
வீட்டு வேலைகளை முடித்து முகத்தைத் துடைத்தபடி மலர் அடுக்ககத்தில் இருந்து வெளியே வந்தாள் சாவித்திரி.
அதே அடுக்ககத்தில் மூன்றாவது தளத்தில் வசிக்கும் பெண்ணொருத்தி சாவித்திரியை நிறுத்தி, “ஏண்டியம்மா சீக்கிரமா கிளம்பிட்டே? துணி துவைக்கிற வேலை இல்லையா இன்றைக்கு?” எனக் கேட்டாள்.
“ஏன்? இருந்தால் நீ வந்து செஞ்சு குடுக்கப் போறியா? போம்மே” என சொல்லிக் கொண்டே நகர்ந்தாள் சாவித்திரி.
“இருடீ, சும்மா அலுத்துக்காதே. அந்த முதல்மாடி வீட்டு கலையின் காதல் என்னாவாச்சு? சொல்லவே மாட்டேங்கிறாய்..” என அவள் கேட்டதும்...
“உன் வீட்டில் பெண் இல்லையே என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதே. அது ஒன்றும் தப்பு பண்ணலையே.. காதலிக்குது அவ்வளவுதானே? அது அவங்க வூட்டு சமாசாரம். உனக்கெதுக்கு?” என கடிந்து நகர்ந்து விட்டாள்.
இவர்கள் பேசுவதை மேல் தளத்திலிருந்து கலையின் அம்மா காவிரியும் கவனித்து விட்டாள்.
காவிரிக்கு ஒரே செல்லப் பெண். அனைவரிடமும் அன்பாய் அனுசரணையாய், ஆதரவாய் இருப்பவள். கிராமத்தில் இருக்கும் பாட்டி, தாத்தாவிடம் ரொம்ப மரியாதையாக இருப்பவள். வீட்டு வேலைகளும் சரி, சமையல் வேலைகளும் சரி விரல்நுனியில் வைத்திருப்பவள் கலை. அவளை தன்னுடைய இன்னொரு அம்மா என்பார் கலையின் அப்பா.
அத்தனை அக்கறையானவள். தனது பெண் இப்படி பேசும் பொருளாகிவிட்டாளே என்ற வருத்தம் இருந்தாலும், அவளிடம் இதனை எப்படி கேட்பது? கலையின் அப்பாவிடம் எப்படி சொல்லி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தாள் காவிரி.
மாலை நேரம், வீட்டு வேலைக்கு வந்த சாவித்திரி,
“ஏம்மா, நம்ம பாப்பாவைப் பற்றி அபார்ட்மெண்ட் எல்லாம் பேசிக்கிறாங்க. தப்பா நினைக்காதீங்க அம்மா. நானும் பாப்பாவை சின்ன வயசிலே இருந்து பார்த்து வளர்த்தும், பழகியும், இருக்கிறதாலே என்னால அவங்க பேசறதை சகிச்சுக்கிட்டு இருக்க முடியலை. கண்டவங்களும் நம்ம பாப்பாவைப் பற்றி பேசும்போதெல்லாம் எனக்கு ஆத்திரமாக வருது. நீங்க கலை பாப்பாகிட்டே பேசி ஏன் கண்டிக்கக் கூடாது? ” எனக் காவிரியிடம் கேட்டே விட்டாள் சாவித்திரி.
“அவ அப்பா ரொம்ப கோபக்காரர் என்றுதான் உனக்கு தெரியுமில்லே. இந்த விஷயம் தெரிந்தால், கலை வேலைக்கு வெளியே போகிறதே சிரமமாகிடும்...கலையோட ஆசையே நாலு பேருக்கு உதவுகிற மாதிரியான வாழ்க்கை வாழணும். நிறைய பேருக்கு உதவிகள் செய்யணும். அதற்கு நல்ல இடத்தில் ஒரு வேலை. அதற்காகத்தான் வேலைக்கே போகிறாள். இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிந்தால், மொத்தத்திலேயும் இடி விழுந்துடுமே, என்ன செய்வது என்ற குழப்பத்தில்தான் நானே இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தில் வந்திறங்கினாள் கலை அந்த பையனுடன்.
