தொடர்கள்
தொடர்கள்
'ரேணு...ரம்யா..ராகினி..

ரேணு.. ரம்யா.. ராகினி

20171106135047302.jpg

“ஒரு வருஷம் எவ்ளொ சீக்கிரமா ஓடிப்போச்சில்ல?!” என்றபடியே ரம்யா வீட்டினுள் நுழைந்தாள் ரேணுகா ஆன்ட்டீ!

டி.வி.யில் ஜெயலலிதா அஞ்சலிச் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த ரம்யா டி.வியை அணைத்துவிட்டு ‘வாங்க ஆன்ட்டி’ என்றாள்.

“காலைலேர்ந்து இதே நியூஸ்தான்… அந்தம்மாவுக்கு அஞ்சலி செலுத்த எத்தனை ஆயிரம் பேர் வந்திருக்காங்க பார்த்தயில்ல?! “ என ரேணுகா அதிசயிக்க..
 
“ஆயிரக்கணக்கான பேர் ஒரே நாள்ல வந்து நம்ம சென்னையை ஒரு வழி பண்ணிட்டாங்க” என அலுப்போடு இடைமறித்து உள் நுழைந்தாள் ராகினி.

“ வா ராகினி… எதுக்கு இவ்ளோ சலிப்பு?!”

“பின்ன என்னக்கா?… இன்னிக்குன்னு பார்த்து எனக்கு சாந்தோம் ஏரியாவுல ஷீட்டிங். போய் சேர்றதுக்குள்ள படாதபாடு பட்டுட்டேன். செமை டிராஃபிக் ஜாம்!”

“ உங்க டைரக்டர் பிளானிங் தான் தப்பு. இன்னிக்கு அந்த ஏரியா பிஸியா இருக்கும்னு தெரியுமில்ல..  அதுக்கப்புறமும் ஏன் அங்க  பிளான் பண்ணாரு?…அதிருக்கட்டும்… உங்க விஷால் வேட்புமனு தள்ளுபடி ஆயிருச்சே கவனிச்சியா?”

“எங்க விஷாலா?…ஓ… சினிமாக்காரர்னால அப்படி சொலறீங்களா? அவர் ஆர்.கே.நகர்ல நிக்கறேன்னு சொன்னதும் இண்டஸ்ட்ரியிலயே நிறைய எதிர்ப்பு. ‘ஏற்கனவே ரெண்டு சங்கங்களுக்கு தலைவரா இருந்துகிட்டு இவருக்கு எதுக்கு எந்த வேண்டாத வேலை?.. முதல்ல இங்க இருக்குற பிரச்னைகளை முடிக்கட்டும்!’னு எல்லாரும் பகிரங்கமாக பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதை மீறி அவரு அங்க போய்  நிக்க ட்ரை பண்ணாரு.. ப்ச்.. பாவம் என்னென்னவோ குழப்பம் ஆகி இப்ப தள்ளுபடியே ஆயிருச்சு!”

 

“ ஏன் ராகினி… அவருக்கு அந்த ஏரியாவுல சைன் போட்டவங்களை மத்த கட்சிக்காரங்க மிரட்டறாங்கன்னு ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தாரே… நீ பாத்தியா?”

“பார்த்தேன் ஆன்ட்டீ. அதுக்கு மேலயும் ஒரு வீடியோ பார்த்தேன். இவரே அந்த எலெக்‌ஷன் அதிகாரிகிட்ட  ‘ப்ளீஸ் சொல்லுங்க ஸார்… நியாயமா செய்ய வேண்டியத செய்யுங்க ஸார்’ னு  சினிமாவுல வர்ற ஹீரோ மாதிரியே பேசிட்டிருந்தாரு.. ஆனா எதுக்கும் யாரும் அசங்கல. அதிகாரிகளெல்லாம் ரியாக்டே பண்ணாம உக்கார்ந்திருந்தாங்க அந்த விடியோவில.”

“ ஆமா…ஆர்.கே.நகர் தேர்தல் என்னிக்கு ராகினி?... “

“டிசம்பர் 21ந்தேதியக்கா..”

“டிசம்பர் 21 ஆ?… அன்னிக்குதானே 2ஜி கேஸ்ல தீர்ப்பு வருது?!  அதெப்படி இவ்ளோ டைமிங்கா இடைத்தேர்தல் அன்னிக்கு தீர்ப்பு?!”

“அதான் புரியலையே… இத்தனைக்கும் இது செப்டம்பர் மாசமே வந்திருக்கணும். நீதிபதி ஷைனி தீர்ப்பு ரெடியாகலன்னு தள்ளி போட்டுட்டே வந்தாரு. திடீர்னு இப்ப டிசம்பர் 5 -ந் தேதியன்னிக்கு வந்து ‘தீர்ப்பு ரெடியாயிடுச்சு.. டிசம்பர் 21ந்தேதி சொல்றேன்’னு சொல்றாரு. ரெடியான தீர்ப்பை சொல்ல எதுக்கு வேற தேதி குடுக்கணும்னு ஒண்ணும் புரியல போ!”

