சின்ன வயதில் பாடப் புத்தகத்தில் படித்த விஷயங்களை வயதான (ஓரளவு தான்) பின் பார்ப்பது ஒரு பரவசம்.
அப்படி சீனாவின் பெருஞ்சுவரைப் போலவே வசீகரித்த ஒரு இடம் அமிர்தசரசில் இருக்கும் பொற்கோவில்.
சீக்கியர்களின் புனித இடங்களில் ஒன்றான பொற்கோவிலுக்கு சமீபத்தில் சென்ற போது புல்லரித்தது. அதற்கு புனிதமான இடத்தில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது ஒரு புறம் இருக்க, சின்ன வயதில் பாடப்புத்தகங்களிலும், 1984 களில் செய்தித்தாள்களிலும் (காலிஸ்தான் நினைவிருக்கிறதா ?) மட்டுமே பார்த்த ஒரு இடம் இன்று நேரில்... என்பதும் காரணமாக இருக்கக் கூடும்.
இன்றைய விக்கிபீடியா உலகில் தகவல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி என்பது தென்னை மரத்தின் பயன்கள் போன்ற ஒரு கட்டுரையின் பிரயோகம் தான் என்றாலும் அது தான் உண்மை.
இருந்தாலும் உங்களை இந்த தளத்தை விட்டு வெளியே போய் தேடும் அவஸ்தையில் ஆழ்த்த விருப்பம் இல்லாததால் குண்டடி விஷயங்கள் இங்கே. (புல்லட் பாயிண்ட்ஸ். !!)
* பொற்கோவிலுகு ஹர்மந்திர் சாஹிப் என்ற பெயரும் உண்டு.
* குரு ராம்தாஸ் என்பவரால் 1577 ல் ஒரு செயற்கை ஏரியைச் சுற்றி கட்டப்பட்டது பொற்கோவில்.
* அஹ்மத் ஷா அப்தாலி ஆப்கானிஸ்தானிய படையெடுப்பால் 1757 தரைமட்டமாக்கப்பட்டது பொற்கோவில். மீண்டும் 1762 படையெடுப்பின் போது அந்த ஏரியை குப்பையால் நிரப்பியது முகாலய படையெடுப்பு.
* 1809ம் ஆண்டு மஹாராஜா ரஞ்சித் சிங் சீக்கிய அரசை நிறுவிய பின் மீண்டும் நிறுவினார் பொற்கோவிலை. பொன்னால் எழுப்பப்பட்டது என்னவோ 1830ல் தான்.
* சீக்கியர்களின் புனிதக் கோவிலான இங்கு எந்த மதத்தை, மொழியை சேர்ந்தவர்களானாலும், கோவிலுக்குள் சென்று வழிபடலாம். தலையை மட்டும் ஒரு துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும்.
* எந்நேரமும் கோவிலில் உணவு பரிமாறப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. இந்த சமையலறையை சுற்றிப் பார்ப்பதற்கே சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் என்றால் பாருங்கள்.
* கோவிலில் நான்கு புறமும் வாயில்கள் இருக்கின்றன.
* நம்மூர் போலவே கொஞ்சம் ஆள் தெரிந்தால் வரிசையில் நிற்காமல் உள்ளே சென்று தரிசனம் செய்து விட்டு வரலாம். (கொஞ்சம் குற்ற உணர்ச்சி வருவதை தவிர்க்க முடியவில்லை)
* உள்ளே எந்த தெய்வங்களின் படங்களும் இல்லை. சீக்கிய புனித நூல் ஆதி கிரந்த் புத்தகத்தை வைத்தே பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது. புத்தகத்தை தெய்வம் போலவே பள்ளியெழுப்பி பின் தூங்க வைத்து...இது போன்ற சடங்குகள் நடைபெறுகிறது.
* இங்கு கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அடுத்த காம்பெளண்டில் உள்ள ஜாலியன் வாலா பாக்கை பார்க்காமல் செல்வதில்லை.
* கோவிலில் நடந்த சீக்கிய ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரைப் பற்றி கேள்வி எழுப்பினால் உள்ளூர்காரர்கள் அதை மறந்து விடவே விரும்புகிறார்கள்.
* மொத்தத்தில் கோவிலைச் சுற்றி ஒரு வலம் வந்தால், அங்கு அமர்ந்திருந்து பிண்ணணியில் ஒலிக்கும் சீக்கிய பஜனைப் பாடல்களின் சூழ்நிலையில், நீங்கள் கடவுள் நம்பிக்கை இருப்பவராக இருந்தாலும் சரி, இல்லை கமலஹாசனாக இருந்தாலும் சரி, மனதிற்குள் ஏராளமான நிம்மதியும், பேரமைதியும் வந்து நிரம்புவதை சத்தியமாக உணரலாம்.
ஹாங்காங் ராம்.



Leave a comment
Upload