முதல் மாடி என்பதால் அந்த பையனின் முகம் நன்றாகவே தெரிந்தது காவிரிக்கு. பையன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று மனத்திற்குள் ஒரு நிமிடம் நினைத்தவள். இது என்ன ஆயிற்று எனக்கு? அவளைக் கண்டிக்க மனமில்லாமல் பையனை புகழ்கிறது என் மனம் என்று தன்னைத்தானே ஆச்சரியமாக நினைத்துக்கொண்டாள்.
வீட்டின் உள்ளே கலை வந்ததும் சாவித்திரியைப் பார்த்து, “அக்கா உங்க பையன் நல்லா படிக்கிறானா? பாடத்தில் சந்தேகங்கள் இருந்தால் வெட்கப்படாமல் வந்து கேட்கச் சொல்லுங்கள்” என்று கூறியவாறே தனது அறைக்கு சென்றுவிட்டாள்.
“அம்மா நான் கிளம்புறேன்” என்று கிளம்பிய சாவித்திரியை நிறுத்திய காவிரி, “நாளைக்கு காலையிலே கொஞ்சம் சீக்கிரமாக வேலைக்கு வா, நாம வெளியே போகணும்” என்க.. சரி என்று கூறி புறப்பட்டாள் சாவித்திரி.
மறுநாள் கலையும், அவங்க அப்பாவும் அலுவலகம் கிளம்பிய பிறகு, தனது காலை நேர வேலைகளை வேகமாக முடித்த சாவித்திரி, ‘எங்கம்மா போகிறோம்?’ என்றாள்
“அந்த பையன் வீட்டிற்கு” என்றாள் காவிரி.
“அச்சோ! விலாசம் எல்லாம் பாப்பா குடுத்திட்டுதா? அங்கே போயி....” என இழுத்தாள்.
“பாப்பா குடுக்கலை. ஆப், வாகன்ஆப்....கொடுத்தது”
“ஒன்னும் புரியலைம்மா இன்னா சொல்றே நீ?”
“வண்டி எண்ணை வைத்து, விலாசத்தை கண்டுபிடித்து விட்டேன்” என்ற காவிரி, “போய் அவர்கள் வீட்டை பார்த்து தாய், தந்தை உறவுகளை எல்லாம் பார்த்து பேசிவிட்டு, இந்த விஷயத்தை அவங்க அப்பாகிட்டே பேசலாம் என நினைக்கின்றேன். நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள்.
“சூப்பர்மா, ஆனா, என்ன சொல்லி அவங்க வூட்டுக்குப் போறது?”
“அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு. இந்த பையிலே பத்து புடவை இருக்கு. நாம் புடவைகள் விற்கிற மாதிரி அவர்கள் வீட்டிற்குப் போவோம். நீ எனக்கு உதவிக்கு வந்த மாதிரி உட்கார்ந்து கொள். முடிந்தவரை அவர்களைப் பற்றி தெரிந்துகொண்டு வருவோம், எப்படி ஐடியா? ”என்றாள்.
“யம்மாடி... நீ டிஜெடிவ் கணக்கா இருக்கே போ” என்றாள்.
“என்ன சொல்றே நீ?”
“அதாம்மா, இந்த உளவு வேலையெல்லாம் செய்வாங்களே?”
“ஓ... அது டிடெக்டிவ். என் பெண்ணோட வாழ்க்கை. இது கூட நான் செய்யலை என்றால் எப்படி?”என்றபடி கிளம்பிப்போனார்கள்.
அவர்கள் இல்லம் அடைந்து அனைத்து புடவைகளையும் அவர்களிடம் காட்டியதும், ஏழு புடவைகளை பையனின் அம்மா, அக்கா, தங்கை, அண்ணி, அண்ணியின் அம்மா, அவர்கள் வீட்டுப் பணிப்பெண் என அனைவருக்கும் டிசைன்கள் நன்றாக இருப்பதாகச் சொல்லியபடி புடவைகளை எடுத்துக்கொண்டனர்.
இவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது, “இருங்கள்... தேநீர் அருந்திவிட்டு போகலாமே” என உபசரித்தது, அன்பான அவர்களின் பழகும் விதம் எல்லாமே முன்னையே அறிந்தவர்கள் போல் இருந்தது இருவருக்கும்.
“ரொம்ப திருப்தியா இருக்குடீ சாவித்திரி. ஒரு நல்ல குடும்பத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறாள். இங்கு திருமணமாகி வந்தால் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருப்பாள் என் மகள்” என்றாள் காவிரி.