“ஆன்ட்டீ… இது ஜனநாயக நாடு… சில கேள்விகளுக்கு எப்பவுமே விடை கிடைக்காது. போன பிப்ரவரி மாசத்துல ஆறு வயசுப் பொண்ணு ஹாசினிய சென்னை போரூர் கிட்ட ஒருத்தன் பலாத்காரம் பண்ணி எரிச்சுக் கொன்னான். பெரிசா ரகளையாச்சு. உடனே போலீஸ் அவனைப் பிடிச்சு ஜெயில்ல போட்டுச்சு. இப்ப என்ன ஆச்சு?.. ஜாமீன்ல வெளிய வந்த அந்த ராஸ்கல் தன் சொந்த அம்மாவையே பணம் நகைக்காக கொலை பண்ணிருக்கான்! இவனுக்கெல்லாம் ஏன் ஜாமீன் தரணும் சொல்லுங்க?..” கொதித்தாள் ராகினி.

“பேப்பர்ல நானும் படிச்சேன் ராகினி. இத்தனைக்கும் இந்த அயோக்கியனை தங்களோட சொத்தை வித்து வெளிய எடுத்திருக்காங்க அந்த அப்பாவும் அம்மாவும். இப்ப எங்கியோ கல்கத்தாவுல போய் பதுங்கி இருக்கான்னு போலீஸ் அவனை தீவிரமா தேடிட்டிருக்கு!” என்றாள் ரம்யா.

“போன வாரத்துல மட்டும் அம்மாவைக் கொன்னதா மூணு கேஸ் பேப்பர்ல படிச்சாச்சு. இந்த மாதிரி இளைஞர்கள் தட்டுக்கெட்டு போறத பார்த்தா வருத்தமா இருக்கு. இவங்களுக்கெல்லாம் அடிப்படையிலயே மனநலம் சரியில்லையா.. இல்லேன்னா சகவாசம் சரியில்லாததுனால இப்படியாச்சான்னு ஒண்ணும் புரியல! ஆனா ஒண்ணு.. மூணு பேருமே குடிக்கும் போதைக்கும் அடிமையான இளைஞர்கள். இதுக்கு அரசாங்கமும் பொறுப்புதானே?!”

“இதுக்கு மட்டுமா அரசாங்கம் பொறுப்பு? பட்டப்பகல்ல.. நடு ரோட்டுல மட்டும் ஓட ஓட விரட்டி போனவாரம் மூணு கொலைகள் நடந்திருக்கு சென்னையில. அதுக்கு யாராச்சும் கவலைப்படறாங்களா சொல்லுங்க?.. அரசாங்கம் கெத்தா, இல்லாட்டி போலீஸ், அதிகாரிகள்னு யாரும் பொறுப்பா இருக்க மாட்டாங்க ஆன்ட்டீ!  இந்த நேரத்துலதான் அந்த இரும்பு மனுஷிய நாம ரொம்பவே மிஸ் பண்றோம்!” என்றாள் ரம்யா..

“கொஞ்சம் கொலை மேட்டர்ஸ்லேர்ந்து வெளிய வருவமா?.. மேகன் மார்க்லே பத்தி கேள்விப்பட்டீங்களா அக்கா?” என ராகினி கேட்க..

“எங்கியோ இந்த பேரை கேள்விப்பட்டனே?… ஹாங்… டயானா- சார்லஸோட ரெண்டாவது பையன் ஹாரியை இந்த பொண்ணுதான் கல்யாணம் பண்ணப்போகுதில்ல?!”

20171106135710224.jpg

“கரெக்டா  சொல்லிட்டீங்க.. பாயிண்ட் என்னன்னா மேகன் மார்க்லே ஒரு அமெரிக்க நடிகை. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட டெலிவிஷன் சீரியல்கள்லயும் நாலஞ்சு ஹாலிவுட் படங்கள்லயும் நடிச்சிருக்காங்க. இவங்களும் ஹாரியும் நடந்த ஒரு வருஷமா டேட் பண்ணாங்க. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கப்போறதா நிச்சயம் ஆயிருக்கு!”

“ அட… லண்டன் ராணி எப்பிடி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க?. அவங்க ரொம்ப ராயல் ரத்தமெல்லாம் பார்ப்பாங்களே?!” என ஆன்ட்டீ ஆச்சர்யப்பட்டாள்.

