தொடர்கள்
கவிதை
தெரிந்த குறள்கள் - புரியும் வடிவில் - குறுங்கவிதை - வேங்கடகிருஷ்ணன்

20200810145234596.jpg

திருக்குறள் படிக்க மட்டுமல்லாமல் படித்தபின் நம்மை சிந்திக்கவும் வைக்கும். அதற்கு அது சுலபமாய் புரிந்து கொண்டு மேலும் சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தால் எப்படி என்று யோசித்ததின் விளைவே இந்த சிறு முயற்சி...அதிகாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குறள்கள் வீதம் வாரம் பத்து குறள்களை சிந்திப்போம்...

நன்றியில் செல்வம்

அற்றார்க்கென்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியளமூத் தற்று.

ஏழைக்குதவா செல்வம்
நல்ல பெண் மணமாகாமல்
முதுமை அடைந்தாற்போல
பயனற்றது.

நாண் உடைமை

நாணகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.

உள்ளத்தில் நாணம்
இல்லாதோர்
நூல் கொண்டு ஆடும்
மர பொம்மை
உயிர் உள்ளது போல்
ஆடுதற்கு சமம்.

குடி செயல் வகை

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும்.

என் சமூகம் உயர உழைப்பேன்
என்போர்க்கு தெய்வம்
தானே முன்னின்று
உதவும்.

உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

வேறு தொழில் செய்தாலும்
ஏர் பிடிக்கும் உழவர்
பின் உலகமே செல்லும்
உழவே உயர்வு.

இளம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

நான் வறுமை கொண்டவன்
என்று சோம்பி இருப்போர்
கண்டால், நிலமகள்
தன்னுள் சிரிப்பாள்.

நல்குரவு.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

வறுமை போல கொடியது
எதுவெனில்
வறுமையே
வேறேதும் இல்லை.

இரவு

இன்பம் ஒருவற்கு இறத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

யாசிக்கும் பொருள்
துன்பமின்றி கிடைத்தால்
யாசிப்பும் இன்பமேயாகும்.

இரவச்சம்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியதுஇல்.

உண்மை முயற்சியால்
கிடைத்தது கூழானாலும்
அது உண்பதே மற்றெல்லாவற்றினும்
இனிமை.

கூடா நட்பு

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அணைத்து.

பகைவர்கள் கூப்பும் கையில்
கொலைக்கருவி மறைந்திருக்கும்
அவர் கண்ணீரும்
அவ்வாறே.

தீ நட்பு

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

வீட்டில் நட்பு
பொதுவில் பழிப்பு
இவர் நட்பு
வேண்டாம் நமக்கு.