பதரை மணி...மத்திய உள்துறை செயலாளர் மாதவ் காட்போலே, உபியில் இருந்த மத்திய ரிசர்வ் படையின் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை அறிந்து கொண்டார். மாநில அரசு கேட்டுக்கொண்டால், மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திராமல் உடனே உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
சரியாக காலை 11.30 மணிக்கு அயோத்தியில் கூட்டம் ஆரம்பமானது. விஸ்வ இந்து பரீட்சத், பாஜக தலைவர்கள் அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மத்தியில் உரையாற்றினார்கள். கூட்டம் அமைதியாக அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது. பகல் 12 மணிக்கு மசூதியைச் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.
சற்று நேரத்தில், ஒரு கரசேவை இளைஞன் மசூதியை சுற்றியிருந்த தடுப்பை தாண்டிக் குதித்து, மசூதிக்குள் ஊடுருவி அதன் மேற்புறத்தில் ஏறிவிட்டான். காவல்துறையிரால் தடுக்க முடியவில்லை. அந்த இளைஞனைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் தடுப்பின் மீது ஏறிக் குதித்து, மசூதியின் மேற்கூரையில் ஏறிவிட்டார்கள். மேடையிலிருந்த பாஜக தலைவர்கள் அதிர்ந்து போனார்கள். அங்கிருந்தவர்களை கீழே இறங்குமாறு அத்வானி மைக்கில் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். பலனில்லை.
மசூதி மீது தாக்குதல் துவங்கிய உடனேயே கல்யாண்சிங்குக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. 25,000 துணை ராணுவப்படை, தவிர 35 கம்பெனி பி.ஏ.சி, 4 சி.ஆர்.பி.எஃப், 15 கண்ணீர்ப்புகை குண்டு படை, 15 ஆய்வாளர்கள், 30 துணை ஆய்வாளர்கள், 2300 காவலர்கள் கொண்ட படை அயோத்தியில் தயாராக இருந்தது.
இருந்தும் மத்திய படையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாநில அரசின் உத்தரவு அவர்களுக்கு இல்லை. எக்காரணம் கொண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது என்று சொல்லியிருந்தார் முதல்வர் கல்யாண்சிங்,
ஒரு கட்டத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
சரியாக இரவு ஒன்பது மணிக்கு குடியரசுத் தலைவர், உபி அரசைக் கலைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தந்தார். இந்திய மதச்சார்பின்மையை ஒரு கேள்விக்குறியாக்கிவிட்ட பெருமிதத்தில் கரசேவகர்கள் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
அதே சமயம் அன்றிலிருந்து டிசம்பர் 6 தினத்தின் பதட்டம் இன்னும் இந்தியாவை விட்டுக் கிளம்பாமல் நிரந்தரமாக தங்கிவிட்டது.

Leave a comment
Upload