
செப்டம்பர் 14 - 2020
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸன்யஸ்யத மஹாளயம்.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ரெங்கநாதர் திருக்கோலம்.
மாலை வெண்ணெய்தாழி சேவை.
இரவு கெருட வாகனம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம்.
திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: பூராடம்,உத்திராடம்
செப்டம்பர் 15 - 2020
இன்று கீழ் நோக்கு நாள்.
மாதசிவராத்திரி.
கெஜ கெளரி விரதம்.
கலியுகாதி.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி இராமாவதாரம்.
மாலை தவழ்ந்த கண்ணண் அலங்காரம்.
யானை வாகன பவனி.
திருச்செந்தூர்,பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் மஹார தோற்சவம்.
திதி: திரயோதசி.
சந்திராஷ்டமம்: உத்திராடம்,திருவோணம்.
செப்டம்பர் 16 - 2020
இன்று கீழ் நோக்கு நாள்.
விஷுஸர்த்திர பிதுர் மஹாளயம்.
கேதார விருத ஸமாப்தம்.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ஆண்டாள் திருக்கோலம்.
மாலை புன்னை மர கிருஷ்ணன், இரவு புஷ்ப தண்டியலில் தவழும் கண்ணன் திருக்கோலம்.
மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
திதி: சதுர்த்தசி.
சந்திராஷ்டமம்: திருவோணம்,அவிட்டம்.
செப்டம்பர் 17 - 2020
இன்று கீழ் நோக்கு நாள்.
புஷ்கல யோகம்.
ஷடசீதிபுண்யகாலம்.
மஹாளய அமாவாஸ்யை.
மாஷா கெளரி விரதம்.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி புல்லின் வாய் கிண்டல், இரவு வெள்ளி குதிரை பவனி.
சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் வைரவெல் தரிசனம்.
திதி: சூன்ய
சந்திராஷ்டமம்: சதயம்.
செப்டம்பர் 18 - 2020
இன்று மேல் நோக்கு நாள்.
சந்திர தரிசனம்.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ராஜமன்னார் திருக்கோலம்.
மாலை சேஷ வாகனம்.
திருவிடை மருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.
கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
மாலை ஊஞ்சல் சேவை.
திதி: திதித்துவயம்.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி.
செப்டம்பர் 19 - 2020
இன்று சம நோக்கு நாள்.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி காலை இராஜாங்க சேவை.
மாலை அமிர்த மோகினி லீலை.
இரவு புஷ்பக விமானத்தில் இராமாவதாகாக்ஷி.
ஸ்ரீவில்லிப்புத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீனிவாச பெருமாள் கெருட வாகன புறப்பாடு.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.
செப்டம்பர் 20 - 2020
இன்று சம நோக்கு நாள்.
சதுர்த்தி விரதம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகன பவனி.
கரூர் தாந்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா.
திதி: சதுர்த்தி.
சந்திராஷ்டமம்: ரேவதி.
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
காரியம் ஒன்றே கண்ணாக கருதும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும்.
தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.
பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)
வேகமும், விவேகமும் உடைய ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.
பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும்.
மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும்.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
மன சஞ்சலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.
பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
எந்த வேலையையும் எளிதில் முடிக்கக் கூடிய சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். இந்த வாரம் எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்க செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும் போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.
மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும்.
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
எறும்பைப் போல் சுறுசுறுப்பு கொண்ட கன்னி ராசி அன்பர்களே! நீங்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணர். இந்த வாரம் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.
தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு - சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியில் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் காலகட்டம் இது.
பெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: நந்தீஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்க கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
தெய்வ பக்தி கொண்ட துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
யார் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
தொழிலில் எந்தவித தயக்கமும் இல்லாமல் செயல்படுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.
பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
உள்ளதை உள்ளபடி பேசும் தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் வீண் மனக் கவலை உண்டாகலாம். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.
பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.
மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
உல்லாச பயணம் மேற்கொள்ளும் மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தாமதமாக கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலைப்பளு ஆகியவை இருக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.
பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: சிவன் கோயிலுக்கு சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
சீக்கிரத்தில் கோபப்படக்கூடிய கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் வீண் அலைச்சல் காரிய தடை ஏற்பட்டாலும் முடிவில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். செலவு கட்டுக்குள் இருக்கும்.
தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.
பரிகாரம்: சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
எல்லோரையும் வசீகரம் செய்யக்கூடிய மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஏற்பட்டாலும் செலவு கட்டுக்குள் இருக்கும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.
வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது நன்மை.
பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம்.
மாணவர்களுக்கு வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.

Leave a comment
Upload