Facebook எனும் சோஷியல் மீடியா வந்தாலும் வந்தது... அதன் மூலம் ஏகப்பட்ட புதிய எழுத்தாளர்கள் தமிழுக்கு அறிமுகமாகிவிட்டார்கள். அவர்களில் சிலர் மிகவும் சுவையாக எழுதுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட மணியான 'முத்திரை' முகங்களின் சில சுவாரஸ்ய பதிவுகள், இப்பகுதியில் இனி விகடகவி விருந்தாக வாரா வாரம்!...
--------------- இந்த வாரம் வல்லபா ஶ்ரீனிவாசன் எனும் பெண்மணியின் முக நூல் பக்கத்திலிருந்து-----------

"ஃபேஸ்புக்கில் முதலில் ஆங்கிலத்தில் இரண்டு வரியோ ஒரு கவிதையோ எழுதி இரண்டு மூன்று லைக் வாங்கிக் கொண்டிருந்தேன். ஆர்விஎஸ், ஆனந்த் ராகவ் எழுதுவதைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கும். ஒரு முறை ‘ழ’ எழுத்து நிறைய வரும்படி வாக்கியங்கள் எழுதும் போட்டி வைத்தார் ஆர்விஎஸ். அதில் பலரும் எழுத நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அப்பொழுதுதான் எனக்குத் தமிழில் எழுத வரும் என்று அறிந்தேன். சிறு வயதில் ஏதேதோ எழுதியதுண்டு - டயரியில். 😬ஆர்விஎஸ் வெகுவாக ஊக்கப் படுத்தியதில் எழுத ஆரம்பித்தேன். அதில் மேலும் நண்பர்கள்.
சுஜாதா ட்ரெயில் போகலாம் என்று சந்திரமௌலீஸ்வரன் சொன்னதும் சட்டென்று கிளம்பிவிட்டேன். ஒரு அழகான நண்பர் குழு வழி நெடுக பேசிக் கொண்டே, சுஜாதா நிறைய மற்ற எழுத்தாளர் கொஞ்சம், என்றபடி அலசோ அலசு என்று அலசிக்கொண்டிருக்கும் போதே ஶ்ரீரங்கம் வந்துவிட்டது. அங்கு நடந்த அனுபவங்கள், ஆச்சர்யங்களை முதன் முதலாக ‘சுஜாதா வந்திருந்தார்’ என்று தொடராக எழுதியதும் மேலும் பல நண்பர்கள். அதில் இராமுருகன் கமண்ட் போட்டுப் பாராட்டியதும் ஆச்சர்யமாக, ஊக்கமாக இருந்தாலும் பயமாகவும் இருந்தது. அவருடனான சந்திப்பு நட்பில் ஆரம்பித்திருந்தது. அவர் என்னை நிறைய எழுத ஊக்கப் படுத்தினார். ஃபோகசாக எழுதுங்கள் முடியும் என்று அவர் சொன்னாலும் கதை, நாவல் என்று எனக்கு ஏதும் எழுத வரவில்லை.
நாளொரு போஸ்ட் பொழுதொரு கமண்ட் என்று போய்க் கொண்டிருந்தது. மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. நண்பர்கள் வட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. ஹெரிடேஜ் ஆர்வம் என்னைக் கடத்திக் கொண்டு போனது. ஆன்லைனில் எழுதித் தள்ளியபடி இருந்தாலும் வலம் இதழில்தான் முதன் முதலாக என் கட்டுரை வெளி வந்தது. இந்துவிலும் டைம்ஸ் ஆஃப் இன்டியாவிலும் ‘பேப்பரில் பேர்’ வந்துவிட்டிருந்தாலும் புத்தகத்தில் எழுத்தில் அதுதான் முதல்.
கிழக்கு பதிப்பகம் சென்னையைப் பற்றிய கதைப் போட்டி அறிவித்ததும் ‘ஏதோ கதைப் போட்டி நமக்கென்ன?’ என்றிருந்த என்னை என் தோழியர் குழு வெகுவாக ஊக்கப்படுத்தி எழுத வைத்தனர். முக்கியமாக ரேவதி வெங்கட். கதை எழுத வராது, பாத்திரங்களுக்கு பெயர் வைக்கத் தெரியாது என்ற என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி எழுதச் சொன்னாள். என்னத்த எழுதறது என்று வாக்கிங் போய்விட்டேன். திரும்பி வந்ததும் ஒரே மூச்சில் எழுதிய கதை.
இரண்டு மணி நேரத்தில் திருத்தம் தேவைப் படாமல் கதை தன்னை எழுதிக் கொண்டிருந்தது. கதாபாத்திரத்திற்குப் பெயர்? இருக்கவே இருக்கிறார் எழுத வைத்தவர். அனுப்பவும் வெகுவாகத் தயங்கி, சில நண்பர்களிடம் காண்பித்து, அனுப்பித்தான் பார்ப்போமே என்று அனுப்பி, யாராவது படித்து திட்டப் போகிறார்கள் போனால் போகிறது என்று மறந்துவிட்டேன்.
பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டது என்றதும் ஒன்றும் புரியவில்லை. முதல் கதை பிரசுரமாகிறது என்றால் பின்னே எப்படி இருக்கும்?
இன்று மாலை அந்த பார்சல் வந்தது. என் மகன் பிரித்தான். பிரித்ததும் வண்ண வழுவழு அட்டையில் சிறுகதைத் தொகுப்பு. தாமரை இதழைப் பிரிப்பது போல பிரித்ததும் புன்னகை மலர்ந்தது. 107 ம் பக்கத்தில் என் முதல் கதை. சந்தோஷமாகத்தான் இருந்தது. கொஞ்சம் பெருமைப் பட்டுக் கொள்கிறேன். மன்னித்துவிடுங்கள். உங்கள் வல்லபாதானே.

எழுத வைத்த அனைவருக்கும், பாராட்டி தொடர்ந்து என்னை எழுத ஊக்குவித்த ஃபேஸ்புக் நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. 🙏🏼
அருமையாக யோசித்து சென்னையை மையமாக வைத்த கதைகள் என்று போட்டி அறிவித்து என்னைப் போன்றோரும் எழுத வாய்ப்பளித்து, அதற்குப் பரிசும் அளித்துப் பாராட்டி, பிரசுரித்து ஊக்குவித்த கிழக்கு பதிப்பகம், பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும், ஹரன் பிரசன்னாவிற்கும் பல கதைகளுக்கு நடுவில் பொறுமையாக என் கதையையும் படித்துத் தேர்ந்தெடுத்த திரு கே என் சிவராமன், திரு இராமுருகன் அவர்களுக்கும் நன்றி. 🙏🏼.

Leave a comment
Upload