தொடர்கள்
தொடர்கள்
புவியை அசைத்த தத்துவங்கள் - 36 மரியா சிவானந்தம்

20200810180813670.jpg

பெர்னார்ட் ஷா

சமுதாய மாற்றம் வேண்டும் சிந்தனையாளர்கள் தம் கையில் எடுக்கும் ஆயுதங்களில் ஊடகமும் ஒன்று. அச்சு ஊடகமும், காட்சி ஊடகங்களும் காலங்காலமாய் புதிய சிந்தனைகளை, மாறுபட்ட கருத்துக்களை முன் வைத்தன. திரைப்படங்கள், தொலைக்காட்சி போன்றவை பிரபலமாகும் முன்னம் நாடகக் கலையும், கூத்துக் கலையும் கொடி கட்டிப் பறந்தன. நாடகம் சிறந்த கலையாகவும், மக்களிடத்தில் நல்ல கருத்துக்களைச் சேர்க்கும் ஊடகமாகவும் இருந்தது. ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தில், டிமோலியர் பிரான்சில் நாடகங்களின் தந்தையராக கொண்டாடப் படுகின்றனர். இவர் தம் மரபில் வந்தவர் பெர்னார்ட் ஷா. தன் எழுத்துக்களின் வழியாக, நாடக உரையாடல்கள் வழியாக புதுமையான கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சென்ற அறிஞர் பெர்னார்ட் ஷா.

பெர்னார்ட் ஷா என்றும் GBS என்றும் அழைக்கப்படும் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, 1856 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். கல்வி முடிந்ததும், லண்டனின் பேபியன் சொசைட்டி எனப்படும் ஜனநாயக அமைப்பில் சார்பாக சிற்றிதழ்களை வெளிட்டார் ஷா. தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டார். உழைக்கும் மக்களை சுரண்டி வாழும் வாழ்வியல் அமைப்பை அவர் பெரிதும் வெறுத்தார். ஆணும் பெண்ணும் சமம் என்னும் கருத்தினை ஆதரித்தார். நிலங்கள் அரசின் உடைமையாக்கப்பட்ட போது, அதை ஆதரித்தார். தனி மனிதர் சொத்து சேர்த்து முதலாளி - தொழிலாளி பிரிவினைகள் வேரூன்றி தழைப்பதை அவர் எதிர்த்து நின்றார். ஒரு எழுத்தாளராக, நாடக ஆசிரியராக ஆசிரியராக மட்டுமன்றி, இசை விமர்சகராக, இலக்கிய விமர்சகராக பல்கலை வித்தகராக மிளிர்ந்தார் ஷா. இவரது இசை தொகுப்புகள், திறனாய்வுகள் Shaw's Music என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஷா 63 நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார். அவை எல்லாமே பொழுதுபோக்கு அமசங்களுடன், நகைச்சுவையைப் பிரதானமாக கொண்ட நாடகங்கள். இவற்றில் இழைந்தோடும் நகைச்சுவையில் சமுக சீர்த்திருத்த கருத்துக்கள் நிறைந்திருந்தன. இவர் எழுதிய ஐந்து நாவல்கள் 1879 ஆம் ஆண்டு முதல் 1900 ஆண்டு வரை பதிப்பிடப்பட்டன. அவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இவரது சிறுகதைகள் The black girl in search of God and some lesser tales என்ற தலைப்பில் நூலாக தொகுக்கப்பட்டன. 1925 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் பெர்னார்ட் ஷா. பின்னர் இவரது படைப்பான பிக்மேலியன் என்னும் திரைப்படத்துக்காக ஆஸ்கர் விருதையும் வென்றார். இவரது Back to Methuselah என்னும் பிரமாண்ட நாடகம் 5 பாகங்களைக் கொண்டதாகும். ஏதேன் தோட்டத்து ஆதாமின் காலமான கி.மு 4000 ஆம் ஆண்டு துவங்கி கி.பி 31,920 ஆம் ஆண்டு வரையில் நாடக காலத்தை நகர்த்தும் அற்புத நாடகம் இது.

