
சி.முருகேஷ் பாபு
---------
சிக்னலில் சிவப்பு என்றால் நில் என்று அர்த்தம்… ஆனால், நாம் சிவப்பில் இருந்தே நகரத் தொடங்குவோம்… இப்போது பெருநகரங்களில் பெரும்பாலும் சிக்னல்களில் விளக்குகளோடு சேர்த்து எத்தனை நொடிகள் சிக்னல் ஒளிரும் என்பதும் டிஜிட்டலாக அறிவிக்கப்படுகிறது. அது சிக்னல் ஒளிர்வதற்கான கால அளவு மட்டுமல்ல… நம்முடைய பொறுமைக்கும் காத்திருக்கும் தன்மைக்குமான கால அளவும்தான்!
டீமானிடைசேஷன் சமயத்தில் ஏடிஎம் வாசலில் வரிசையில் நிற்கும்போது 'ஏன் இப்படி வதைக்கிறார்கள்?' என்று கேட்டவர்களிடம் அரசு ஆதரவு உணர்வு கொண்டவர்கள் சொன்ன வார்த்தைகள் 'சினிமா டிக்கெட்டுக்காக எவ்வளவு நீண்ட வரிசையாக இருந்தாலும் காத்திருக்கிறீர்கள்… நாட்டின் நலனுக்காக காத்திருக்க மாட்டீர்களா..?' என்பதுதான்.
ஆனால், ஏன் வதைக்கிறார்கள் என்று கேட்டவர்களும் சரி, நாட்டு நலனுக்காக பேசியவர்களும் சரி... சிவப்பு சிக்னலில் காத்திருப்பதில்லை. இத்தனைக்கும் அதிகபட்சமாகப் போனால் இரண்டு நிமிடங்களுக்கு சிவப்பு இருக்கும்… அந்த இரண்டு நிமிடங்களில் எதுவும் மாறிவிடாது. ஆனால், நாம் காத்திருப்பதில்லை.

இந்த விதி மீறலின் காரணம் அவசரம் இல்லை, அலட்சியம்! நாம் ஏன் வண்டியை நிறுத்த வேண்டும் என்ற அலட்சியம். நம்மை நிறுத்த யார் இருக்கிறார்கள் என்ற அலட்சியம். இது சிக்னலில் மட்டுமல்ல… நம் வாழ்க்கையிலேயே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்னதாக இருக்கும் விதிகளை மீறும் இயல்பு நம் மனதிலேயே படிந்து விடும்.
'பல்லு விளக்கிட்டு காப்பி குடினு படிச்சு படிச்சு சொல்றேனே… காதிலே விழலையா?' என்ற அப்பாவின் அதட்டலில் தொடங்கி, இரவு நீண்டநேரம் கழித்து வந்தபோதும் அபார்ட்மெண்ட்டின் கேட்டை மூடாமல் போவது வரை எல்லாமே அலட்சியம்தான்! இது நம் குணத்தில் ஒன்றாகவே மாறிவிடுகிறது.
இந்த குணத்தை எப்படி சரி செய்வது… எப்படி திருத்திக் கொள்வது? சும்மா ஜாலிக்காக வண்டியின் பின்பக்கம் எழுதி வைத்துக் கொள்ளலாம்… 'இது என் அப்பன் வீட்டு ரோடு' என்று! அதை ஜாலி கமெண்டாகவே விட்டுவிட்டு ரோட்டில் மற்றவர்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்க வேண்டும்.
சிவப்பு ஒளிர்ந்தால் நிற்பது என்று உள்ள பூர்வமாக உறுதி எடுத்துக் கொள்வோம். அப்படி காத்திருக்கும்போது பச்சை ஒளிர்ந்த திசையில் வாகனங்கள் செல்வதைப் பார்க்கும்போது புதிய உற்சாகம் பிறக்கும். அவர்களுக்கு மதிப்பு கொடுத்து நாம் நிற்கும்போது அவர்கள் முகம் மலர்ச்சியாக இருக்கும். அது நமக்குள்ளும் மலர்ச்சியைக் கொடுக்கும்.
சிவப்பு ஒளிரும் இடத்தில் காத்திருப்பவர்கள் எப்போது உள்ளே பாய்வார்களோ என்ற பதற்றம் இல்லாமல் அவர்கள் பயணிப்பார்கள். உங்களை நோக்கி அவர்கள் சிந்தும் புன்னகையில் நன்றி இருக்கும்.
அந்த புன்னகை ருசி நமக்கு ஒருமுறை கிடைத்துவிட்டால் அடுத்தடுத்து அந்த ருசிக்காக மனம் ஏங்கும். வண்டியை ஓட்டிச் சென்று அலுவலக பார்க்கிங்கில் நிறுத்தும்போது உள்ளே வரும் இன்னொரு வாகனத்துக்காக வழி விடுவோம். அந்த வாகன ஓட்டியின் புன்னகையை ரசிப்போம்.
படியேறும்போது அல்லது லிஃப்டில் பயணிக்கச் செல்லும்போது மற்றவர்களுக்கு துணையாகச் செல்வோம். அல்லது அவர்கள் இறங்கிச் செல்லும்வரை காத்திருப்போம். அவர்கள் புன்னகையை பரிசாகப் பெறுவோம்.
இந்தப் புன்னகை நம் பொறுமைக்கு கிடைக்கும் பரிசு. இந்த நிலை தொடரும்போது ‘அவர் ரொம்ப தன்மையான ஆளு… மத்தவங்களுக்கு வழிவிட்டுக் காத்திருப்பார்… அவ்ளோ குணம்…’ என்பார்கள்.
சிவப்பு சிக்னலில் நிற்கும்போது நம் குணமே மாறும். முயற்சித்துப் பார்க்கலாமே!
எல்லாம் சரி… நான் நிற்கத் தயார்… ஆனால், பின்னால் இருந்து ஹாரன் ஒலித்து டார்ச்சர் பண்ணுகிறானே… அவனை ஒன்றும் சொல்ல மாட்டீர்களா என்கிறீர்களா… அவர்தான் நம் அடுத்த இலக்கு… அந்த குணத்தையும் அலசி விடலாம்!
சந்திப்போம்

Leave a comment
Upload