ஜெ மரணம் - மர்மங்கள் பவனி!
விடை கிடைக்காத கேள்வி நேரம்!
-மணிஷ்யாம்

தமிழக அரசியலில் சவால்களை எதிர்கொண்டு ஆறு முறை முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்தவர் ஜெயலலிதா. அவர் மறைந்து ஓராண்டு ஆகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு 2016 செப்டம்பர் 22-ந் தேதி நள்ளிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 5-ந் தேதி இரவு அவர் உயிர் துறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த 75 நாட்களில் நடந்த நிகழ்வுகள் பலவற்றிற்கும் இதுநாள் வரை விடை கிடைக்காத நிலையே நீடிக்கிறது. அந்த மனக்குரலுக்கு இடையில்தான் நினைவு அஞ்சலி என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
ஜெயலலிதா எந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் - அவர் உயிர் துறக்கும்வரை முதல்வராக இருந்தார். ஆனால் அவருக்கு இருந்த கருப்புப் பூனைப்படை பாதுகாப்பு ஜெ. மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோதும் அதன்பிறகும் இருந்ததாகத் தெரியவில்லை. எப்போது யாரால் அது திரும்பப் பெறப்பட்டது?
பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோதே ஜெயலலிதாவை தனது உற்ற நண்பர் என்று கூறியவர். ஒரு சமயம் தண்டனை பெற்று யாரையும் சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை ஜாமினில் வெளிவந்த ஜெ.வை, வீடு தேடி வந்து சந்தித்துச் சென்றவர். அப்படிப்பட்டவர், ஜெ. மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் பார்க்க வரவில்லை. இது ஏன்?
இப்படிச் சொல்லும் அ.தி.மு.க. நிர்வாகி இன்னொன்றையும் சொல்கிறார். எம்.ஜி.ஆர். இதே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி நேரில் வந்து தேவையான மருத்துவ வசதிக்கு வெளிநாடு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்தார். ஜெ. வுக்கு மோடி ஏன் இப்படிச் செய்யவில்லை? அதோடு ஜெ. மறைந்த தகவல் வெளியாவதற்கு முன்பு வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார் - இது ஏன்? இதனால் ஜெ. இறந்தது எப்போது என்ற கேள்வியும் எழுந்தது!
ஜெ. மருத்துவமனையில் இருந்தபோது அவர் நலமாக உள்ளார். சாப்பிடுகிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று கூறினார்களே! டாக்டர் ரெட்டி ஒருபடி மேலே சென்று அவர் தயிர் சாதம் சாப்பிட்டார், நடைபயிற்சி செய்கிறார். அவர் விரும்பும்போது வீடு செல்வார் என்றார்! இப்போது அமைச்சர்கள் முதல் அனைவரும் சிகிச்சையில் இருந்த ஜெ.வை நாங்கள் யாரும் பார்க்கவில்லை என சத்தியம் செய்கின்றனர். இதில் அப்போது தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவும் அடங்குவார். இவர்களை பார்க்கவிடாமல் தடுத்தது யார்?
ஏழு கோடி மக்களுக்கு முதல்வராக இருந்த ஜெ. வை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ தெரிவிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றது எப்படி? உள்நோயாளிக்கு சிகிச்சை அளிக்குமுன் மருத்துவமனை பதிவேட்டில் நெருங்கிய உறவினர் யாராவது கையெழுத்து போடவேண்டும். இதைப் போட்டது யார்? ஜெ.வின் உறவினர் தீபா, தீபக் ஆகியோர் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்களும் லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்டு பீலேவும் சிங்கப்பூரிலிருந்து இரண்டு பெண் பிசியோதெரபிஸ்டுகளும் வரவழைக்கப்பட்டனர். இவர்களை வரவழைத்தது யார்? மருத்துவமனையா? மத்திய அரசா, தமிழக அரசா? சசிகலா குடும்பத்தினரா? இவர்கள் அளித்த சிகிச்சை என்ன? இப்படி பல கேள்விகளை எழுப்புகின்றனர்.
இதைவிட மருத்துவமனையில் ஜெ. இருந்தபோது மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. பொதுச்செயலாளர் என்ற முறையில் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கடிதத்தில் கைரேகை பதியப்பட்டிருந்தது. ஜெ. அப்போது எந்த நிலையில் இருந்தார் என்பது ஒருபுறமிருக்க அப்படி கைரேகை வாங்கும்போது சில நடைமுறைகள் உள்ளன. இதுபற்றி குற்றவியல் நடைமுறை சட்டத்திலும் நடைமுறை விதிகளிலும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. கைரேகை வாங்கும்போது அந்த பகுதிக்கு உட்பட்ட குற்றவியல் நடுவர் வந்து அந்த கடிதத்தில் உள்ள ஷரத்துக்களை சம்பந்தப்பட்டவருக்கு படித்துக் காட்டி உரியவரின் சம்மதம் பெறப்பட்ட பின்னரே கைரேகை பதிய வேண்டும்.
அதுவும் நீதிபதியுடன் வந்த நபரில் ஒருவர்தான் ரேகையை பதிய வேண்டும். அதில் நீதிபதி உறுதிப்படுத்தி எழுத வேண்டும். அதோடு இவை அனைத்தும் அந்த பகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவர் ஒருவர் முன்னிலையில் நடைபெற வேண்டும். அதன் பிறகு அந்த மருத்துவர் இதை உறுதிப்படுத்தி சான்றிதழ் கொடுக்க வேண்டும். இவை பின்பற்றப்பட்டதா?
இப்படி கைரேகை கொடுத்த ஜெயலலிதா அடுத்த இரண்டொரு நாளில் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட கடிதத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து இடம்பெற்றிருந்தது! இது எப்படி என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்!
தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வரம்பும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் உள்பட 70க்கும் மேற்பட்டோர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதில் வெளிநாட்டு மருத்துவர்கள், அமைச்சர்கள், கவர்னர் என பலரையும் விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை.
விசாரணை முடிவில் சந்தேகங்களுக்கான விடை கிடைக்குமா என்பது ஒருபுறமிருக்க இந்த விசாரணை கமிஷன் முடிவை ஏற்பதும் ஏற்காததும் அமைச்சரவையின் முடிவைப் பொறுத்தே அமையும். இதை ஏற்கவும் செய்யலாம் தள்ளுபடியும் செய்யலாம்.
அரசியல் வாழ்க்கையில் பொறுமையே இல்லாதவராக, கிடுகிடுவென்று முடிவு எடுப்பவராக இருந்தவர் ‘ஜெ’.
அவரது மறைவில் எழும் கேள்விகளுக்கு ஓராண்டாகியும் பதில் தேடப்படுவது ‘விதி’யின் விளையாட்டு!

Leave a comment
Upload