தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் மதன்

ஹாய் மதன்

20171106121704227.jpeg

C.V. சந்திரமோகன், எழுத்தாளர் - இயக்குநர்
Q நம்ம தேசம் இந்த ஜென்மத்துல திருந்த வழியே இல்லையா?

A சேச்சே! சற்றுப் பரந்த மனதோடு இந்த ஜென்மத்தையெல்லாம் தாண்டி கொஞ்சம் சிந்திக்கவும். வரப்போகும் உங்களுடைய ஏதாவது ஒரு ஜென்மத்தில் திருந்திவிட்ட நம்ம தேசத்தை நிச்சயம் பார்ப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு வாழுங்கள் சந்திரமோகன்!

வெங்கி, கோலாலம்பூர்
இப்போதைய தமிழக அரசு செய்த நல்லது  ஒண்ணு, கெட்டது ஒண்ணு சொல்லுங்க?

A நல்லது - பெரிசா கெட்டது ஒண்ணும் பண்ணாமலிருந்தது.
   கெட்டது - பெரிசா நல்லது ஒண்ணும் பண்ணாமலிருப்பது!

கோகுலகிருஷ்ணன், வர்ஜினியா - அமெரிக்கா
Q மோடி கிளம்பிப் போயிட்டா நாட்டுல சகிப்புத்தன்மை திரும்ப வந்திடுமா?

A நீங்க வேற! எதிர்காலத்தில் `மோடி இருந்தபோது நாட்டில் எவ்வளவு சகிப்புத்தன்மை இருந்தது?!

    ` என்று பெருமூச்சுடன் நீங்கள் சொல்ல வேண்டியிருக்கலாம்!

 

பிரதீப், இலங்கை
``சில நூறு வருடங்களில் மனிதர் வாழ முடியாத சூழ்நிலை பூமியில் ஏற்பட்டுவிடும்`` என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுகிறார்களே.. (சில மில்லியன் வருடங்களாவது பூமி தாங்கும் என்ற நிலை மாறி சில நூறு வருடங்கள்தான் பூமியின் ஆயுள்?!) 

A மில்லியன் இல்லை.. பல பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி) வருடங்களாக மனிதர்களே - ஏன் உயிரினங்களே இல்லாமல் பூமி சூரியனைச் சுற்றி வந்ததுண்டு. நாலைந்து லட்சம் ஆண்டுகளாகத்தான் மனிதன் பூமியில் வாழ்ந்து வருகிறான். எதிர்காலத்தில் சில பல டிகிரி வெப்பம் அதிகமானால் கூட மனித குலம் அடியோடு அழிந்துவிடும். அதற்குப்பிறகு கடலெல்லாம் வற்றிப்போய் சில பில்லியன் ஆண்டுகளுக்கு பிரும்மாண்டமான வெறும் பாறையாக சூரியனை பூமி வலம் வரும். கடைசியில் சூரியன் இன்னும் பிரும்மாண்டமாக உப்ப ஆரம்பிக்கும். அப்போது வாணலியில் விழுந்த எள்ளுருண்டை போல சூரியனில் பூமி விழும். அதோடு பூமி அதோ கதிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

ப்ரீத்தி கார்த்திக், தமிழ்நாடு
Q ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவார் என்ற நம்பிக்கை உங்களுக்காவது இருக்கா?

A ரஜினிக்கு முன்பு கமல் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அந்த விஷயத்தில் கமல்

    மும்முரமாக இருப்பதை நேரிலேயே பார்த்துவிட்டுச் சொல்கிறேன்! பிறகாவது ரஜினி பரபரப்படைவாரா? தெரியலையே!

2017110612193664.jpeg

ஆர்யா, திருவல்லிக்கேணி
Q எடப்பாடி சொன்ன சேக்கிழாரின் கம்பராமாயணம் படித்திருக்கிறீர்களா?

A ஏன்? கம்பர் எழுதிய திருக்குறளைக் கூட நான் படித்திருக்கிறேன், தெரியுமில்லே?!

சேஷசாயி, கே.கே. நகர், மதுரை
Q நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

A `அறம்` படத்தில் ஹீரோவே கிடையாது. அந்தப் படத்தை ஒண்டி ஆளாக நயனே சுமக்கிறார். ஏன் அவங்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக் கூடாது?!

20171106122000584.jpg

சித்தார்த், அசோக் நகர், சென்னை
Q சோஷியல் மீடியாவின் சினிமா விமர்சனங்கள் குறித்து திரையுலகில் கொதிக்கிறார்கள். அப்படிப்பட்ட கிழி விமர்சனங்களால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக திரையுலகத்தினர் புலம்புகிறார்கள். இதுபற்றி உங்களின் விமர்சனம் என்ன?

A சோ எவ்வளவு சுதந்திரமாக எல்லாவற்றையும் கிழி கிழியென்று கிழித்தார்?! `சோ`ஷியல் மீடியாவும் அப்படித்தான்.

   ஜனநாயகத்தில் கப்சிப் என்று கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

ஜெயமாலினி, திருச்சி
Q பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்பை விட இப்போது அதிகமாகிவிட்டது. இதனை தடுப்பதற்கு வழி சொல்லுங்களேன்.

A நாட்டில் உள்ள எல்லா தெருக்களிலும் வீடுகளிலும் சிசிடிவி காமிராக்கள் வைப்பது ஒன்றுதான் வழி என்று தோன்றுகிறது! சரி, சீரியஸாக பார்ப்போம். உடல் ரீதியாக பெண் `வீக்`கானவள். அவளை ஆண் அடித்து வீழ்த்த முடியும். தவிர ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது அவளை அடக்கித் தள்ளி அவமானப்படுத்துவதற்காகத்தான். ஆணுக்கு இருக்கும் அந்தத் திமிரை அடக்க சவுதி அரேபிய ஸ்டைலில் சில தண்டனைகளைக் கொண்டு வருவதுகூட நல்லதே!

கே.சுந்தரம், மயிலாப்பூர்
Q டயானா கல்லறைக்குச் சென்றிருக்கிறீர்களா? அவரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த அம்சம் எதுவாக இருந்தது?

A அவ்வளவு வசதியெல்லாம் எனக்குக் கிடையாது! ஆனால் அவர் உயிரோடு இருந்திருந்தால் சமூகசேவையில் புகழ்பெற்றவராக ஆகியிருப்பார். ஆப்பிரிக்க நாட்டு ஏழைக் குழந்தைகளை இளவரசி இயல்பாகக் கொஞ்சும் போட்டோ ஒன்றை நான் பார்த்திருக்கிறேன்.

­