தொடர்கள்
பொது
"மறக்க நினைக்கும் பிரிவும் நினைக்க வைக்கும் நட்பும்!" ஜெயலலிதா பற்றி சௌகார் ஜானகி

ஜெயலலிதாவை நினைக்கும்பொழுது, விவரம் அறிந்தவர்களுக்கு கண்டிப்பாக செளகார் ஜானகியின் முகமும் நினைவுக்கு வரும்.

20171106102222741.jpg

முதலமைச்சராக அப்போது எம்.ஜி.ஆர். இருந்த நேரம்.. அவர் தலைமையில் பல்கலை மண்டபத்தில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகியிருந்தது.  விழாவை தொகுத்தளிக்கும் பொறுப்பு முதலில் செளகார் ஜானகியிடம் தரப்பட்டது. விழா தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு 'ஜெயலலிதாவும் உங்களுடன் சேர்ந்து தொகுத்தளிக்கட்டும்' என்று மேலிட கட்டளை வர, 'எதற்கு இணைந்து?... அவரே முழுக்கவும் செய்யட்டும்' என்று கோபமாக சொல்லி அரங்கை விட்டு வெளியேறினார் செளகார்.  

இது நடந்தது 80களில். காலங்கள் உருண்டோட, ஜெயலலிதா முதல்வரானார்.  அவரை சந்திக்கும் திரையுலக பிரமுகர்கள் செளகார் பெயரையே உச்சரிக்கத் தயங்குவார்கள்.

ஆண்டு 2013...  ஜெயலலிதா, தன் காலத்திய நடிகைகள் பல பேரை போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்து, விருந்தளித்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.  

அதில் செளகார் ஜானகி இடம் பெற்றிருந்தது பலருக்கும் சர்ப்ரைஸ்.

இது எப்படி நடந்தது?! நடிகை சௌகாரே சொல்கிறார்....

"நார்மலாகவே நான் கொஞ்சம் ஷார்ட் டெம்பர்டு பெர்சன். அதுலயும் என் சுய மரியாதையை பாதிக்கும்படியா நடந்துக்கிட்டா என்னால எப்படி பொறுக்க முடியும்? அதான் முழு விழாவையும் அவங்களே தொகுத்து வழங்கட்டும்னு கோபமா வந்துட்டேன்."

" அதுக்கப்புறம், you won't beleive more than 30 years நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலே, பேசிக்கலே, பழகலே, infact எங்க இரண்டு பேருக்கும் நடுவுல ஒரு இரும்புத் திரையே விழுந்த மாதிரி இருந்தோம். இந்த முப்பது வருஷமும் எங்களுக்குள் தொடர்பு இல்லையே தவிர அவங்களோட ஒவ்வொரு வளர்ச்சியும் நான் கவனிச்சிட்டுதான் இருந்தேன்."

" 2009 - ன்னு நினைக்கிறேன் ஜெயா டி.வி.யிலே 'திரும்பிப் பார்க்கிறேன்'னு ஒரு அருமையான நிகழ்ச்சி ஆரம்பிச்சாங்க. சினிமா துறையிலே பிரபலமான ஒவ்வொருத்தரும் அவங்க வாழ்க்கையை சொல்றமாதிரி ஒரு அழகான கான்செப்ட்."

 

"அந்த நிகழ்ச்சியிலே நான் பங்கெடுக்கணும்னு க.பரத்துனு ஒருத்தர் போன் பண்ணினார். நான் கொஞ்சம் யோசிச்சேன்.எங்களுடைய இத்தனை வருட பிரிவுகளுக்குப் பின்னால் அவர்களுடைய டி.வி.யில் என்னுடைய நிகழ்ச்சி வந்தால் நன்றாக இருக்குமா? ஜெயாவுக்கு இது பிடிக்குமா? என்றெல்லாம் யோசித்தேன்."

"ஆனால் அந்த நண்பர் என்னை விடாப்பிடியாக கெஞ்சினார். நானும் எனக்கே உரிய மனோதைரியத்தில் சம்மதித்தேன். அந்த நிகழ்ச்சியில் என் வாழ்க்கை அனுபவங்களை சொல்லும்போது ஜெயாவைப் பற்றியும்  என் மனதில் இருந்த உண்மைகளை கூறினேன்."

" அரசியலில் அவர் ஏற்படுத்திக்கொண்ட அசகாய வளர்ச்சி,அவருடைய பல மொழிகள் பேசும் திறமை, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு அவர் வாழ்ந்து காட்டும் தனித்தன்மை, அவர் நாட்டுக்கு மட்டுமல்ல.. பெண்ணினத்துக்கே பெருமை. அவருடைய திறமைக்கு ஒருநாள் இந்திய பிரதமராகவே வரும் தகுதி பெற்றவர் என்று அந்த நிகழ்ச்சியில் கூறினேன்."