ஷா மதத்தை மட்டுமல்ல, மதச் சின்னங்களையும் ஒதுக்கினார். “எல்லா உண்மைகளும் முதலில் தேவதூஷணங்களாகத்தான் வெளிப்படும்” என்றார் ஷா. அசைவம், மது அருந்துதல் போன்றவற்றை வெறுத்தார், அவர் அசைவம் உண்ணுதலை துறந்த போது, ‘25 ஆண்டுகளாக காட்டுமிராண்டி போல வாழ்ந்தேன்’ என்று குறிப்பிட்டார். ‘அசைவம் உண்ணுபவன் இறந்த விலங்குகளின் வாழும் கல்லறைகளாக’ வாழ்கிறான் என்றார். பழைமையான மருத்துவ முறைகளை அவர் ஒதுக்கினார். எல்லோருக்கும் பொருந்தும் ஒரே மருத்துவத்தை அவர் விரும்பினார்.

கட்டுக்கோப்பான வாழ்க்கை நெறியை கடைபிடிக்க வலியுறுத்தினார். ‘ஒருவன் சமுதாயத்துக்கு செய்யக்கூடிய நல்ல தொண்டு, நல்ல குடும்பத்தை உருவாக்குவது’ என்றார். ‘உன்னை நீ தூய்மையாகவும், ஒளி மிக்கவனாகவும் மாற்றிக் கொள். ஏனெனில், உன் வழியாகவே நீ உலகைக் காண்கிறாய்’ என்றார். தவறுகள் இல்லாத மனிதன் இல்லை. ஆனால் அவை கற்பிக்கும் பாடங்கள் தேவையானது. “தவறுகள் நிறைந்த வாழ்க்கை மதிப்பு மிக்கது. அது ஒன்றுமே செய்யாமல் இருப்பவனின் வாழ்க்கையை விட மேலானது” இது பெர்னார்ட் ஷாவின் வாக்கு.

பெர்னார்ட் ஷா சிறந்த கலைஞராக விளங்கினார். “கலைகள் இல்லாத உலகம், நிஜங்களின் கொடூரத்தில் வாழத் தகுதி இல்லாததாக மாறி விடும்” என்றும் ‘வாழ்க்கை என்பது உன்னைக் கண்டு பிடிப்பதல்ல, உன்னை உருவாக்குவது’ என்றும், ‘பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதை நீ அவர்களுக்கு செய்யாதே, அவர்களின் இரசனை வேறாக இருக்கலாம்’ என்றும் சொன்னவர் ஷா. ‘செயல் பட முடிகிறவன் செயல்படட்டும், முடியாதவன் கற்பிக்கட்டும்’ என்கிறார் அவர்.

அவரது நாடகங்கள் அங்கத சுவையுடன் விளங்கின. உண்மைகளை தோலுரித்துக் காட்டின. அவரது எழுத்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் மிகப்பெரிய இலக்கிய வரிசையில் வைத்துப் போற்றத்தகுந்தவை. “எல்லா மனிதர்களுக்கும் அவர்களுக்கான அரசாங்கம் உள்ளது. எல்லா அங்கத்தினருக்கும் அவரவர் தொகுதி உண்டு; முன் வரிசையில் இருக்கும் பேச்சாளர்கள் நினைத்தால் ஒரு தொகுதியை மேம்படுத்தலாம் அல்லது மோசமாக்கலாம். இவ்வாறு ஜனநாயகமானது முடிவுறா சுழலில் நகர்கிறது” என்று அவர் எள்ளி நகையாடினார். இரு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் பெர்னார்ட் ஷாவின் எழுத்தின் உக்கிரம் இன்றும் உணரப்படுகிறது.

You see things; and you say ‘Why?’

But I dream things that never were and I say, “Why not?”

George Bernard Shaw

- தொடரும்