
பாலைவனத்துத் தாகமாய் – நெஞ்சில்
என்றும் தீராத முடிவிலாத் தேடல்
வழி தெரியா வெள்ளாடாய் – கனவைத்
துரத்தி ஓடிக் களைக்கும் தேடல்
ஏதோ ஒன்றைத் தேடும் - மனம்
எதைத்தானென்று அறிவதில்லை
படிக்கும்போது அறிவுத்தேடல்
படித்த பின்னோ வேலைத் தேடல்
பலநிலை மாற்றம் காணத் தேடல்
அழகிய பெண் மேல் ஆசைத் தேடல்
கன்னியருக்கோ காதல் தேடல்
மணவாழ்க்கையிலோ மழலைத் தேடல்
இருக்க வீடும் இன்னும் பலவும்
ஆழ் மனக்கடலின் அயராத் தேடல்
தேடல்கள் நீளும் தேவைகள் நீளும்
எதையோ தேடுகிறோம்
எதற்கோ ஓடுகிறோம்
எல்லையில்லாத் தேடலின் முடிவு
எங்கே தொடங்கும் எங்கே முடியும்
ஏகாந்த நிலையிலே தேடிப் பார்த்தால்
தேடல் முடியும் தேவையும் முடியும்...

Leave a comment
Upload