"அந்த நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் ஒளிபரப்பானது. அதைப் பார்த்த ஜெயா ஒரு தனிப்பட்ட நபர் மூலம் எனக்கு  கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதை கடிதம் என்று சொல்வதை விட அன்புமழை என்றே சொல்லலாம். அந்த நாளில் அவர் என் குடும்பத்துடன் பழகிய அவரது பசுமையான சின்ன வயது ஞாபகங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆமாம்..அவர் 1958-களில் எனது பக்கத்து வீட்டுக்காரர். அப்போ நானும் அவங்க அம்மா சந்தியாவும் திரைப்படங்கள்ல நடிச்சிட்டு இருந்தோம். ஜெயா அப்போ ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தாங்க.  என் மூத்த மகள் யக்ஞபிரபாவை விட சில வயதுகள் தான் மூத்தவர் ஜெயா. ரெண்டு பேரும் Presentation Conventல படிச்சிட்டு இருந்தாங்க.. Best Friends.. பள்ளிக்கூடம் விட்டதும் சந்தியாம்மா ஷீட்டிங் லேருந்து திரும்ப வரவரைக்கும் ஜெயா என் வீட்லதான் இருப்பாங்க."

20171106102254539.jpg

"She was a very good student..ஆனா அவங்க சினிமாத்துறைக்கு வருவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...திடீர்னு பார்த்தா ஶ்ரீதர் சாரோட 'வெண்ணிற ஆடை' படத்துல ஹீரோயினா பார்க்கறேன். அப்புறம் ஆயிரத்தில் ஒருவன்.. அது இதுன்னு புயல் வேகத்துல நடிக்க ஆரம்பிச்சாங்க.. நான் அவங்க கூட நடிக்க ஆரம்பிச்சது 'மோட்டார் சுந்தரம்பிள்ளை'ன்னு நினைக்கறேன். இன்னும் கூட சில படங்கள் சேர்ந்து நடிச்சேன். ஒளி விளக்குன்னு ஒரு படம்.. ஜெமினி வாசன் எடுத்தார்.நானும் ஜெயாவும் தான் கதாநாயகிகள். அந்தப் படத்துலே தான் டைட்டில்லே பிரச்சனை வந்தது. நான் Senior most artist அவங்க peak-ல இருக்கற ஹீரோயின்..அது கூட பெரிய ப்ரச்சனை ஆகல..அப்புறம்தான் அந்த விழா மேட்டர்...அதுக்கு பிறகு ரெண்டு பேருக்குள்ளயும் நிரந்தர பிரிவு ஆகிடுச்சு.

"நல்ல மனங்களுக்கு இடையே பிரிவு வந்தால் பிறகு பலமான உறவு வரும் போலிருக்கு.. 2011-ல் அவர் தமிழக முதல்வராக பதவியேற்றார். அந்த பதிவியேற்புக்கு நான் சிறப்பு விருந்தாளியாக கலந்துகொண்டேன். மறுநாளே அவர் இல்லத்தில் எனக்கு ஒரு ஸ்பெஷல் விருந்து கொடுத்தார்."

"30 வருடங்கள் கழித்து அவரை சந்தித்ததே எனக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமைந்தது. நாங்கள் பேசிக்கொண்ட கணங்கள் எல்லாம் இனித்தது. அதன்பிறகு 2013- டிசம்பர் மாதம் அவர் வீட்டில் எனக்கும் மற்றும் எங்கள் காலத்தில் எங்களுடன் கதாநாயகிகளாக நடித்த சச்சு, ஜமுனா, ராஜஶ்ரீ போன்றவர்களை எல்லாம் அழைத்து ஒரு மாபெரும் விருந்தளித்து எல்லோருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். நாங்கள் எல்லோரும் குரூப்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அந்த புகைப்படம் இன்றும் எங்கள் வீட்டு ஹாலை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. 

அதன்பிறகு 2016 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அவருக்கு நேர்ந்த கொடுமைகளை தொலைக்காட்சி மூலம் பார்த்தேன். 75 நாட்கள் அவர் நடத்திய மரணப் போராட்டம் என் இதயத்தை கசக்கிப் பிழிந்தது. பின் இரக்கமில்லாத அந்த இறைவன் என் ஆருயிர்த்தோழியின் உயிரை எடுத்துக்கொண்டதையும் தொலைக்காட்சியில் பார்த்தேன். இன்னும் ஒரு தங்கச்சிலையாய் என் நெஞ்சில் பதிந்திருக்கும் அவர் உருவத்தை உயிரற்ற சடலமாக நான் பார்க்க விரும்பவில்லை.

எப்படி இருந்தால் என்ன? ஜெயலலிதா சாதனைகளுக்காக பிறந்தார். சரித்திரமாக வாழ்ந்தார். தமிழக முதல்வராய் மக்கள் மனதில் இன்றும் ஆட்சி புரிந்துகொண்டிருக்கிறார். அந்த நினைவுகளே எனக்கு போதும்."

தன் மனதில் உள்ள உண்மைகளைக் கொட்டிய நிம்மதியில் ஜெயாவின் நினைவில் ஆழ்ந்தார் சௌகார் ஜானகி.

 - நமது நிருபர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

­