தொடர்கள்
பொது
நான் “ ஈ”…! – ஆர்.ராஜேஷ் கன்னா.

20200811091721433.jpg

வேலைக்காரன் படத்தில் ரஜினிகாந்த் நடத்தும் ஒரு மீட்டிங்கில் எதிர்பாரதவிதமாக நுழைந்து விடும் ஒரு ஈ, அவரின் முக்கின் மீது உட்கார்ந்து விடும். தன் முக்கின் மீது உட்கார்ந்த ஈ யை பிடிக்க ரஜினிகாந்த் மீட்டிங் நடக்கிறது என்று கூட யோசிக்காமல் அடித்து துரத்த முற்படுவார். கடைசி வரை ஈ யை பிடிக்க முடியாமல் ரஜினிகாந்த் திண்டாடுவதை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கலைநயத்துடன் காமெடியாக படம் ஆக்கியிருப்பார். இது நாள் வரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் விரும்பி ரசித்துப் பார்க்கும் சூப்பர் ஹிட் காமெடி காட்சி அது.

சமீபத்தில் இதே போன்ற நிகழ்வு பிரான்சில் நடந்தது. இரவு நேர உணவை சாப்பிட 80 வயது முதியவர் தயாரானார். அப்போது எப்படியோ ஒரு ஈ வீட்டில் நுழைந்து சுவற்றில் அமர்ந்து இருந்தது. பெரியவர் சமையல் அறையில் நுழைவதற்கு முன் அவரை சுற்றி ஈ கொய்ங் என்ற ரீங்காரமிட்டது பறந்தது.

20200811091932124.jpg

ஈ பறந்து தொந்தரவு செய்ததால் முதியவர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளானார். தன் வீட்டில் பூச்சிகளை கொல்லும் எலக்ட்ரானிக் பேட்டை எடுத்து ஈ யை கொல்ல பெரியவர் முற்பட்டார்.

வீடு முழவதும் ரீங்காரமிட்டு பறந்து கொண்டிருந்த ஈயை பிடிக்க முதியவர் தன் கையில் வைத்து எலக்ட்ரானிக் பேட்டை ஆன் செய்து துரத்தி கொண்டு ஒடினார்.

ஈ சமையல் அறையில் சட்டென நுழைந்து பறக்கத் தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஈயை குறிவைத்து நெருங்கிய முதியவர் கையில் இருந்த ஈ பிடிக்கும் பேட்டை வேகமாக அசைக்கவும், சமையல் அறையில் கசிந்து கொண்டிருந்த சமையல் வாயு ட்யூப் அருகே சென்றதும் தீ பிடித்துக் கொண்டது. சமையல் அறை முழுவதும் தீயின் சுவாலையால் கரும்புகை ஏற்பட்டது. முதியவர் கை தீயால் பொசுங்கியது. சமையல் அறை மேற்கூரையும் தீயால் கருகி சேதமானது.

வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்து, பெரியவரை மீட்டனர். முதியவர் கையில் இருந்த ஈ பிடிக்கும் பேட்டில் இருந்து ஸ்பார்க் மூலம் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, சமையல் வாயு ட்யூப் தீப்பிடித்து எரிந்தது என தீயணைப்பு துறையினர் சொல்லி, அவர்கள் வீட்டின் சமையல் அறையை சோதனை செய்து விட்டு சென்றுவிட்டனர்.

முதியவர் தன்னை எரிச்சலுட்டிய ஈ யை எப்படியாவது பிடித்து விடுங்கள் என்று மருத்துவமனை சிகிச்சையின் போதும் சொன்னாராம்.

எல்லாம் சரி, இவ்வளவு களேபரம் நடந்த பிறகு ஈ வீட்டை விட்டு தப்பி பறந்து சென்று விட்டது என்ற தகவல் வருகிறதே! உண்மைதானா?