“பின்னே என்ன? ஐயா கிட்டே சொல்லி, காலாகாலத்திலே திருமணத்தைப் பேசி முடிங்க... எனக்கும் ஒரு புடவை எடுத்து வைச்சிடுங்க, என்ன..... ”என்றாள்.
“உனக்கு இது போதுமா ? பட்டுப்புடவை எடுத்துத் தரலாம் என்றல்லவா நினைத்திருந்தேன்” என்று பேசிக் கொண்டே இல்லம் வந்து சேர்ந்தனர்.
அன்று மாலை வீடு வந்த கலையின் அப்பாவிற்கு காபி கொடுத்தபடி, “என்னங்க! நம்ம கலை ஒரு பையனை விரும்புகிறாள்” என்று மெதுவாக அவரது மனநிலை அறிந்து ஆரம்பித்தாள்.
“அதான் தெரியுமே” என்று அவர் சொன்னதும் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பதட்டமடைந்த சாவித்திரி, நான் வூட்டிற்கு கிளம்புகிறேன் என்று புறப்பட..
“அவ மேலே உனக்கும் அக்கறை இருக்கில்லே, அப்போ நீயும் இரும்மா” என கூறி சாவித்திரியையும் நிறுத்தினார் கலையின் அப்பா.
“என்னங்க என்ன சொல்றீங்க? முன்னையே தெரியுமா உங்களுக்கு?” என்ற காவிரியிடம்,
“அவள் விரும்புவது ஒன்றும் தப்பில்லையே. அது இயல்புதானே. நான் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லையே! எல்லாரிடத்திலும் அன்பாக இருப்பவள் நம் மகள். அன்பு நெறியில் உள்ள அவள் நிச்சயமாக அன்பான ஒருவனைத்தான் விரும்பி இருப்பாள். அவள் நமக்கு கெடுதல் வருகிற மாதிரியோ, கவலை கொள்கிற மாதிரியான செயல்களையோ என்றும் செய்யமாட்டாள்” என்று சொன்னவர், அவளாக சொல்லட்டும், அவள் விருப்பப்படி செய்வோம் என காத்திருந்தேன் என்று கூறினார்.
“சரிதாங்க நீங்க சொல்கிறது. நல்ல குடும்பம். நல்ல மனிதர்கள்” என தன் பங்கிற்கு இன்று காலையில் நடந்தவைகளை கூறி, ‘நம் மகள் அங்கே மணமாகி சென்றால், அவள் நினைத்தபடியே வாழ்ந்து, அவர்களிடத்தில் நற்பெயருடன் அன்பொழுக நல்வாழ்வு வாழ்வாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திருமணத்திற்கு நாள் பார்க்கவேண்டிய ஏற்பாடுகளை கவனியுங்கள்” என்றாள் காவிரி.
நல்ல முறையில் மகளை மணமுடித்து அனுப்பியபின், தனிமையில் அவளை நினைத்து, வீட்டு சன்னலோரத்தில் அமர்ந்து வெளியே பார்த்த காவிரியின் மனத்தில்..
“உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்”......
என்று தனக்குப் பிடித்த படித்த, சங்கஇலக்கிய அக நானூற்றுப்பாடல் ஒன்று,
தன் மகளைப் பற்றி பலர் புறம் பேசினாலும், அதை அவளிடத்தில் கேட்காமல், கேட்டால் அவள் மனம் நோகுமோ என்று நினைத்து, வாழப்போகும் வீட்டிற்கு அவளுக்கு முன் சென்று, சூழல் அறிந்து, அவளுக்கு தீங்கு இல்லாமல் பார்த்துக் கொண்ட சங்க இலக்கியத் தாயின் நினைவு வர,
கசப்பான இலைகளைக் கொண்ட வேப்பமரம் ஒன்றில் பூத்துக் குலுங்கிய பூக்களில் பட்டாம் பூச்சி ஒன்று அமர்ந்து தேனை ரசித்துப் பருகிக்கொண்டு இருப்பது காவிரியின் கண்களுக்குத் தெரிந்தது.
மரம்,செடி, கொடிகள் என பல வகைப்பட்டாலும் பூக்களில் உள்ள தேன் என்றுமே இனிப்பானது. மனிதர்கள் வேறுபட்டாலும் காதல் என்ற உணர்வு எல்லோருக்கும் பொதுவானது, இனிமையானது என்ற செய்தியை காவிரிக்கும், அவள் வழியே நமக்கும் சொல்வது போல் இருந்தது.

Leave a comment
Upload