“ எல்லாம் ‘லவ்’வு ஆன்ட்டீ லவ்வு. காதலோட தீவிரம் யாரையும் கரைச்சிடுமே! ஹாரி இந்த பொண்ணுதான்னு தீர்மானமா இருந்ததால யாராலயும் எதுவும் சொல்ல முடியலையாம். இந்த மேகன் மார்க்லே 11 வயசுலயே பெண்களோட சமத்துவத்துக்காக போராடினவங்கன்னா நம்புவீங்களா?!”

“  நீ சொன்னா நம்பத்தானே வேணும்?.. என்ன போராட்டம் அது?!”

“ஏதோ ஒரு கிச்சன் கிளீனிங் விளம்பரத்துல ‘இது அமெரிக்கப் பெண்களுக்கான வரம்’னு ஒரு வார்த்தை இருந்ததாம். இவங்க அதை லோக்கல் டி.வி. நிரூபர்லேர்ந்து ஹிலாரி வரைக்கும் லெட்டர் போட்டு ‘சமையலறைன்னா அது பெண்களோட ஏரியா மட்டும் தான்!’ னு எப்பிடி சொல்லலாம்னு கேள்வி கேட்டிருக்காங்க. ஒரு அமெரிக்க சிறுமியோட இந்த பார்வையினால அந்த விளம்பர நிறுவனம் ஒரே மாசத்துல அதை ‘அமெரிக்க மக்களுக்கான வரம்’னு மாத்திச்சாம். அதனால எங்கேயும் சமத்துவம் இல்லேன்னா அதை எதிர்த்து தயங்காம கேள்வி கேக்கணும்.. அப்ப தானா மாற்றம் நிகழும்!” னு  மேகன் மார்க்லே சமீபத்திய யூனெஸ்கோ மாநாட்டுல பேசினாங்க.

“ நீ சொல்றதைப் பார்த்தா இந்த பொண்ணு இன்னொரு டயானா மாதிரி தெரியுதே!… நல்லதே நடக்கட்டும்!” என்று கூறிச் சிரித்தார் ஆன்ட்டீ. 

“ஆன்ட்டீ… இந்த ஒப்பட்டு எப்படி செய்யறதுன்னு உங்களுக்குத் தெரியுமா?… “ என திடீரெனக் கேட்டாள் ரம்யா.

“ஒப்பட்டு’ன்னா அது  ஒரு வகை இனிப்பு பண்டம். அவ்ளோதான் எனக்குத்தெரியும்.ஏன் தீடீர்னு அந்த ரெசிபி உனக்கு?!”

“அதொண்ணுமில்லை ஆன்ட்டீ. ஜெயலலிதாவுக்கு பிடிச்ச இனிப்பு  ‘ஒப்பட்டு’வாம். ஒரு கிண்ணம் நெய்யோட சும்மா பத்து பன்னெண்டைக்கூட காலி பண்ணிருவாங்களாம். இது ஜெயலலிதா கிட்ட பத்து வருஷம் ஹேர் ட்ரெஸ்ஸரா இருந்த லஷ்மியம்மா சமீபத்துல குடுத்திருக்கற பேட்டி. அதான் அக்கா தானும்  ட்ரை பண்ணக் கேக்கறாங்க!” என்று ராகினி சொல்ல…

“அப்படிப்போடு!. எனக்கு சரியா தெரியல. நான் எங்கக்கா கிட்ட கேட்டு நாளைக்கு சொல்றேன்!” என்றபடி ஆன்ட்டீ எழ

“ ஒரு லாஸ்ட் நியூஸ் கேட்டுட்டுப் போங்க ஆன்ட்டீ. நம்ம கமல்ஹாசன் ‘மையம்’ னு ஒரு செயலியை (App) அறிமுகப்படுத்தறாரு. இது மூலமா மக்கள் தங்களோட பிரச்னைகளை இந்த ‘செயலி’க்கு சொல்லிட்டா போதும்… அதுவே அப்படியே அந்த பிரச்னை… புகார் கடிதங்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீர்வு வாங்கித் தந்திடுமாம்!” என்றாள் ராகினி.

“கேக்கறதுக்கு நல்லாவே இருக்கு. தமிழ்நாட்டுல சுமார் ஏழேகால் கோடி ஜனங்க… 32 மாவட்டம்… அத்தனையிலயும் புகுந்து புறப்பட ஆள் படை அம்பெல்லாம் கமலுக்கு இருந்தா சரி!.. இந்த ‘செயலி’ நிஜமாவே பெரிய விழிப்புணர்வை கொண்டு வரும்னு நம்புவோம்!” என்றபடி பேச்சை தற்காலிகமாக முடித்தார் ரேணு ஆன்ட்டீ!

(தொடரும்)

 


 

­