
காலம் காலமாக காதல் கடிதங்களுக்கு மகத்துவம் இருந்தே வருகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் கையினால் எழுதும் பழக்கமே அற்றுப்போகும் சூழலில், கடிதங்கள் எழுதும் பழக்கம் கைவிடப்பட்டு வருகிறது. இதுபோன்ற காதல் (கவிதை) மடல்கள், கையெழுத்தில் பதிக்கப்படும்போது அது ஏற்படுத்தும் மனக்கிளர்ச்சியை சொல்லி விவரிக்க முடியாது. கவியரசு கண்ணதாசனின் கன்னித்தமிழும், காதல் உணர்வும், கவிதைக்கடலும் எனக்குள் ஏற்படுத்திய உணர்வின் வெளிப்பாடு தான் இக் கவிதைகள்... இவை அந்த காதல் கவியரசருக்கே சமர்ப்பணம்.
காவிரி மைந்தன்
ஒரு மனிதன் கவிஞனாக மாறுவது காதலில் தான் என்கிறார்கள். அதே கவிஞன் காதல் பொது மறை எழுதும்போது.... “கையளவு உள்ளம் வைத்து அதில் கடல் போல் ஆசை வைத்து” என்றார் கவியரசு கண்ணதாசன், அவரின் தாசனான நான் காதல் கடிதங்களை கவிதைகளாக தர முயற்சி செய்திருக்கிறேன்.... காதலை ஏற்று, கவிதை குற்றம் பொறுப்பீர்களாக!!
தேகஸ்வரங்கள் மீட்டுகின்றாய்! - மடல் ஒன்று
அன்பே!
வளர்திங்கள் பிறைபோலே எந்தன் வாழ்வில் வந்தாய்!
முழுமதியாய் தினம் நீயும் என்னை வென்றாய்!
மலரோடும் மணத்தோடும் முகிழ்க்கின்றாய்!
மல்லிகையாய் என் மனதில் வாசம் செய்தாய்!
அளவோடு புன்முறுவல் தருகின்றாய்! அளவிலா இன்பத்தைப் பொழிகின்றாய்!
அன்பே எனும்போது விழுகின்றாய்! தேடும்பொழுதினில் தெரிகின்றாய்! தென்றலைப் போலவே வருகின்றாய்!
ஆசையில் அழைத்தால் அணைக்கின்றாய்! அச்சம் நாணம் தடுக்கின்றாய்!
அடடா.. சொல்ல வைக்கின்றாய்! அமுதே நிலவே.. எனும்போது.. கவிதை இரவைப் படைக்கின்றாய்!
பகலும் இரவாய்.. இரவும் பகலாய் மாறச்செய்து காட்டுகிறாய்!
மடியில் என்னைக் கடத்திவைத்து மன்மத நாடகம் நடத்துகின்றாய்!
விழியின் வழியே மொழிகள் சொல்லி விடியும்வரையில் படிக்கின்றாய்! இடையில் நடக்கும் யாவிலுமே.. இன்பகீதம் ஊட்டுகிறாய்!
இதழில் வழியும் தேன்துளிபெற.... எத்தனை பாவனை ஏற்றுகிறாய்!
கற்பனை வடிவங்கள் கவிதையில் கண்டு கன்னி நீயும் களிக்கின்றாய்!
வண்ணக்கோலம் வடிவம்காட்டும் பெண்ணழகெல்லாம் காட்டுகின்றாய்!
உன்னைத் தந்து என்னைப் பெறுகின்ற உறவே வாவென அழைக்கின்றாய்!
காதல்போதை நாளும்தந்து அற்புத நாட்கள் நகர்த்துகின்றாய்!
உள்ளம்தழுவ எண்ணும்பொழுதில் உன்னை நீயே தருகின்றாய்!
உச்சிமுகந்து ஒரு முத்தம் சத்தமில்லாமல் இடுகின்றாய்!
நவரசம் பரவும் இதயம்காட்டி பரவசம் கொள்ளத் துடிக்கின்றாய்!
இதழ்ரசம் தருவதில் குறைவைத்து பெறுவதில் தீர்க்கமாயிருக்கின்றாய்!
இடைவெளி நமக்குள்ளே இனியெதற்கு என தென்றலைக்கூட விரட்டுகிறாய்!
நீலவானில் நீந்தும்நிலவாய் நீ எனக்கு மட்டும் தெரிகின்றாய்!
நெஞ்சம் முழுவதும் பந்தலிட்டு காதல் மாநாடு நடத்துகின்றாய்!
வேண்டும் எதையும் தருவதற்கு வேளையிதுவென சாற்றுகின்றாய்!
தீண்டும் பொழுதினில் இன்பம்வரும் தேகஸ்வரங்கள் மீட்டுகிறாய்!
உன்மடிசாய்ந்து கண்ணயர்ந்து காதல் சாசனம் எழுதிவைக்க என்னிடம் நீயும் சம்மதம்தந்த பொன்னாளிதுவென புகழ்ந்துரைத்தாய்!
உறவின் பெருமை உள்ளம் அறியும் உன்னதம் இதுதான் காதல் என்றாய்!
ஒன்றில் ஒன்றாய் கலந்து இனிக்கும் உயிரின்ஓசை கேட்டதென்றாய்!
எண்ணம் முழுதும் நிறைந்து கிடக்கும் நினைவின் அலைகள் பாய்ந்ததென்றாய்!
நேற்றும் இன்றும் நடந்துமுடிய.. நாளைய கனவில் மிதந்துநின்றாய்!
கண்கள் மூடித் தவமா செய்தேன்.. காட்சி எனக்களிக்கின்றாய்!
உன்னைத் தாங்கி இருக்கும்போது உனக்கு நானும் தாயென்றாய்!

Leave a comment
Upload